வள்ளுவரும் அரசியலும் 4 – முனைவர் பா.நடராசன்

வள்ளுவரும் அரசியலும் 4 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,

B__NATARAsAN01 
முதலிலே அவனுக்கு, அரசுக்கு வேண்டிய அங்கங்களான படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவை ஆறும். நன்றாக அமைதல் வேண்டும். ஈகை வேண்டும்; அறிவு வேண்டும்; ஊக்கம் வேண்டும்; செயல்களில் விரைவுடைமை வேண்டும்; தூங்காமை ஆகாது; துணிவு வேண்டும்; கல்வி வேண்டும்; அறன் வழி நிற்றல் வேண்டும். அறனல்லவற்றைக் கடியும் வீரம் வேண்டும். காட்சிக்கெளியனாதல் வேண்டும். கடுஞ்சொல் அல்லாதவனாதல் வேண்டும்; இன்சொல் வழங்கி ஈத்தளிக்கும் இயல்பினனாதல் வேண்டும், செங்கோல் வழுவாத நெறியுடையவனாதல் வேண்டும். தன்பால் குற்றங்களைக் கண்டு கடிந்தார் மேல் வஞ்சம் கொள்ளாது பொறுக்கும் பண்புடையனாதல் வேண்டும். கொடையிற் சிறந்தவனாய், யாவர்க்கும் முகமலர்ந்து அன்பு செய்கின்றனவனாய், நெறியில் தவறாதவனாய் ஏழை மக்களுக்குக் கொழு கொம்பாய் அமைகின்றவனாய் இருத்தல் வேண்டும்.
இங்ஙனம் நல்லாட்சிக்கு வேண்டும் நற்பண்புகளையெல்லாம் முதல் அதிகாரமான இறைமாட்சியிலேயே தொகுத்துக் கூறிவிட்டுப் பின்னே ஒவ்வொன்றையும் விளக்கப் புகுகின்றார்.  ஆறு அங்கங்களின் இயல்புகளை விரிக்கத் தனியாக அங்க இயலை வகுத்துக் கொள்கிறார். அவற்றுள் அடங்காதவையாகிய சில இயல்புகளுக்காக ஒழிபியலை வகுத்துக் கொள்கிறார். ஆனால் அவற்றைச் சொல்லுமுன்னே அரசியல் தலைவனுக்கு வேண்டும் விரிவான பண்புகளை உடனேயே சொல்லிக் கொள்கிறார். தொகுத்துரைத்த இறை மாட்சியின் பின்வரும் இருபத்து நான்கு அதிகாரங்களும் தலைவனுக்கு இன்றியமையாத பண்புகளை விரித்துரைப்பனவாகவே இருக்கின்றன. தொகுத்துரைக்கும் வரையில் செய்யுள் நெறிக்கேற்ப முறை பிறழ வைத்ததைப் பின்னே விரித்துரைக்கையில் நிரல்பட வைத்துப் பேசுகிறார்.
கல்வி
அவ்வாறு பேசுங்கால் முதலில் கல்வியை எடுத்தோதுகின்றார். ஏனெனில் நல்ல தலைவனாதற்கு எண்ணும் எழுத்தும் கண் போன்றனவாகும். கல்வியில்லாத அரசியல் தலைவன் முகத்திலே இரண்டு புண்ணுடையவனேயாவன். அவன் கல்லாதவனாயின் எல்லாம் இருந்தும் இல்லாதவனே; கல்வியே அவனுக்கு அழியாத்திரு; அறிவு ஊற்று; புகழ் விரியும் மையம்; இன்பம் பரப்பும் எழில் ஞாயிறு.
கல்லாமை
கல்லாத அரசியல் தலைவன் அரங்கின்றி வட்டாடுகின்றான்; குறிக்கோளில்லாது செயல்படுகின்றான். அவன் நல்லார் அவையில் பேச விரும்புவது பயனற்ற முயற்சி; அவன் சொற்கள் வெற்று வேட்டாக அமையும்; நகைப்புக்கு இடம்; அதைவிடச் சொல்லாதிருப்பதே மேல்; அவன் கருத்து ஒரு கால் நன்றாக அமையினுங்கூட அறிவுடையார் அதனைக் கொள்ளார். அவர் முன்னே அவன் சோர்ந்து விடுவான். அவன் மண்பாவையாகவே, விலங்குக்கு ஒப்பாகவே, கீழ் மகனாகவே கருதப்படுவான். ஏதோ இருக்கிறான் என்பதே அல்லாது மற்று அவன் பூமிக்கு நச்சுப்பயிர் போலவே ஆவான்.
கேள்வி
அவ்வாறு யாதானும் ஊழ் வயத்தால், அவன் கல்வி பெறத்தவறிவிட்டானாயினும் கேள்வியிலாவது அரசியல் தலைவன் சிறந்துபட முயலல் வேண்டும். அங்ஙனமாயின் அது தளர்வெய்தியக்கால், தவறுங்கால், துணை நிற்கும் ஊன்று கோல் போலாயினும் உதவலாகும். சொல்லிலே வணக்கம் பிறக்கும்; செயலிலே பெருமை உண்டாகும்; பேதைமையால் பிதற்றுதல் செய்யான்.
அறிவு

இந்தக் கல்வி கேள்விகளோடு நல்லறிவு படைத்தவனாகவும் அரசியல் தலைவன் இருத்தல் வேண்டும். அறிவு என்பது என்ன? அதற்கு ஒரு பொருளல்ல வள்ளுவர் கொள்வது.
முதலில் அறத்தில் நிற்பது அறிவு என்கின்றார். ‘நன்றின்பால் உய்ப்பதறிவு’, பின்னே ஆராயுந்திறன் அறிவு எனப்படும். எப்பொருள்யார் யார் வாய்க்கேட்பினும் அதன் மெய்ப் பொருளை ஆய்ந்து காணும் ஆற்றல் அறிவு. எளிய முறையில் தான் சொல்லி, பிறரது அரிய கருத்துக்களை அறியும் ஆற்றல் அறிவாகும். உயர்ந்தோர் கருத்தைத் தழுவி நடப்பது அறிவு. எதிரதாக வருவதைத் தெரியும் ஆற்றல் அறிவு. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதும், அஞ்சவேண்டாதவற்றுக்கு அஞ்சாதிருத்தலும் அறிவு.

குற்றம் கடிதல்

அடுத்து, சில குற்றங்கள் தன்னை அடையாது, அரசியல், தலைவன் கற்றுக் கொள்ள வேண்டும். அதிகாரத்தால் செருக்கு எழுவது இயல்பு. அதை முதலில் விலக்கிக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறே சினமும் சிறுமை எனப்படும் அளவிறந்த காமமும், வேண்டும் வழிப்பொருள் வழங்காத இவறலும் குற்றமேயாகும். எப்படியும் கருதியது முடித்துவிடல் என்ற பிடிவாதம் ஒரு குற்றம். எப்பொருள் மாட்டும் கட்டு மீறிய விருப்பம் பிறிதொரு குற்றமாகும். தன் குற்றம் காணாது பிறர் குற்றமே காணுதல் பெருங்குற்றம் தன்னையே வியந்து கொள்ளுதலும் பயனற்ற குற்றமாகும்.
பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை
திருவள்ளுவர்01
ஆட்சி அதிகாரம், பருகப் பருகத் தலைக்கேறும் கள் போன்றது. எனவே அரசியல் தலைவனை இடித்துரைப்பார் வேண்டும். அங்ஙனம் இடித்துரைக்கும் பெரியாரை அவனும் விரும்பித் துணைக் கொள்ளல் வேண்டும். நல்லோர் துணைக் கொள்வதோடு, தன்னைப் புகழ்ந்து இச்சகம் பேசிக் சூழ விரும்பும் சிறியோர் இனத்தை ஒதுக்கவும் வேண்டும்.
தெரிந்து செயல் வகை
பின்னே ஆராய்ந்து செயல்படல் முக்கியமாகும். முற்றவெண்ணி வரும் விளைவுகளை நன்கு அளந்து பின்னர் எதனையும் தொடங்கல் வேண்டும். தெளிவு இல்லாத வினைகளில் ஈடுபடலாகாது. செய்ய வேண்டியனவற்றைச் செய்தே முடிக்கவும் செய்யத் தகாதனவற்றைச் செய்யாது விடவும் வேண்டிய உறுதிப்பாடு இருத்தல் வேண்டும். அவரவர் பண்பறிந்து அதற்கேற்பச் செயல்படல் வேண்டும். உலகம் ஒப்புகின்ற முறையில் செயல்களை வகுத்தல் வேண்டும்.
வலியறிதல்
தன் வலிமையை அறிந்து கொண்டு அதற்கேற்பவே செயல்பட வேண்டும். அதிகாரம் கையிலுள்ளதென எண்ணி அதிகப்படச் சென்றுவிடலாகாது.
காலம் அறிதல்

காலமறிந்து செயல்பட வேண்டும். தற்காலமாகப் பின் வாங்குவது வெற்றிக்குத் துணை புரியுமானால், பின் வாங்குவதற்கு அஞ்சலாகாது. காலம் வரும்வரை பகைவனைச் சுமக்க வேண்டுமானாலும் சுமக்கத் தான் வேண்டும்.
இடனறிதல்

அதுபோலவே இடனறிந்து செயல்பட வேண்டும். ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு இடத்தில் வலிமை சிறப்பாக உண்டு. யானைக்கு நிலத்தில் வலிமை; முதலைக்கு நீரில் வலிமை. இவற்றைத் தெரிந்து கொண்டு அரசியல் தலைவன் செயலில் இறங்க வேண்டும்.
தெரிந்து தெளிதல்
தக்காரை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்து கொள்ள வேண்டும். குற்றம் செய்யாதவரில்லை. எனவே குணமும் குற்றமும் சீர்தூக்கி, குணமிக்காரைத் துணையாகக் கொள்ள வேண்டும்; தெளிந்து தேர்ந்து கொள்ளல் வேண்டும், தேர்ந்தபின் ஐயுறவு கொள்ளலும் ஆகாது.
(தொடரும்)
-
-          குறள்நெறி பங்குனி 2, தி.ஆ.1995 / 15.03.1964

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்