நற்றிணையில் நட்புநெறி!

நற்றிணையில் நட்புநெறி!

சங்க காலத்தில் கணவன் - மனைவிக்கிடையே விளங்கிய உயர்வான காதலும் நட்பு எனச் சிறப்பித்துச் சொல்லப்பட்டது.

""உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு'' (1122)

என வரும் இக்குறள் காதலை "நட்பு' என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் காதலின் முதிர்ச்சியாக, காதலைவிட ஒருபடி உயர்ந்ததாக நட்பு விளங்குகிறது என்பதை அறியமுடிகிறது.
நற்றிணைப் பாடல் ஒன்று, ஒரு நம்பியும், ஒரு நங்கையும் நன்னலம் வாய்ந்த இந்த உன்னத உறவால் இணையும் உயர்வை உணர்த்துகிறது. ஒரு பெண் மீது ஓர் இளைஞன் காதல் கொள்கிறான். தன் காதலை அப்பெண்ணின் தோழியின் மூலம் சொல்ல முயற்சி செய்கிறான். தோழி அப்பெண்ணிடம் சொல்கிறாள்.
"ஒரு மலை உள்ளது. அம்மலை கண்ணபிரான் போன்று தோன்றுகிறது. அம்மலைக்குப் பக்கத்தில் அருவி வீழ்கிற; அது பலராமன் போன்று தோன்றுகிறது. அம்மலைக்கு உரிய தலைவன் உன்னை நேசிக்கிறான். அவன் உன் அன்பை வேண்டிப் பெரிதும் வருந்துகிறான். இது நான் நன்கறிந்த உண்மை. இதை நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், இன்னும் இதில் உனக்குத் தெளிவு ஏற்படவில்லை. அதனால், நீ ஒன்று செய்யலாம். இத் தலைவனின் அன்பை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பதைப் பற்றி நீ உன்னளவில் சிந்தித்துப் பார். உன்னுடைய பிற தோழியரிடமும் கலந்து விவாதித்துப்பார்.
ஒருவருடன் நட்பு கொள்ளவேண்டும் எனில், அவரைப் பற்றி அறிவால் ஆராய்ந்து தெரிந்துகொண்ட பின்பே நட்பு கொள்ள வேண்டும். பெரியோர்கள் ஒருவரைப் பற்றி ஆராயாமல் நட்பு கொள்ள மாட்டார்கள். நட்பு கொண்டபின் அவருடைய பண்பு நலன்களை ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். அதில் நன்மையும் இல்லை' என்பது தோழியின் கூற்று.
ஒரு பெண், ஓர் இளைஞனைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, காதலனாக அல்லாமல் நண்பனாகத் தேர்ந்து கொள்வதே சிறப்பு. அதுவே பிரிதல் இல்லாத இல்லறத்தைத் தரும். இது ஒரு வாழ்வியல் உண்மை. இதையே இக்கூற்றில் தோழி உணர்த்துகிறாள். பாடல் இதுதான்:

""மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்
வருந்தினன் என்பதுஓர் வாய்ச்சொல் தேறாய்!
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு
அரிய வாழி தோழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே!''
(நற்.32)

நட்பு கொள்வதில் மூன்று நிலைகள் உள்ளன. பேசிப் பழகும் தோழமை; உள்ளத்தாலும் உடலாலும் இணையும் காதல்; உள்ளத்தாலும் உயிராலும் ஒன்றிவிடும் நட்பு. கணவன் - மனைவிக்கு இடையே இத்தகைய நட்பு வாய்க்குமானால் அதைவிட வேறென்ன வேண்டும்? இல்லறத் துணையைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய இளையோர் சமுதாயம் இதைக் கருத்தில் கொண்டால், இல்லறம் நல்லறமாக அமையும்!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue