சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் தோன்றிய இலக்கிய மற்றும் நீதி நூல்கள் தமிழ் உலகிற்கு உணர்த்திய அறம் "உயிரி நேயம்' ஆகும். மனித நேயம் என்பது நாம் அறிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், அது என்ன உயிரி நேயம்? மனிதர் மற்றொரு மனிதரிடம் காட்டும் அன்பு மற்றும் இரக்க உணர்வை மனிதநேயம் என்கிறோம். ஆனால், அதனினும் மேலாக மனிதரல்லாத பிற உயிரினங்கள் ஒன்று மற்றொன்றிடம் காட்டும் அன்பை அல்லது மனிதர் பிற உயிர்களிடம் காட்டுகிற அன்பை உயிரி நேய ஒழுக்கலாறாகத் தமிழ்ச் சமுதாயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்து வைத்துள்ளது. உயிரி நேயம், நம் முன்னோர்கள் உலகிற்கு அளித்துப் பின்னர் காலப்போக்கில் மறக்கப்பட்டு புதையுண்டு போன பண்பாட்டுப் புதையல் என்றால் அது மிகையன்று. அன்பு பாராட்டுதல், விட்டுக்கொடுத்தல் அருகிவர, எங்கும் எதிலும் சுயநலம், பொறுமையின்மை, தான் வாழப் பிறரை அழிக்கக் கிளம்பும் அரக்கத்தனம் எனத் தீமைகள் உச்சத்தில் இருக்கும் இன்றைய நாளில், உயர்ந்த மனித நேயம் போதிக்கப்படவும், உன்னதமான உயிரி நேயம் சிந்திக்கப்படவும் வேண்டியுள்ளது. சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாறன் பொறையனார் என்ற புலவர், ஐந்திணை ஐம்பது என்ற நூலில் அற்புதமான பாடல் ஒன்றைத் தருகிறார். உலக இலக்கிய வரலாற்றில் காண முடியாத, உன்னதமான, நெஞ்சில் வைத்துப் போற்றக்கூடிய அரிய காட்சி சித்திரிப்பு இப்பாடல். நல்ல கோடை காலம், காட்டில் ஆணும் பெண்ணுமாக இரண்டு மான்கள், வெப்பம் தாங்கமாட்டாது நாவறட்சி காரணமாகத் தண்ணீர் தேடி அலைகின்றன. ஓரிடத்தில் வறண்டு போன சுனையில் சிறிதளவு நீர் இருப்பதைக் காண்கின்றன. ஆண் மான் பெண் மானைப் பார்த்து, ""நீ மெல்லினம், தாகம் தாங்க மாட்டாய், இந்த சிறிய நீரைப் பருகி உயிர்ப்பித்துக் கொள்!'' என்கிறது. பிணை மானோ, ""இல்லை இல்லை! நீ ஆண்; உயிர் வாழ வேண்டியவன், நீ பருகுவதே சாலச் சிறந்தது'' என்கிறது. மான்களிடையே வாக்குவாதம் தொடர்கிறதே ஒழிய நீரை அருந்தவில்லை. உடனே ஆண் மான் ஓர் உபாயம் சொல்கிறது. ""ஒன்று செய்வோம், இருவரும் ஒருசேர வாய் வைத்துப் பங்கிட்டுப் பருகுவோம்'' என்கிறது. அதற்குப் பெண் மானும் சம்மதிக்கிறது. ஆனால், என்ன ஆச்சரியம்? உறிஞ்சிக் குடித்தால் ஒரு நொடி கூட தங்காத நீர், இரண்டு மான்களும் வாய் வைத்தும் உள்ளது உள்ளபடி குறையாது இருந்தது. அங்கேதான் தமிழினம் சுட்டும் உயிரி நேயம் உவப்பத் தலைகூடுகிறது. பிணை மானை இணங்க வைக்கத் தானும் சுனை நீரைச் சேர்ந்து பருகுவதாகக் காட்டி கலைமான் நீரில் வாய் வைத்து உறிஞ்சுவது போல பாசாங்கு நாடகத்தை அரங்கேற்றி, பிணைமான் நீர் முழுவதும் பருகிக்கொள்ள இடம் கொடுக்கிறது. பிணை மானும் அதே பாசாங்கு நாடகத்தை அரங்கேற்றுவதன் மூலம் நீர் குறையாமல் உள்ளது. அன்பு, விட்டுக்கொடுத்தல், ஒத்து அறிதல் என்ற மனிதகுலம் காணமாட்டாத காதல் பெருவாழ்வை ஐந்தறிவே பெற்ற மான்களின் வாயிலாக மாறன் பொறையனார் உலகிற்கு வெளிப்படுத்திய விதம் அருமையிலும் அருமை அன்றோ! அப்பாடல் வருமாறு:"சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்றெண்ணிப்பிணைமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமா தன்கள்ளத்தில் ஊச்சும் சுரமென்ப காதலர்உள்ளம் படர்ந்த நெறி'' இதில் "கலைமா தன் கள்ளத்தில் ஊச்சும்' என்ற சொற்றொடர் உலக இலக்கியங்கள் எட்ட முடியாத ஒப்புயர்வற்ற தமிழின் தரம் என்பதில் ஐயமில்லை. உறிஞ்சுவதாக நடிக்கும் அல்லது பாசாங்கு செய்யும் என்ற பொருளை உணர்த்தும் "ஊச்சும்' என்ற சொற்பிரயோகமே, இந்தப் பாடலை ஒரு தேர்ந்த கலைப் படைப்பாக ஆக்கியுள்ளது. சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் அடங்கிய கலித்தொகைப் பாடல் ஒன்றில், சேரமான் பெருங்கடுங்கோ என்ற புலவர், தலைவனின் பிரிவைத் தாங்கமாட்டாத தலைவியைத் தேற்ற, தோழியின் கூற்றாகக் "காட்டில் குட்டியானை கலக்கிய சிறிது நீரையும் பெண் யானைக்கு ஊட்டிய பின்பு மீதமிருப்பின் ஆண் யானை பருகும் அக்காட்சியை உன் தலைவன் காண்பான். உடனே உனது நினைவு வரும். ஆகவே அவன் உன்னை நாடி விரைவில் வருவான்; கவலையை விடு' என்பதாக,""துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு எனவும்உரைத்தனரே'' என்ற பாடல் மூலம் விலங்குகளிடம் உள்ள உயரிய உயிரி நேயம், தமிழ் இலக்கியத்தில் மேலும் பேசப்படுவதை அறியலாம். எது எப்படி இருப்பினும், கற்றதையும் பெற்றதையும் உரிய முறையில் வாழ்க்கையில் பயன்படுத்துகிற சமுதாயமே உலகின் உயரிய சமுதாயமாகப் போற்றப்படும் என்பது தெளிவு.
எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment