தமிழ்ச் செல்வங்கள்: அம்மா- 1

தமிழ்ச் செல்வங்கள்: அம்மா- 1







குழந்தைகளுக்குப் "பிறந்த நாள்' கொண்டாடுகிறோம். "பெயர்சூட்டு நாள்' என ஒரு விழாக் கொண்டாடுகிறோம். இவ்விரண்டு விழாக்களையும், குழந்தை பிறந்த சில நாள்களிலேயே, தன் தாய்க்குச் சூட்டிக் கொண்டாடிவிடுகிறது குழந்தை!
பேசாக் குழந்தையா? பிறந்த சில நாள்களிலேயா? வியப்பின் மேல் வியப்பாக இருக்கிறது! ஆனால், உண்மைதான் என்பதைக் குழந்தைகள், தொடர் விழாவாகக் கொண்டாடிக்கொண்டே உள்ளன! நாம்தான் கண்டு கொள்ளவில்லை.
குழந்தை தாயிடம் பால் பருகுகின்றது; பசித்த குழந்தை, பசி தாங்காக் குழந்தை, "அம்' "அம்' என்று பால் பருகுகின்றது. பால் பருகுங்கால் எழும் நுண்ணொலி "அம், அம்' என்று ஒலிப்பதை நாம் இன்றும் கேட்கலாம்!
"அம்மம்' பால் ஆயது; பால் தருபவர் "அம்மா' ஆனார்! "அம்' இயல்பாக வாய் மூடியவுடன் உண்டாகும் ஒலி. "மா' மூடிய வாயை அகலத் திறந்ததும் உண்டாகிய ஒலி. இரண்டையும் இணைக்க "அம்மா' என்னும் இயற்கைச் சொல் உண்டாகி விடுகின்றது.
ஆழ்வார்களுள் ஒருவர் பெரியாழ்வார்! அவர் கண்ணனை "அம்மம்' உண்ண அழைக்கிறார்.

""அரவணையாய்! ஆயர் ஏறே!
அம்மம் உண்ணத் துயிலெழாயே''
(நாலா.128)

அன்னை கண்ணனுக்கு ""இன்னமுது அன்றி, அம்மந் தாரேன்'' என்பதாகப் பத்துப்பாடல் பாடுகிறார் (233).
"அம் அம்' என்னும் ஒலிக்குறிப்பு பாலுக்கும், பாலூட்டும் தாய்க்கும் ஆகிய அளவில் நின்றதா? "அம்மு' எனவும் அதற்குப் பெயராயிற்று. அம், அம்மா என விளியாயது, "அம்மை' எனப் பெயராகியது. அம்மா என்பது அம்மோ, அம்மே, எம்மோ, எம்மே, எம்மோய் என்றும், அம்மம்மா, அம்மம்ம, அம்மம்மே, அம்மம்மோ, அம்மானாய், அம்மாடியோ என்றும் வேறு பலவாறும் விரிந்தது.
அம்மையைப் பெற்றவளை அம்மாத்தா, அம்மாயி, அம்மாச்சி என வழங்க உதவியது. அம்மை உடன்பிறந்தார் அம்மான், அம்மானார் எனப்பட்டார். அது பொருளால் விரிவுற்றதோ பெரிது. அடுத்துக் காணலாம்.
-தொடர்வோம்..

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்