சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்

சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்












 உலகத்தில் உள்ள கண்டங்களும் அங்குள்ள மக்களும் குமரிக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்ததைக் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கூற்று மெய்ப்பிக்கிறது.
சீனாவில் கன்பூசியஸ் தொகுத்த 306 பாடல்களைக்கொண்ட "பழஞ்சீனக் கவித்தொகை' நூல்தான் முதல் நூலாகும். இத்தொகுப்பில் உள்ள பல பாடல்கள் சங்க மரபைப் பின்பற்றி அமைந்துள்ளன. அவற்றில் இரு பாடல்களைக்
காண்போம்.

""எந்தன் தலைவன் பெரும்தீரன்
நாட்டின் படையில் ஒருவீரன்
எந்தன் தலைவன் வேலேந்தி
மன்னர் ரதத்தின் முன்தேரில்
தலைவன் கிழக்கே போனது முதலே
தலையும் புதரென ஆகிப்போனேன்.
கழுநீர் இல்லா நிலையா? இல்லை
வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை''
(பயணி, வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை, ப.80)

இப்பழஞ்சீனக் கவிதை தனித்திருக்கும் மனைவியைப் பற்றியது. கணவன் போர்க்களம் சென்றுவிட்டதால், மனைவி தன் கூந்தலுக்கு எண்ணெய் தடவாமலும், நீரில் அலசாமலும், பூச்சூடாமலும் தலை புதர்போல் காட்சியளிப்பதாகக் குறிப்பிடுகிறது. இதைப்போன்று வையாவிக் கோப்பெரும்பேகனைப் பிரிந்து தனித்திருந்த அவனுடைய மனைவி கண்ணகியின் நிலைமையை, புறநானூற்றுப் பாடல் (147) வழி அறிகிறோம். புறநூனூற்றுப் பாடலும் பழஞ்சீனக் கவிதையும் ஒத்த சூழலையும் உணர்வையும் பிரதிபலிக்கின்றன.

""சென்றான் தலைவன் பணி நிமித்தம்
திரும்பும் நேரமோ தெரியவில்லையே
கோழிகள் கூட்டுக்கு மீள்கின்றன
பொழுது சாய்ந்துவிட்டது
ஆடுமாடுகள் இறங்கி வருகின்றன
அவன் நினைவைத் தவிர்க்க முடியுமோ?
...... ...... ...... ...... ...... ... ... ...
நாட்கள் இல்லை, மாதங்கள் இல்லை
மீண்டும் அவனைச் சந்திப்பதென்றோ?''
(பயணி, வாரி.பா. ப.84)

இப்பாடல் நற்றிணை (69) சேகம்பூதனாரின் ""பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றி'' எனும் தலைவி கூற்றுப் பாடலையொத்திருக்கிறது. காலையில் கதிரவன் தன் கதிரைப் பரப்பி, மாலையில் மறைகிறது. அப்பொழுது பறவைகள் தம் கூட்டை அடைகின்றன. காட்டில் ஆண் மான், பெண் மானைத் தழுவி நிற்கிறது. முல்லை மலர் பூத்துக் குலுங்குகிறது. காந்தள் புதரில் விளக்குப் போல் மலர்ந்திருக்கிறது. காளையும், பசுவும் ஒன்றோடு ஒன்று தழுவி, எழுந்த மணியோசை கோவலர் இசைக்கும் குழலோசையோடு இழைந்து குழைந்தது. இத்தகைய சூழல் நம் தலைவர் சென்ற ஊரிலும் ஏற்பட்டிருந்தால், தலைவன் கண்டிப்பாகத் திரும்பி வந்திருப்பார். ஆனால், மேற்குறிப்பிட்ட கார்கால நிகழ்வுகள் அங்கு ஏற்படவில்லை போலும் என்கிறாள் தலைவி.
சங்க இலக்கியக் கருத்துகள், பல பழஞ்சீனக் கவிதைகளில் இடம்பெற்றிருப்பது தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை மெய்ப்பிக்கிறது.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue