"பள்ளியும் பாயும் பசப்பு'



கதிரவன் மேற்றிசையில் மறையும் அந்தி மாலைப்பொழுது. காதல் ததும்பும் விழிகளை உடைய மகளிர் துன்பப்பட வேண்டும் என்பதற்காகவே வரும் மாலைப்பொழுது. அப்போது தெருவில் ஒரு பூக்காரி கூடை நிறைய முல்லைப் பூக்களைச் சுமந்து செல்கிறாள். அவளைக் கூப்பிட்ட புதுமணப் பெண் ஒருத்தி, அந்த மலர்களை விலைக்கு வாங்குகிறாள். வாங்கிய மலர்களை வீட்டின் முற்றத்தில் கிடந்த சிறுகட்டிலின் மேல் உள்ள மெத்தையில் தூவுகிறாள். ஆனால் அவளது விழிகள் கண்ணீர் சிந்துகின்றன. "இன்றாவது வருவாரா?' என்று அவளது செவ்விதழ் முணுமுணுமுத்தன.வீட்டு வாசலில் வந்து நிற்கிறாள். மெல்ல மெல்ல அந்திப் பொழுது தேய்ந்து இருள் சூழத் தொடங்குகிறது. அம் மாலைப் பொழுதைக் கண்டு வருந்துகிறாள். ""மாலைப் பொழுதே! நீ, முற்காலத்தே வந்த மாலைப் பொழுதா? இல்லை, இல்லை மணந்த மகளிர் பிரிவுக் காலத்தில் அவர் உயிர் உண்ணுகின்ற எமனாக இருக்கிறாய் நீ'' என்று பழிக்கும் அவள், ""ஐயோ, பாவம், மயங்கிய மாலைப் பொழுதே, நான் தெரியாமல் சொல்லிவிட்டேன். நின் துணையும் எம் காதலரைப் போல் மிகக் கொடியவரோ என்னவோ? அதனால்தான் நீ ஒளி இழந்து கலங்கி நிற்கிறாய் போலும் என்னைப் போல்'' என்று கூறும் வள்ளுவரின் தலைவி போல, மாலைப்பொழுதைக் கண்டு வேதனையுறுகிறாள் அந்தப் புதுமணப்பெண்.அப்போது வானத்தில் தோன்றிய நட்சத்திரங்கள், அது இருளோடு நிகழ்த்தும் போராகத் தெரிகிறது அவளுக்கு. இருளுக்கும் ஒளிக்கும் இடையே வானில் நடந்து கொண்டிருந்த அந்தப் போரைக் கண்ட அந்தப் பெண்ணின் மனம், போருக்குச் சென்ற தனது கணவனை நினைக்கத் தூண்டியது. இன்னும் அவன் திரும்பி வராததால் ஏற்பட்ட வருத்தம் தான் அவளது விழிகள் நீரை வார்த்ததுக்குக் காரணம். இந்நிலையில், வானத்தில் நிகழும் போர் அவள் உள்ளத்தில் நடக்கும் போரை மேலும் சூடேறச் செய்து கொண்டிருந்தது.அதைக்கண்டு வெறுப்புற்ற அவள் முற்றத்திற்கு வந்தாள். அதுவும் திறந்த வெளி முற்றம் என்பதால் அங்கேயும் வானத்துக்காட்சி அவள் கண்முன் வந்து வாட்டியது. இதமான குளிர்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது.""மழை ஓய்ந்த பின்னர், மனோரம்மியமாக இருந்தது அந்தக் காட்சி. காதல் பாடம் படிப்பவர்கள் காப்பியம் வடிக்கும் நேரமல்லவா அது?'' என்பார் கவிஞர் தெசிணி. அவர் கூறியுள்ளது போல காவியம் வடிக்கும் நேரமான ரம்மியமான மாலைப்பொழுதில் தலைவன் இல்லாமல் எப்படி?அவள் அந்த மஞ்சத்தைப் பார்த்தாள். அவள் நினைவு மீண்டும் தன் கணவனை நோக்கிப் பாய்ந்தது. சொல்லமுடியாத வார்த்தைகள் பல நேரங்களில் நினைவாகத் தானே கழிந்து மறைகின்றன. அதுபோல அவளது நினைவு, கடந்த நாள்களைப் பின்தொடர்ந்து சென்றது.அழகு எழில் கொஞ்சும் பருவப் பெண்ணாய் அவள் இருந்தபோது, அவளது அழகு கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்தான் ஒரு காளை. அவளும்தான்; கண்களினாலேயே அவனைக் காய்ந்தாள். அவனது மாவீரமெல்லாம் அவள் பார்வையின் முன் மண்டியிட்டு மகிழ்ந்தது. மலரைப் போல காதல் மெல்ல மெல்ல மலர்ந்து, விரிந்து திருமணத்தில் முடிந்தது.போருக்குச் செல்ல வேண்டி, அவர்களுக்குள் பிரிவு நேர்ந்தது. புதுமணத் தம்பதி என்பதால், பிரிவைச் சொல்லத் தயங்கினான். என்றாலும் அரச கட்டளை என்பதால், போய்த் தீரவேண்டிய நிர்பந்தம். அவள் பிரிய மறுத்து கோபித்தாள். அவள் கோபத்தில் நியாயமிருப்பதாகத் தெரியவில்லை அவனுக்கு. அதனால் பிரிந்து சென்று போர்க்களம் புகுந்தான். குளிர்காலம் வந்ததும் வருகிறேன் என்று கூறிச் சென்றான். அவன் பிரிந்து சென்ற நாள் முதலாய் இப்படித்தான் அவள் வருந்திக் கிடக்கிறாள்."அம்மா!' என்ற குரல் கேட்டு பழைய நினைவிலிருந்து மீண்டு வாசலுக்கு விரைந்தாள். கன்றுடன் பசுவைக் கூட்டிக்கொண்டு ஓர் இடையன் தெருவில் சென்றுகொண்டிருந்தான். அவள் சோகத்தை மேலும் அதிகரிப்பது போல சென்றுகொண்டிருந்த அவனது கையில் "குருக்கத்தி' இலைகள் இருந்தன.இதைக்கண்டவுடன் அவளது அழுகை மேலும் பீரிட்டது. காரணம், அவளது உள்ளங்கவர் கணவன் வருகிறேன் என்று கூறிச்சென்ற காலம், அந்தக் குருக்கத்தி துளிக்கும் காலமான கார்காலம். குளிர்காலம் தொடங்கி இரண்டு நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் கணவன் வரவில்லை. சொன்ன நாளில் வரவில்லை என்பதை நினைத்து வருந்தியிருந்தவளுக்கு இடையனின் கையில் இருந்த குருக்கத்தி இலைகள் மேலும் வருத்தத்தை பெருக்கியது. அதைக் கண்ட நொடியில் இருந்து உணவு செல்லாமல், உறக்கம் கொள்ளாமல் தவித்தாள். இருந்தாலும் அம்மஞ்சத்தில் வந்து விழுந்தாள்.அவளது திருமேனியோ அவனது பிரிவால் காயாம்பூ நிறமாக மாறிவிட்டது. காரணம் அவளுக்கு ஏற்பட்ட பசலை நோய் (உடல் நிற வேறுபாடு). அவளது உடல் மீதெல்லாம் ஊர்ந்து சென்ற அப்பசலை, பஞ்சு மெத்தை முழுவதும் பரவுவதாக உணர்ந்தாள்.அவளது மனம் நினைக்கிறது, ""மேகம், குறிஞ்சிப்பறை போல முழங்குகிறது; காட்டிலும் குருக்கத்தி இலைகளை விரித்தன; என்னைப் பிரிவதுதான் வழி என்று சொல்லிச் சென்று விட்டாரே, என் வருத்தம் பாராமல் பிரிவையே நன்று என்று எண்ணிவிட்டாரே'' என்று நினைத்து அவன் மேல் ஊடல் கொள்கிறாள்.""ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்குஇன்பம் கூடி முயங்கப் பெறின்'' (1330)என்பது வள்ளுவம். காமத்திற்கு இன்பம் ஊடுதல்; ஊடல் முடிந்தபின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு மிக இன்பமாகும் என்பார் வள்ளுவர். ஆம்! பிரிவிற்குப் பிறகு இன்பம் மிகுதியும் தருவது ஊடல்தானே? இதுப் பொய்க் கோபமாக இருந்தாலும் நேரில் கண்டுவிட்டால் பரிதி கண்ட பனி போல உறுகிப்போய்விடும் இயல்பினது. தலைவி ஊடக் காரணமாக இருப்பது, தலைவன் அவளுக்குத் தந்து சென்ற தனிமை என்ற கோர விஷம். பின் ஊடாமல் எப்படி இருப்பாள்.இவ்வாறு அவனுடன் ஊடல் கொண்டதன் விளைவால் அவளது உடலில் பசலை நோய் படர்ந்து, அது படுக்கை முழுவதும் பரவியதாம். பாவம் தூக்கம் காணாத இரவுகள், கண் மூடாத விழிகள் அவனை மறந்துவிடு; அல்லால் எனக்கு உறக்கத்தைத் தந்துவிடு என்று புலம்பித் தவிக்கிறதாம். அவளது இந்த சொல்லொனாத் துயரத்தை அவளே கூறுகிறாள்.சங்க இலக்கியமான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான, அகப்பொருளில் அமைந்த "கார்நாற்பது' என்னும் நூல் அந்தப் புதுமணப் பெண்ணின் மன பாரத்தை, அவள் மூலமாகவே தாங்கி வருகிறது. ""முருகியம்போல் வான முழங்கி யிரங்க குருகிலை பூத்தன கானம் பிரிவெண்ணி உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப் பள்ளியும் பாயும் பசப்பு'' (பா-27)என்கிறாள். ஒன்றிய காதலின்பம்-அன்பில் ஊறிய இருவருக்குமே இன்பத்தைத் தருவது. உடல் மட்டுமே பெறுவதைவிட, உள்ளமும் சேர்ந்து பெறுவதுதானே உண்மையான காதலின்பம். பிணக்குதலும், உணர்த்தலும், சேர்வதுமே அல்லவா காதலின் பயன்?ஆமாம்! ஏன் பெண்களுக்கு மட்டும் இந்தப் பிரிவுத் துன்பமும் பசலை நோயும் ஊடலும்? ஆண்களுக்குக் கிடையாதா? என்றால், ""கடல் போன்ற காமத்திலே துன்புற்ற போதிலும், பெண்கள் ஆண்களைப் போல மடலேறுவதில்லை'' என்று சங்க இலக்கியத்திலே குறிப்பிடப்பட்டுள்ளதே!அப்படிப்பட்ட பெண் பிறவியே பெருமை மிக்கது. எதையும் தாங்கும் பெண்மை, மனம் கவர் மணாளனின் பிரிவை மட்டும் தாங்கிக் கொள்ளாத மென்மை உடையதாக இருத்தலினால்தான் அவர்களுக்கு "பெண்மை' என்ற பெயராயிற்றோ?

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue