தாய்மனம் – மு.வ.
சங்க இலக்கியக் காட்சிகள்
தாய்மனம்
- பேராசிரியர் முனைவர் மு.வரதராசனார்
காக்கை உட்கார்ந்தது! அந்தப் பனை
மரத்தில் ஒரு பனம்பழம் விழுந்தது, இந்தக்காட்சியைக் கண்டவன் ‘‘காக்கை
உட்காரப் பனம்பழம் விழுந்தது’’ என்றான்; அவன் சொன்னதைக் கேட்டவன், ‘‘அந்தக்
காக்கை உட்கார்ந்ததே பனம்பழம் விழுந்ததற்குக் காரணம்’’ என்று தவறாக
எண்ணவும் கூடும். இவ்வாறு எதிர்பாராத நிகழ்ச்சிகளைக் காரணகாரியமாக்கிக்
தொடர்புபடுத்திக் கூறக்கூடாது என்பதே பெரியோர் கருத்து தருக்க நூலார்
]காகதாலிய நியாயம்’ என்ற பெயரால் இதனைத் தெரிவிப்பர்.
காக்கை அந்த மரத்தில் எத்தனையோ முறை
உட்கார்ந்திருக்கின்றது. அப்போதெல்லாம் பனம்பழம் விழுந்ததுமில்லை. பனம்பழம்
பழுத்துப் பழுத்து எத்தனையோ முறை விழுந்திருக்கின்றது. அப்போதெல்லாம்
காக்கை அந்த மரத்தில் உட்கார்ந்ததுமில்லை. இவ்வாறு ஆராய்ந்துதான் காரணகாரிய
உண்மையைத் தெளிய வேண்டும்.
காக்கை வீட்டின் முற்றத்திலோ கூரையிலோ
உட்கார்ந்து எத்தனையோ முறை கரைந்தது உண்டு! அப்போதெல்லாம் விருந்தினர்
வந்து கொண்டிருக்கவுமில்லை. விருந்தினர் எத்தனையோ நாள் வீட்டிற்கு வந்தது
உண்டு; அந்த நாட்களிலெல்லாம் காக்கை தவறாமல் கரையவுமில்லை. ஆனால் சில
நாளில் காக்கை கரைந்தபின் விருந்தினர் வருதல் உண்டு. அதனால், காக்கை
கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது. இது
சாதாரண காரியத் தொடர்பற்ற நம்பிக்கை. ஆகையால், மூட நம்பிக்கை என்று
கூறப்படும்.
அறிவு கலங்காத நிலையில் ஆராய்ச்சிக்கு
இடம் உண்டு. அப்போது மூட நம்பிக்கைகள் வாழ்க்கையில் புகுவதே இல்லை. ஆனால்,
துன்பவெள்ளம் அலைந்து வந்து புரட்டும் வாழ்க்கையில் அறிவு கலங்காமலிருத்தல்
எல்லோராலும் இயலாது. பெரும்பாலோர் கவலை தொடங்கியபோதே கலங்கிவிடுவார்கள்.
அவர்களுக்கு அந்த நிலையில் ஆராய்ச்சி செய்யும் ஆற்றல் இல்லை. வெள்ளத்தில்
அகப்பட்டுக் கரைகாணாது தத்தளிக்கின்றவன் துரும்பையும் தோணி எனப்பற்றி
அமிழ்வதுபோல், கவலையால் மெலிந்தவர் மூட நம்பிக்கையைக் கடைப்பிடித்து ஆறுதல்
பெற முயல்வர். இவ்வாறு தான் மூட நம்பிக்கைகள் பொதுமக்களின் வாழ்க்கையில்
இடம்பெற்று வேரூன்றி விட்டன. மக்களின் வாழ்க்கையில் கவலையும் தொல்லையும்
குறைந்து அஞ்சாமையும் அறிவும் மிகுந்தால் தான் மூட நம்பிக்கைகள் ஒழியும்.
அதுவரையில், ஆயிரம் ஆயிரமாகப் புத்தர்களும், திருவள்ளுவர்களும்
பிறந்தாலும், கோடிக்கணக்கான சீர்திருத்த இயக்கங்கள் தலையெடுத்தாலும், மூட
நம்பிக்கைகள் அழியாமல் இருந்து வரும்.
மக்கள் வாழ்க்கையில் கவலையும்
துன்பமும் சங்ககாலம் முதல் இன்று வரையில் ஏறக்குறைய ஒரே வகையாக இருந்து
வருகின்றன. ஆகையால் இன்று உள்ள மூட நம்பிக்கைகளில் சில புதியனவாய்ப்
புகுந்திருப்பீனும், பல பழையனவே ஆகும். அவற்றுள் காக்கை கரைந்தால் விருந்து
வரும் என்பது ஒன்றாகும். இன்றும், காக்கை கரைந்தால், ‘‘யாரோ விருந்தாளி
வரப்போகிறார்’’ என்ற தமிழ் மக்கள் பேசிக்கொள்வது உண்டு. அன்றும் இவ்வழக்கம்
இருந்தது.
ஒரு குடும்பத்தில் உற்ற வயது
அடைந்த பெண் காதல் வாழ்க்கை தொடங்கிக் களவொழுக்கத்தில் சில காலம்
கழித்தாள். பெற்றோர் அறிந்தால் கடிவார்கள் என்ற அச்சமும், ஊரார் அறிந்தால்
அலர் தூற்றுவார்கள் என்ற கவலையும் விடாமல் வருத்தி வந்தன. இவற்றிற்கு ஒரு
முடிவு தேடித் தன் காதல் வாழ்வை வளம்பெறச் செய்து கொள்ள வழிகளை நாடினாள்.
அவள் முயற்சிக்கு ஆருயிர்த் தோழியாகப் பழகிய மற்றொருத்தி துணையாகவும்
இருந்தாள். ஊரார் அறிந்து தூற்றவும் தொடங்கினார்கள். பெற்றோர் அறிந்து
கடியவும் தொடங்கி விட்டார்கள். நிலைமை நெருக்கடியாகி விட்டது. தோழியின்
அறிவுரை கொண்டு துணிந்தாள்; துணிந்தவாறு நள்ளிரவில் வீட்டை விட்டுக்
காதலனோடு வேற்றூர்க்குச் செல்லப் புறப்பட்டாள்.
பொழுது விடிந்ததும் அருமை மகளைக்
காணாமல் பெற்றோர் கலங்கினர்; அலைந்தனர்; அங்கும் மிங்கும் தேடினர். மெல்ல
மெல்லத் தோழி வாயிலாகச் சில உண்மைகள் அறிந்தனர்; வழியில் செல்லும்போது
அவளையும், அவனையும் கண்டதாக கூறிய சிலருடைய சொற்களால் சிறிது அமைதியும்
பெற்றனர்.
ஆயினும், பெற்ற மனம் பித்து அல்லவா? தந்தையை விடத் தாய் நெக்குருகும் நெஞ்சினள் அல்லவா? கவலையால்
கரைந்து வாடி வீட்டினுள்ளே ஒரு தூணைச் சார்ந்திருந்தாள் போலும். அப்போது
அங்கே காக்கை ஒன்று வந்து ‘‘கா கா கா’’ எனக் கரைந்தது கவலை வெள்ளத்துள்
மூழ்கியிருந்த அவள் நெஞ்சம் மலர்ந்தது. ‘‘அருமை மகள் அந்தக் காட்டு
வழியில் எவ்வாறு நடந்து செல்ல முடியும்? அவளுடைய அருமை அறிந்து பசியும்
நீர் வேட்கையும் தீர்ப்பவர் யார்? அவளுடைய மென்மை உணர்ந்து அவளைப்
பாராட்டிப் போற்றுபவர் யார்? அந்தோ! மகளே’’ என்று எண்ணி நெகிழ்ந்து உருகிய
அவள் நெஞ்சம் காக்கையின் குரலைக் கேட்ட அளவில் ஒருவகை ஆறுதல் பெற்றது. ஏன்?
காக்கைக் கரைந்தால் விருந்து வரும் அல்லவா? அந்த விருந்தினர் யார்? தன்
மகளை அழைத்துச் சென்ற மருமகனே வந்தாலும் வரலாம் அல்லவா? இந்த எண்ணமே அவள்
துயரத்திற் அருமருந்தாயிற்று.
தன் கவலை தீர்க்கும் மருந்து இத்தகைய
அருமருந்து அந்தக் காக்கையின் குரலில் இருத்தலை அவள் உணர்ந்தாள். அந்தக்
காக்கையை அன்போடு நோக்கினாள். நம் வாழ்வுக்கு நல்லுதவி ஆற்றும் ஒருவரை நாம்
அன்போடு பார்க்கும் போது அவரிடம் உள்ள குற்றங்குறையெல்லாம் மறைந்து அழகும்
அருங்குணமுமே மேம்பட்டுத் தோன்றும். இது இயற்கை. அந்தத் தாயும் காக்கையை
அன்போடு ஆவலோடு பார்த்தபோது, அதன் அழகு தெளிவாகப் புலப்பட்டது. காக்கையின்
தூவி – சிறகு – அவள் கண்ணிற்கு மாசற்ற தூவியாக விளங்கியது.
‘‘மறுவில் தூவிச் சிறுகருங்காக்கை!’’ என்று அந்தக் காக்கையை விளித்தாள்.
‘‘காக்கையே! உனக்கு நல்ல ஊன் கலந்த
உணவு தருவேன் எனக்கு நீ ஒரு நல்லுதவி செய்ய வேண்டும். அதாவது; என் மகள் தன்
காதலனோடு திரும்பி இந்த வீட்டிற்கு வருமாறு நீ கரைய வேண்டும். நீ
கரைந்தால் விருந்தினர் வருவார் அல்லவா? அவர்கள் வருமாறு நீ கரைய வேண்டும்’’
என்று இதைத்தான் அந்தக் காக்கைக்குச் சொல்லத் தொடங்கினாள்.
ஆனால் அவள் கண் அந்தக் காக்கையின்
அழகிய தூவியைக் கண்டது போலவே அவள் மனம் அதன் அருங்குணத்தையும் எண்ணியது.
காக்கையின் அருங்குணம் என்ன? அது தனியே உண்ணாது உறவு கலந்தே உண்ணும். ஒரு
சிறு முறுக்குத் துண்டைக் கண்டாலும், ‘‘கா கா கா’’ என்று தன்
இனத்தையெல்லாம் கூவியழைத்தே உண்ணும். “காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்”
என்றும் அறத்தை அளந்து கண்டு அறநூல் இயற்றிய திருவள்ளுவரும், உண்மையை
உள்ளவாறு உணர்ந்து பாடிய தாயுமானவரும் தெளியுமாறு வாழும் வாழ்க்கையல்லா
காக்கையின் வாழ்க்கை!
இதனை எண்ணிய தாய் அந்த ஒரு காக்கைக்கு
மட்டும் உணவு தருவது கைம்மாறான உதவியாகாது என உணர்ந்தாள். தன் கவலை
தீர்க்கும் காக்கைக்குக் கைம்மாறு செய்வதானால், அதன் சுற்றமெல்லாம் கூவி
அழைத்து உண்ணுமாறு நிறையத் தர வேண்டும் என எண்ணினாள்.
‘‘மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடைய மரபின்நின் கிளையோடு ஆர…
தருகுவென்…’’
என்றாள்.
விருந்தாளி வீட்டிற்கு வந்தால் நாம்
விரும்பும் உணவை அவர்க்கு உதவுவதால் பயன் இல்லை. ஆயின், அவர் விரும்பும்
உணவையே அவர் உண்ணுமாறு செய்ய வேண்டும். அதனை நன்கு உணர்ந்தவள் அந்தத் தாய்.
பலருக்கு விருந்து அளித்து, விருந்தோம்பும் நல்லறம் நடத்திப் பண்பட்டவள்.
ஆதலின், காக்கை விரும்பும் உணவை அறிந்து அதனையே தருவதாகக் கூறினாள். ஆனால்
அதே நிலையில், காக்கையை ஒரு சிறு பறவையாக நினைத்து இழிவாக நடத்தவும் அவள்
துணியவில்லை. தன் உற்றாரும் மற்றோரும் செய்ய முடியாத அரிய உதவியை அந்தக்
காக்கை செய்யக்கூடும் என்று நம்பினாள் அல்லவா? அவர்களால் தன் மகளை மீட்டுத்
தர முடியாதபோது அந்தக் காக்கையின் குரல் அவர்களை வீட்டிற்கு வருவிப்பதாக
நம்பினாள் அல்லவா? ஆகையால், மக்களுள் சிறந்தவர் ஒருவர் விருந்தினராக
வீட்டிற்குள் வந்தால் அவர்க்குப் பொன் தட்டில் & வேலைப்பாடு அமைந்த
அழகிய தட்டில் உணவு அமைப்பது இயல்பு அல்லவா? அந்த முறைப்படி காக்கையை ஒரு
பறவை எனக் கருதிவிடாமல் – ஆனால் அதே நிலையில் அதன் விருப்பமான உணவை
மறக்காமல் வேலைப்பாடு அமைந்த அழகிய பொன்தட்டில் ஊண் உணவு தருவதாகக்
கூறினாள்.
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தின் தருகுவென் மாதோ
என்றாள்.
இவ்வளவும் கூறியபின் தன் வேண்டுகோளைத்
தெரிவிக்க வேண்டும் அல்லவா? தன் அருமை மகள் திரும்பி வரவேண்டும் என்பதே
அவள் கவலை. ஆனால், காக்கை தனியே உண்ணாமல் இனத்தைக் கூவி அழைத்தே உண்ணும்
என்று அதன் அரும்பண்பை உணர்ந்தவள், தன் மகளின் அரும்பண்பை மறந்து விடுவாளோ?
முன்னமே அறிந்துள்ளவை கொண்டு, அன்று காலை முதல் கேட்டறிந்தவை கொண்டும் தன்
மகள் உண்மையான காதல் வாழ்க்கையில் ஈடுபட்டு வெற்றி பெற்ற அனுபவம் உடையவள் அல்லவா? அந்த அனுபவங்கொண்டுதான்
அவள் தன் மகளுடைய உள்ளத்தை அளந்து பார்த்துத் தெளிந்தாள். தன் மகள்
இன்னும் மகளாகவே இராமல் மற்றவனுக்குத் துணைவியாகிவிட்டதை -காதலியாகிவிட்டதை
அறிந்து கொண்டதால், அவள் தனியே வரமாட்டாள் எனத் தெளிந்தாள். காதலனை
விட்டுத் தனியே அவளைப் பிரிக்க முடியாது என உறுதியாக உணர்ந்தாள்.
‘………. காளையொடு
அஞ்சில் ஓதியை வரக் கரைந் தீமே’’
‘‘அந்தக் காளையோடு திரும்பி வரட்டும்;
நாங்கள் அவளோடு அவனையும், வரவேற்போம். காக்கையே! இருவரும் வருமாறு கரைக’’
என்றாள். அந்தக் காதலனை – தன் மருமகனை – காளை என்று குறிப்பிட்ட போது,
அவனைப் பற்றிக் கேட்டறிந்த வீரக் குறிப்பையும் கூறினாள். அவன் வீரமும்,
மானமும் குறைந்தவனாக இருந்திருப்பின் தாழ்ந்து பணிந்து பெண்
வேண்டியிருப்பான் அல்லவா? அவ்வாறு பணியாமல் உடனழைத்துச் சென்றதே அவனுடைய
ஆண்மைச் சிறப்பாக அவளுக்குத் தோன்றியது. அதனால் அவனை ‘‘வெஞ்சின விறல்வேல்
காளை’’ என்று பாராட்டினாள். அவள் பெருமிதத்தோடு வேல் ஏந்திக் காட்டுவழியே
செல்வதாக வழியில் கண்டவர் கூறக் கேட்டனள் போலும்!
இவ்வளவும் காக்கைக்குக் கூறியவள்
‘‘காக்கையே! கரைவாய்’’ என்று ஏவாமல், ‘‘கரைக’’ என்று கூறும் எல்லையையும்
கடந்து, ‘‘கரைந்தீமே’’ (கரைந்தருள்வாய்) என்று வேண்டினாள்.
இது ஐங்குறு நூற்றில் ஓதலாந்தையார் பாடியதாக உள்ள ஒரு பழம்பாட்டு ஆகும்.
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை!
அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தின் கருகுவென் மாதோ;
வெஞ்சின விறல்வேல் காளையொடு
அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே!
(ஐங்குறுநூறு – 391)
(மறுஇல் – மாசற்ற, தூவி – சிறகு, கிளை – சுற்றும், நிணம் – கொழுப்பு,
வல்சி -உணவு, விறல் – வெற்றி. அம்சின் ஓதி – அழகிய சிலவாக வகுக்கப்பட்ட
கூந்தலையுடையவள்.)
- குறள்நெறி மாசி 18, தி.ஆ. 1995 / 01.03.1964
Comments
Post a Comment