இணையற்ற காவியத்தில் இலக்கணத் தம்பி!



உலகில் உண்டான உறவுகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. எனினும், உருவான உதரம் ஒன்று என்ற ஒரே காரணத்துக்காக ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் சகோதரப் பாசம் வியக்கத்தக்கதன்றோ! அதனால்தானோ என்னவோ காலத்தை வென்ற ராமாயணத்தில் சகோதரப் பாசத்தைப் பிரதானமாகக் காட்டுகிறார் கம்பர்.யாவரோடும் அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என போதிக்க வந்த ராமன் பிறந்ததோ மூவரோடு. அவர்கள் நால்வரும் ஆனதோ இரண்டு ஜோடிகளாக. ராம-லட்சுமணனாகவும், பரத-சத்ருகனனாகவும் அவர்கள் சேர்ந்தே வளர்கின்றனர். திருமண விழா ஒன்றைக் காட்டும் பாடலில் கம்பர் பாடிய "பருந்தொடு நிழல் சென்(று) அன்ன' என்ற வரிகள் இங்கு ராம-லட்சுமணனின் பாசத்தை விளக்க பொருத்தமானதாகிறது.விழாவில் சங்கீதக் கச்சேரி நடைபெறுகிறது. பாட்டுக்கு இசையாமல் இசை அதன் பாட்டுக்குச் சென்றால் செவிகளுக்கு நாராசம். பாட்டும் இசையும் பக்குவமாக இசைந்தால் பருகும் செவிகளுக்கு இன்ப விருந்து. இங்கு பாட்டோடு இசை பாலில் சுவையென கலந்திருக்கிறது. பருந்து வானில் பறக்கிறது. அதன் நிழலோ தரையில். ஆனாலும், பருந்து செல்லும் திசையெல்லாம் அதன் நிழலும் எப்படிச் செல்லுமோ அவ்வண்ணம் பாட்டும் இசையும் இணைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் கம்பர்.அப்படித்தான் லட்சுமணனும். ராமனை விட்டுப் பிரியாமல் நிழலெனத் தொடர்கிறான். உண்ணும்போதும் உறங்கும்போதும்கூட பிரியாமல் பிரியத்துடன் இணையாய் இருக்கிறான். லட்சுமணன் நுனிமூக்கு "கோபம்' உள்ளவன். ராமனோ பூமிபோல பொறுமை "குணம்' உள்ளவன்; சாந்தமே வடிவானவன். பிறகு எவ்வாறு இருவருக்கும் ஒத்துப்போகிறது?அதில் வியப்பொன்றுமில்லை. ராமன் இருக்குமிடத்தில் லட்சுமணன் இருப்பான். லட்சுமணன் எங்கு இருப்பானோ அங்கு நிச்சயமாய் ராமன் இருப்பான். ஆக, "கோபம்' இருக்கும் இடத்தில் "குணம்' இருப்பது இயற்கைதானே!அன்பால் இணைந்திருப்போரைக் குறிக்க கவிஞர்கள் வழக்கமாக "கண்ணும் இமையும்போல' என்பர். இங்கே இருவரும் சகோதரர்கள். அவர்களை இரு இமைகள் என்கிறார் கம்பர். தாங்கொணா துயரம் தந்த தாடகையை வதம் செய்தாயிற்று. வேள்வி நடைபெறுகிறது. காவல் பணியை கார்வண்ணனும் அவனது தம்பி லட்சுமணனும் செய்கின்றனர். அதை கம்பர்,""மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்''என்கிறார்.இமைகள் இரண்டில் கீழ் இமை அப்படியே இருக்கும். மேல் இமையே அடிக்கடி வந்து கீழிமையைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லும். இங்கும் அப்படித்தான். வேள்வியை ஓரிடத்தில் நின்று காவல் காக்கிறான் லட்சுமணன். காரணம் அவன் இளையவன். மூத்தவனான ராமனோ வேள்வி நடைபெறும் இடத்தைச் சுற்றிவந்து காவல் காக்கிறான். அப்போது அவன் லட்சுமணனைப் பார்த்துச் செல்கிறான். இணையான சகோதரர்களை இமைகள் என இயம்பி சகோதரத்துவத்துக்கு புதிய உவமை படைக்கிறார் கம்பர். அண்ணன் என்பவன் அறிவைத் தருவதில் தந்தையாகவும், அன்பைத் தருவதில் அன்னையாகவும் விளங்க வேண்டும்.கூனியின் கூற்றால் மனம் மாறிய கைகேயி "ஏழிரண்டு ஆண்டின் வா என்று இயம்பினான் அரசன்' என, ராமனிடம் கூறுகிறாள். பழி தீர்க்க நினைத்த கூனியின் சொல்லுக்கு பலியான கைகேயி இட்ட உத்தரவை மறு நினைப்புமின்றி ஏற்ற ராமன் "அப்பொழுது அலர்ந்த செந்தாமரையின் வென்ற' மலர்முகத்துடன் வெளியேறுகிறான். அண்ணன் ராமனே தனக்கு அனைத்தும் என எண்ணி அவன்பால் அன்பு கொண்ட லட்சுமணன் சும்மாயிருப்பானா? காட்டுக்குச் செல்லும் ராமனின் காலடியைத் தொடர்கிறான். இக் காட்சி, தாய்ப்பசுவை வெளியேற்றினால் கன்றும் தானாகவே வெளியேறுமே அதைப்போல இருக்கிறதாம். இதை, "கன்றும் தாயும் போவன கண்டும் கழியீரே!' என பரதனின் வார்த்தைகளில் வடிக்கிறார் கம்பர்.பிறிதோரிடத்தில், ராமனுடனான தனது பாசத்தை லட்சுமணனின் சொற்களில் எடுத்துரைக்கிறார் கம்பர். வனம் செல்ல உத்தரவிடப்பட்ட ராமனுடன் தான் ஏன் செல்ல வேண்டும் என்பதற்கு தன்னை மீனாக்கி, ராமனை நீராக்கி உவமையால் உணர்த்துகிறான் லட்சுமணன்.""நீர்உள எனில் உள மீனும் நீலமும்பார்உள எனில் உள யாவும் பார்ப்புறின்நார்உள தனு உளாய் நானும் சீதையும்ஆர்உளர் எனில் உளேம் அருளுவாய்''மீனும், நீலம் எனப்படும் நீலோற்பல மலரும் உயிர்வாழ நீர் அவசியம். மீன்போல நானும், நீலம்போல சீதையும் உயிர்வாழ ராமனாகிய நீ(ர்) அவசியம். மீனும் நீலமும் நீரைப் பிரிந்தால் உயிர் வாழ்வது இயலுமோ? எங்களின் நிலைமையும் அவ்வாறே என்கிறான் லட்சுமணன்.நீரில் நீலம் ஓரிடத்தில் நிலையாக நிற்கும். பெண்மையான சீதையும் அப்படித்தான். ஆனால், மீனோ நீர் முழுவதும் சுற்றிவரும். அழகு நீலம் கொஞ்சும் நீரில் அழுக்கு சேரவிடாது மீன். அதுபோல "அண்ணனாகிய உனது புகழுக்கு எவ்விதக் களங்கமும் சேரவிடாமல் பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு' என்பதை சூசகமாக குறிப்பிடுகிறான் சூர்ப்பனகையை மூளியாக்கிய முன்கோபக்காரன்.தம்பி என்பவனுக்கு அண்ணனிடம் அன்பும், அமரருள் உய்க்கும் அடக்கமும் மட்டுமன்றி, தமையன் புகழுக்கு தீமை நேராமல் காக்கும் கடமையும் உண்டு என்பதை லட்சுமணன் மூலமாக விளக்கி, தம்பிக்குப் புதிய இலக்கணமும் படைக்கிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்