தேற்றுவார் இல்லையே தோழி!
தினமணி


அழகான குளிர்காலத்து மாலைப்பொழுது. இல்லங்கள் தோறும் மைதீட்டிய கயல்விழியும், கனங்குழையும் கொண்ட பெண்டிர், மங்கல விளக்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த அருமையான மாலைப் பொழுதிலே ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் இரண்டு பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். இருவரில் ஒருத்தியின் கண்களில் நீர் பெருக்கெடுத்து அருவியென ஓடுகிறது. அவள் துக்கத்தால் துவண்டிருக்கிறாள். அவளுடைய நினைவு பின்னோக்கிச் சென்று கடந்த காலத்திற்குள் பிரவேசிக்கிறது. அவள் இளம் வயதினளாக இருந்தபோது அவளின் அழகு கண்டு மயங்கினான் ஒரு வாலிபன். அவளும் அவன் பார்வை பட்டதுமே மனம் சரிந்துபோனாள். இருவரும் காதல் கைவரப்பெற்றனர். அந்தப் பழக்கமே நாளுக்கு நாள் அவர்கள் இருவரையும் தனிமையில் சந்திக்கும் வழக்கமாயிற்று. நேரம் வாய்க்கும் போதெல்லாம் காதல் பயிரை வளர்ந்து வந்தனர். அவள் பருவப் பெண்ணானதன் காரணமாக அவளது பெற்றோர் அவளை வீட்டில் "காவல்' வைத்தனர். என்றாலும் அவர்களது சந்திப்புகள் தொடர்ந்தன. காதல் வயப்பட்டதன் காரணமாக தலைவியின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டதைக் கண்ட தாயார், அவளுக்கு கண்ணேறு (திருஷ்டி) கழித்தாள். தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்த செவிலித்தாயோ அவளை அழைத்து பக்குவமாக அறிவுரை கூறினாள். அப்போதும் அவள் அவனைச் சந்திப்பதை நிறுத்தவில்லை. காதல் என்பது காட்டாற்று வெள்ளம் போல சீறிப்பாயும் தண்ணீர். அந்தத் தண்ணீருக்குத் தெரியுமா தான் சீறிப்பாயும் வழியில் எதிர்ப்படுவது யார் யார் என்று. காதல் இறைத்தன்மை வாய்ந்தது. தானாகவே உருவெடுக்கின்ற அதற்கு ஈடு இணையில்லாததோர் புதுச் சக்தி எங்கிருந்தோ பிறந்துவிடுகிறது. காதல் கொண்டோர் தம்மைப் பெற்றெடுத்தவர்களுக்குக்கூடப் பணிவதில்லை. அவ்வகையில் காதலே பெரிதென்று தலைமகனோடு தலைமகள் உடன்போக்கு சென்றுவிடுவாள். தலைவனோடு உடன்போக்கு வந்த பின்னர், கணவனும் மனைவியுமாக வாழ்ந்து வரும் வேளையில், உழைத்து பொருள் ஈட்டி அதன் மூலம் கிடைக்கும் செல்வத்தில் தன் மனம் கவர்ந்த அழகிக்கு புது அணி ஒன்று பூட்ட வேண்டும் என்ற ஆசை தலைவனுக்கு ஏற்படுகிறது. ஆனால் அவளைப் பிரிந்து செல்லவேண்டுமே என்ற தவிப்பு ஒரு பக்கம் பாடாய்ப்படுத்துகிறது. தோழியைத் தூதனுப்பி அவளைப் பிரியப் போவதற்கு சம்மதம் கேட்கிறான். அதன்பின் தானே சென்று பிரிவின் முக்கியத்துவத்தை அவளுக்கு எடுத்துக்கூறி விடைபெற்றும் சென்று விடுகிறான். ஆனால் இப்படிப் பிரிவது தலைவிக்கு முதல் அனுபவம். அதனால் அவனது பிரிவுத் துயரத்தைத் தாங்க முடியாமல் தவிக்கிறாள்; மனதாலும் உடலாலும் தளர்ந்து போகிறாள். எப்போதும் அவளது கண்கள் தலைவன் வரவுக்காக ஏங்கி, கண்ணீர் வடித்தபடி இருக்கின்றன. திடீரென தோழியின் குரல் கேட்டு பழைய நினைவிலிருந்து மீண்டு சுய நினைவுக்கு வருகிறாள் தலைவி. ""தலைவி! நீ இப்படி அழலாமா?'' என்று கேட்ட தோழி மீது தலைவிக்கு மிகுந்த கோபம் வருகிறது. அதைப் பொருட்படுத்தாமல் தோழி புத்திமதி கூறுகிறாள். ஒருவருக்கு ஒன்றை விளக்கிக் கூற வேண்டுமானால் பிறிதொன்றைக் காட்டி அறிவுறுத்துதல் என்பது உலக வழக்கு. இதைத் திருவள்ளுவர், ""உலகத்தோடு ஒட்ட ஒழுங்கல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்''(குறள்-140) என்கிறார். அவ்வகையில் தோழி, உலகைச் சுட்டிக்காட்டி அழும் தலைவிக்கு அறிவுறுத்துகிறாள். தலைவன் பிரிந்து சென்றதை எடுத்துக் கூறி ஆற்றுவிக்கிறாள். பிறகு, தலைவியை நோக்கி, ""நீ இவ்வாறு அழுவது கூடாது! உலகில் உள்ள சிறந்த மகளிரெல்லாரும் தங்கள் துணைவர் பிரிந்த காலத்தில் ஆற்றியிருப்பர்; இதுதான் மரபு. பிரிவை ஆற்றியிருப்பதுதான் மனைவிக்கு அழகு!'' என்று தோழி கூறியதுதான் தாமதம், தலைவன் பிரிவால் கலங்கியிருக்கும் தலைவிக்கு தோழி கூறும் புத்திமதி மேலும் சினமூட்டுகிறது. அதனால் கோபக்கனல் பொங்க தோழியைப் பார்த்து சீறுகிறாள். ""குளிர்ச்சியான மழைத்துளிகள் தூறுகின்றன. கனங்குழை கயல்விழி மாதர்கள் விளக்கேற்றுகின்றனர். இந்தத் துன்பமான மாலைப் பொழுதில், ""தலைவர் வந்தார்; விருந்து செய்து மகிழ்வாயாக!'' என்று சொல்லி என் கலங்கிய கண்ணீரைத் துடைப்பவர் யாரும் இல்லையே! அதற்கு மாறாக, தலைவரைப் பிரிந்த நீ உலக மாந்தர்களைப் போல ஆற்றியிருத்தலே அழகு'' என்று புத்தி சொல்ல வருகின்ற இரக்கமற்றவரே உள்ளனர். தலைவருடைய வரவு கூறி, விருந்து செய்யத் தூண்டுவாரை நான் பெறவில்லையே தோழி! அந்தோ! என்னைத் தேற்றுவார் இல்லையே தோழி!'' என்று மறைமுகமாக தனது தோழியைக் கடிந்துகொண்டு பழிக்கிறாள் தலைவி! வெளிநாட்டுக்குச் சென்ற காதலர் திரும்பிவரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல (நெடிதாகக்) கழியும் இதை,""ஒருநாள் எழுநாள்போல் செல்லும், சேண் சென்றார்வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு (குறள்-1270)'' என்கிறார் வள்ளுவர். மேலும், காதல்-காம இன்பம் கடல் போன்றது என்றால், அது பிரிவு காரணமாக வருத்தும்போது அப் பிரிவுத் துன்பம் கடலைவிடப் மிகமிகப் பெரியது என்பதை,""இன்பம் கடல்மற்றுக் காமம்; அஃதுஅடும்கால்துன்பம் அதனின் பெரிது''( குறள்-1166) என்கிறார். தலைவனின் பிரிவுத் துன்பம் உயிர்த் தோழியைக் கூட கடிந்து கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இதைக் குறுந்தொகையில் பதிவு செய்திருக்கிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற புலவர். பாடல் வருமாறு:""தேற்றா மன்றே தோழி தண்ணெனத்தூற்றுந் துவலைந் துயர்கூர் காலை,கயலே ருண்கட் கனங்குழை மகளிர்கைபுனை யாக நெய்பெய்து மாட்டியசுடர்தூய ரெடுப்பும் புன்கண் மாலைஅரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்புமெய்ம்மலி யுவகையி னெழுதருகண்கலி முகுபனி யரக்கு வோரே''(குறு-398)மேற்கண்ட பாடல் வழி, தன்னைத் தேற்றுவார் இல்லையே தோழி என்று அரற்றுவது, உணர்ச்சியின் உச்சகட்ட நிலையாக உள்ளது. மேலும் மாலைப் பொழுதில் குலமகளிர் தங்களது இல்லங்களில் விளக்கேற்றும் மரபினையும் இப்பாடல் மூலம் அறியமுடிகிறது. இதனை, ""........ ....... மங்கையர்நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்கையமை விளக்கம் நந்துதொறு மாட்ட (47-49)''என்று முல்லைப் பாடலிலும்,""மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர்கோலங் கொடியிடையார் தாங்கொள்ள (4:19-20)'' என்று சிலப்பதிகாரமும்,""....... மகளிர்''கைபுனை யாக நெய்பெய்து மாட்டியசுடர்....... ........(398: 3-5)''என்று குறுந்தொகையும் இப்படி மாலைப்பொழுதில் மகளிர் விளக்கேற்றும் வழக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ளன. வீடுகளில் விளக்கேற்றியதும் தம் காதலர்பால் நெஞ்சம் படர்கின்ற காரணத்தால், காதலியர்க்கு அந்திப்பொழுது துயர்கூரும் காலமாகக் காட்சி தருகிறதாம். தலைவனைப் பிரிந்த தலைவிக்கு, இனிய மாலைப்பொழுது துன்பப்பொழுதாகத் தோன்றுகிறது. அதனால்தான் ""புன்கண் மாலை'' எனத் தலைவி பழிப்பதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்