தொல்காப்பிய விளக்கம் – 10 : முனைவர் சி.இலக்குவனார்
தொல்காப்பிய விளக்கம் – 10 (எழுத்ததிகாரம்)
தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
ட,ர, எனும் இவை மொழிமுதல் எழுத்துக்களாக
வருதல் இல்லை. ‘ன்’க்குப் பிறகு ‘ட’வும் ‘ள்’க்குப் பின்னர் ‘ர’வும் வருதல்
இல்லை. ஆனால் ‘வல்லெழுத்து இயையின் டகாரம் ஆகும்’ எனும் இடத்திலும்
‘அவற்றுள், ரகார ழகாரம் குற்றொற்று ஆகும்’ எனும் இடத்திலும் விதிக்கு மாறாக
வந்துள்ளன. இந்நூற்பாக்களில், ட, ர, என்பனவற்றின் இயல்பு
விளக்கப்படுகின்றது. ஆதலின் குற்றம் இன்று.
இந்நூற்பாவில் வந்துள்ள ‘மானம்’ எனும்
தமிழ்ச் சொல்லை ‘ஆனம்’ எனும் வடசொல்லாகக் கூறுவர் சிலர். அவ்வாறு கூறுவது
தவறு, ‘மானம்’ எனும் தமிழ்ச் சொல்லுக்குப் பெருமை, சிறப்பு, குற்றம் எனும்
பல பொருள்கள் உள.
‘‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.’’(969)
எனும் குறட்பாவில் வரும் ‘மானம்’ எனும் சொல்லுக்குக் ‘குற்றம்’ எனும்
பொருளே மிகப் பொருந்துவதாக உளது. ‘மானம் வரின்’ என்பதற்குப் ‘பெருமை
கெடவரின்’ என்று பொருள் கூறுவதினும், ‘குற்றம் வரின்’ என்று கூறுதலே
இயல்பாக உள்ளது.
48. ய. ர, ழ என்னும் மூன்றும் முன்னொற்றக்
க,ச, த, ப, ங,ஞ,ந,ம ஈரொற்றாகும்.
ய, ர, ழ என்னும் மூன்றும் = ய, ர, ழ என்று சொல்லப்படும் மூன்று
மெய்களும், முன் ஒற்ற = குறிற்கீழும் நெடிற்கீழும் (யாதானும் ஒன்று) முன்னே
ஒற்றாய் நிற்க, (அவற்றின் பின்னர்) கசதப ஙஞநம = க,ச,த, ப என்பவற்றுள்
ஒன்றோ, ஙஞநம என்பவற்றுள் ஒன்றோ ஒற்றாய்வர, ஈர் ஒற்றாகும் = அவை ஈர் ஒற்று
உடன் நிலையாகும்.
காட்டு: வேய்க்குறை, வேய்ங்குறை,: ‘ய்’ எனும் ஒற்றுக்குப் பின்னர் ‘க்’ ‘ங்’ வந்து ஈர் ஒற்றாய் (ய்க்ய்ங்) நிற்கின்றன.
49. அவற்றுள்
ரகார ழகாரம் குற்றொற்று ஆகா.
அவற்றுள் = மேற்கூறப்பட்ட ய,ர,ழ எனும் மூன்றனுள்ளும், ரகார ழகாரம், = ர,
ழ எனும், இரண்டும் குற்று ஒற்றாகா = குறில் எழுத்தின் பின்னர் மெய்யாக
வாரா.
தார், தாழ் என வருமேயன்றி தர், தழ் என வருதலில்லை.
50. குறுமையும் நெடுமையும் அளபிற் கோடலின்
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல.
குறுமையும் = குறில் தன்மையும், நெடுமையும் = நெடில் தன்மையும், அளவிற்
கோடலின் = எழுத்துக்கள் பெற்றுவரும் ஒலி அளவால் கொள்ளுதலின், தொடர்மொழி
எல்லாம் = இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களால் ஆகி வரும் சொற்கள் எல்லாம்,
நெட்டெழுத்து இயல = நெட்டெழுத்தின் தன்மையை உடையனவாகக் கருதப்படும்.
புகர், புகழ் எனும் சொற்களுள் ர், ழ் வந்துள்ளன. இரண்டு
குற்றெழுத்துக்களின் பின்னர் இவை வந்துளவேனும், நெடிற்கீழ் வந்துள்ளதாகக்
கருதப்பட்டு இலக்கண முடிபுகள் கொள்ளப்படும்.
51. செய்யுள் இறுதிப் போலி மொழி வயின்
னகார மகாரம் ஈரொற்று ஆகும்.
செய்யுள் இறுதி = செய்யுளின் இறுதியில் வரும், போலி மொழிவயின் = போலும்
எனும் சொல்லிடத்து, னகாரம் மகாரம் = ன், ம் எனும் இரண்டும் ஈரொற்று ஆகும் =
இரண்டு மெய்களும் சேர்ந்து வரும் நிலையினது ஆகும்.
காட்டு; போன்ம்; ‘போலும்’ என்பது
‘போன்ம்’ என வந்துள்ளது.
52. னகாரை முன்னர் மகாரம் குறுகும்.
மேலே கூறப்பட்டுள்ளவாறு, னகாரை முன்னர் = னகரத்து முன் வந்துள்ள, மகாரம்
= ம, குறுகும் = தனக்குள்ள அரை மாத்திரையில் குறைந்து வரும். இங்கு மகரம்
(ம்) தனக்குள்ள மாத்திரையில் குறைந்து வரும் எனக் கூறினாரேனும், சார்பு
எழுத்து என்று கூறினாரிலர். ஆனால் தொல்காப்பியர்க்குப் பின்னர் வந்த
பவணந்தியார் தமது நன்னூலில் ஓசை குறைந்து வரும் இம்மகரத்தைச் சார்பு
எழுத்து எனக் கூறியுள்ளார்.
பவணந்தியார் கூற்றுத் தவறுடைத்தாகும். சார்ந்து வரும் இயல்பினையுடையனவே
சார்பு எழுத்து எனப்படும். இம்மகரம் ஓசையில் குறைந்து வரினும் பிற
எழுத்தைச் சார்ந்து வந்திலது. ஆகவே சார்பு எழுத்து எனப்படாது.
53. மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும்,
எழுத்தியல் திரியா என்மனார் புலவர்.
மொழிப்படுத்து = எழுத்துகளைச் சொற்களில் சேர்த்து, இசைப்பினும்=
சொல்லினும், தெரிந்து = எழுத்துக்களைத் தனித்தனியே எடுத்து, இசைப்பினும் =
சொல்லினும், எழுத்தியல் = எழுத்தின் தன்மையிலிருந்து திரியா = வேறுபடா,
என்மனார் புலவர் = என்று கூறுவர் புலவர்.
ஆங்கிலத்தில் எழுத்தினைத் தனியாகச் சொல்லும்போது ஒருவகையாகவும்
சொற்களில் பயிலும்போது ஒருவகையாகவும் சில எழுத்துக்களை ஒலிக்கின்றோம்.
எடுத்துக்காட்டாக C,F,W,Z போன்ற எழுத்துக்களை நோக்குக. தமிழில் இந்நிலை
கிடையாது. தனியாகக் கூறும்போது என்ன ஒலியினைப் பெறுகின்றதோ அதே ஒலியைத்தான்
சொற்களில் பயிலும்போதும் பெற்றுள்ளது. சில இடங்களில் வல்லினம்
மெல்லினத்தைச் சாரும் போதும் ‘ப’ ஆய்தத்திற்குப் பின்னர் வரும்போதும்
எழுத்தொலிகளில் சிறிது வேறுபடும். அங்ஙனம் வேறுபட்டாலும் எழுத்தின் இயல்பு
வேறுபடாது.
‘க’ என்பது இங்கு என்ற சொல்லில் ‘G’ ஒலியும், ‘அக்கா’ என்ற சொல்லில் ‘K’
ஒலியும், ‘அகம்’ என்ற சொல்லில் ‘H’ ஒலியும் பெற்றும், அது வல்லினம் என்று
தான் அழைக்கப்படுமே தவிர பிறவகையாக அழைக்கப்படாது.
(தொடரும்)
குறள்நெறி வைகாசி 19, தி.ஆ.1995 / 01.06.1964
Comments
Post a Comment