கடைச்சங்க காலத்து 473 புலவர்களுள், மிகச்சிறந்த புலவராக, தமிழ் மொழியின் பொருள் இலக்கணச் சிறப்பைக் காப்பதற்காக, இறையனார் யாத்த "கொங்கு தேர் வாழ்க்கை' (குறுந்தொகை) என்னும் பாடலில் பொருட்குற்றம் கண்டு, இறையனாரையே எதிர்த்து வாதம் செய்த மாபெரும் "புரட்சிப்புலவர்' மதுரை கணக்காயர் மகனார் நக்கீரர். நக்கீரர், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடையும், எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை (8), நற்றிணை(7), அகநானூறு(17), திருவள்ளுவமாலையில் முதல் பாடலும் இவர் இயற்றிய பாடல்களாகத் தெரியவருகிறது. மேலும் இவரது தனிப்பாடல்களும் உள்ளன. இவர் இயற்றியதாகக் கருதப்படும் "நாலடி நாற்பது' என்றொரு நூல் உண்டென்றும், அந்நூல் அவிநயர் யாப்புக்கு அங்கமாக உள்ள யாப்பிலக்கணநூல் என்றும் யாப்பருங்கல விருத்தி முதலிய நூல்களால் அறிய முடிகிறது."கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு கீரர்' என்ற திருப்புகழ் அடிகளால் இவர் வடமொழியிலும் வல்லவர் என அறிகிறோம். மேலும் நக்கீரரால் பாடப்பெற்ற நூல்களாகக் கூறப்படும் நூல்கள்: பதினோராம் திருமுறையில் உள்ள கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், கார்எட்டு, போற்றித் திருக்கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ஆகிய பத்து சிற்றிலக்கியங்கள்.திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் பாடிய மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரரின் காலம் கடைச்சங்க காலமாகிய கி.பி. 2-ஆம் நூற்றாண்டு எனலாம். மேலும் இவர் புலவராக இருந்ததுடன் சிறந்த உரையாசிரியராகத் திகழ்ந்தார் என்பதற்கு இறையனார் களவியல் நூலுக்கு இவர் எழுதிய உரையே சான்றாகும். நெடுநல்வாடை பாடிய நக்கீரர் சங்க காலத்தவர் என்றும், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் அவருக்குப்பின் வந்தவர் என்று நிலவும் ஒரு கருத்து ஆய்வுக்குரியது.நக்கீரர் பற்றிய இரு கதைகள் சொல்லப்படுகின்றன. மதுரையில் நக்கீரர் ஒருமுறை பட்டிமண்டபத்தே வீற்றிருந்தபோது, அங்கு வந்த குயக்கொண்டான் என்பவன் வடமொழியே சிறந்தது, தமிழ்மொழி தாழ்ந்தது என்று கூறினான். அதுகேட்டு சினங்கொண்டு நக்கீரர்,""முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழிபரண கபிலரும் வாழி - அரணியஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்ஆனந்தம் சேர்க சுவ''என அவன் இறக்கும் வண்ணம் பாடினார். உடனே அவன் இறந்து போகிறான். இதைக் கண்ட மற்ற புலவர்கள், குயக்கொண்டானுக்காக இரங்கி நக்கீரரிடம் அவனுக்கு உயிர் தரும்படி வேண்ட, நக்கீரரும் இரக்கம் கொண்டு""ஆரியம் நன்று தமிழ் தீது என வுரைத்தகாரியத்தாற் காலக் கோட் பட்டானை - சீரியஅந்தண் பொதியின் அகத்தியனார் ஆணையினாற்செந்தமிழே தீர்க்க சுவா''என்று பாட, உடனே அவன் உயிர் பெற்றெழுந்தான். இது நடந்த நிகழ்ச்சியா அல்லது பிற்காலப் புலவரின் புனை கதையா என்பது அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நக்கீரர் வடமொழியிலும் வல்லுநர் என்பதை அவர் இயற்றியதாகக் கூறப்படும் திருக்காளத்தி பூங்கோதை அம்மை மீது வடமொழித் தோத்திரம் ஒன்றும், வடமொழி நிகண்டு ஒன்றும் இருந்தன என்ற செய்தியிலிருந்தும் அறிய முடிகிறது. இவரது திருமுருகாற்றுப்படை எழுந்த சூழலைக் காண்போம்:சிவபெருமான் தருமி என்ற அந்தணப் புலவருக்கு உதவும் பொருட்டு "கொங்குதேர் வாழ்க்கை' எனத் தொடங்கும் அகப்பாடலைப் பாட, வந்திருப்பது இறையென்று அறிந்தும் நக்கீரர் அப்பாடலில் பொருட்குற்றம் என வாதிட்டார். இதனால் இறைவனின் சினத்துக்கு ஆளாகி நோயுற்றார். பின்பு அவ்விறைவனை வணங்கி வேண்ட, இறைவன் கயிலையைக் கண்டால் உனது நோய்தீரும் என்றார். எனவே நக்கீரர் கயிலையை நோக்கிச் செல்லும் போது திருப்பரங்குன்றத்தில் "கற்கிமுகி' என்ற பூதத்தால் குகையில் அடைக்கப்பட்டார். அப்போது திருமுருகாற்றுப்படையைப் பாடி தம்முடன் சிறையில் இருந்த 999 பேரையும் குகையிலிருந்து விடுவித்தார் எனவும் கதை ஒன்று வழங்கிவருகிறது.""சேயோன் மேய மைவரை உலகம்'' என்கிறது தொல்காப்பியம். பத்துப்பாட்டில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. இதனைப் பாடியவர் நக்கீரர் என்பதை இப்பாடலின் இறுதியில் அமைந்துள்ள "குமரவேளை மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் பாடியது' என்பது புலப்படுத்தும். பாடலின் இறுதியில் முருகப்பெருமானின் பெருமையைக் கூறும் பத்து தனிப்பாடல்களும் உள்ளன. முருகனின் அருளைப் பெற்ற ஒருவர், அந்த அருளை நாடும் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக நக்கீரர் பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை. முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள அறுபடை வீடுகளின் சிறப்பைப் பற்றிக் கூறுவது. 317 அடிகளைக் கொண்ட இந்நூலே தமிழ் இலக்கியத்தின் முதல் முழு பக்திநூல் ஆகும்.மற்ற ஆற்றுப்படை நூல்கள் ஆற்றுப்படுத்தப் படுபவர்களது பெயரோடு சார்த்தி வழங்கப்படுகின்றன. ஆனால் திருமுருகாற்றுப்படை பாட்டுடைத் தலைவனின் பெயரோடு சார்த்தி வழங்கப்படுகிறது. இதைப் புலவராற்றுப்படை என்றும் கூறுவர். திருமுருகாற்றுப்படையில் தமிழ் நாட்டுப் பழங்குடி மக்கள் மேற்கொண்டு போற்றிய பழைய சங்ககால வழிபாட்டு முறைகளே விரித்து விளக்கப்பட்டுள்ளன. இதில் செறிவும், திட்பமும் வாய்ந்த சொல் நடை அமைந்திருக்கக் காணலாம். சங்ககால வாழ்க்கை முறைகள், கடவுளர்களைப் பற்றிய வரலாறு போன்ற பல்வேறு செய்திகளை அறிய நமக்குப் பெருந்துணை புரிகிறது திருமுருகாற்றுப்படை.இதன் சிறப்பறிந்து இதை சைவசமய நூலாகிய பன்னிரு திருமுறைகளில், பதினொன்றாம் திருமுறையில் சேர்த்துள்ளனர். மொத்தத்தில் திருமுருகாற்றுப்படை பழந்தமிழர் நாகரிகத்தை அறிய உதவுகின்ற வரலாற்றுக் காப்பியமாகும்.
எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment