இந்த வாரம் கலாரசிகன்






பாரதியாரைத் திருவாவடுதுறை ஆதினம் ஏன் கௌரவிக்கவில்லை என்கிற கேள்விக்கு, நான் ரயிலில் சந்தித்த தமிழ்ப் பேராசிரியரின் விளக்கம் தவறு என்பது நண்பர் ராஜ்கண்ணனின் கருத்து. யாரோ எதையோ சொல்வதை எல்லாமா பதிவு செய்வது என்கிற அவரது கேள்வியில் நியாயம் இருப்பதாக எனக்குப் படுகிறது. தவறுகள் திருத்தப்படுவதுதானே முறை? அவரது கடிதம்~ ""திருவாவடுதுறை ஆதீனம் தமிழ் வளர்க்கும் பண்ணை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. எனினும் "சைவத்தின் மேற்சமயம் வேறில்லை' என்பதும் "சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை' என்பதும் அந்தத் திருமடத்தின் உயிர்நாடியான கொள்கைகள்.பாரதியாரோ கணபதி, முருகன், சிவன், சரஸ்வதி, லட்சுமி, கண்ணன், கோவிந்தன், முத்துமாரி என்று எல்லா கடவுளையும், ஏன், அல்லா, ஏசு கிறிஸ்து என்று பிற மதக் கடவுளர்களையும்கூட போற்றிப் பாடியிருக்கிறார். தம் கவிதையில் ஓரிடத்தில் அவர்,"உண்மையின் பேர் தெய்வம் என்போம் - அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்!' என்று பாடுகிறார். கலாரசிகன் குறிப்பிடுவதுபோல பாரதியார் தன்னடக்கம் மிகுந்தவரல்லர். வெடிப்புற பேசுபவர்; ரௌத்ரம் பழகியவர். எட்டயபுரம் வெங்கடேசு ரெட்டப்ப பூபதிக்கு ஓலைத்தூக்கு எழுதும்போதுகூட, "கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசை யென்னால் கழிந்ததன்றே'என்று கூறிக்கொள்ளும் பாரதியார், தன்னை மதித்து கௌரவிக்க நினைப்பவர்களின் அழைப்பைப் புறக்கணித்திருப்பாரா?உ.வே.சா. பாரதியை தொடர்புகொண்டு திருவாவடுதுறை ஆதீனத்து விருப்பத்தைக் கூறியதாகக் குறிப்பிட்டிருக்கும் தகவலும் நம்பத் தகுந்ததாக இல்லை.பாரதி இறந்து சில ஆண்டுகளுக்குப் பின் பாரதி மகாகவியா இல்லையா என்கிற சர்ச்சை தமிழறிஞர்களிடையே உருவாயிற்று. அப்போது நடந்த காங்கிரஸ் இயக்க பொன்விழா கூட்டத்தில் பாரதியின் படத்திறப்பு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் உ.வே. சா.வும் கலந்துகொண்டார்.முதலில் பேசிய ராஜாஜி "நாங்கள் பாரதியை மகாகவி என்று ஒப்புக்கொள்கிறோம். அந்த முத்திரை மகாமகோபாத்யாய சுவாமிநாதய்யரிடமிருந்தும் வந்துவிட்டால் அதை யாரும் அசைக்க முடியாது' என்று கூற, அடுத்து பேசிய உ.வே.சா. பாரதியைப் பற்றி பொதுவாக புகழ்ந்துவிட்டு தன் உரையை முடித்துக் கொண்டாரே தவிர மகாகவி சர்ச்சை பற்றி எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் பாரதிக்கும் இருந்த பொதுவான அம்சம் தமிழ்க்காதல் என்பதே. மற்றபடி சித்தாந்த ரீதியில் இருவரும் இருவேறு துருவங்கள்.ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த எத்தனையோ அறிஞர்கள் சந்திக்காமல் இருந்ததுண்டு. எனவே இதில் வியப்பு ஏதுமில்லை. ஆனால் அவர்கள் சந்திக்க விரும்பியதாகவும் சந்திக்க மறுத்ததாகவும் கூறும் வழிப்போக்கர்களின் வாக்குமூலங்கள் பதிவாவது இலக்கிய வரலாற்றில் குழப்பம் ஏற்படவே வழிவகுக்கும்''.நான் கட்சி மாறிவிட்டேன். ராஜ்கண்ணனின் வாதத்தை ஏற்கிறேன். எது சரி, எது தவறு என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.*******"நீங்கள் கவிஞர் கண்ணதாசன் ரசிகர்தானே' என்று என்னைக் கேட்டார் ஒருவர்."ஆம், சந்தேகமென்ன? என்றேன்."கவியரசு கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக உங்களைக் கவர்ந்த கவிஞர் யார்?'"கவிஞருக்கு எதிர்க்கடை விரித்த கவிஞர் வாலிதான், அதில் சந்தேகமென்ன?'"சரி, இன்றைய இளைய தலைமுறைக் கவிஞர்களில் உங்களைக் கவர்ந்த கவிஞர் யார்?'"நா. காமராசன், மு. மேத்தா, புலமைப்பித்தன், முத்துலிங்கம், வைரமுத்து தலைமுறையை விட்டுவிட்டு, அடுத்த தலைமுறையில் என்னைக் கவர்ந்தவர் என்னவோ கவிஞர் சாமி பழநியப்பனின் புதல்வர் கவிஞர் பழநி பாரதிதான். மற்றவர்களிடமிருந்து கவிஞர் பழநி பாரதி வேறுபடுவதன் காரணம் அவரது கவிதைகளில் காணப்படும் சமூகப் பிரக்ஞை'. அவரது படைப்புகளில் ஒன்றைச் சொல்லுங்களேன்'.""பிளாஸ்டிக் கவிதைகள் என்று ஓர் அருமையான கவிதையை அவரது "காதலின் பின்கதவு' தொகுப்பில் படித்தது இப்போதும் எனது நினைவில் பசுமையாக இருக்கிறது. "கூடல்' என்றொரு இணையதளம். அதில் புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் இவையெல்லாம் வெளியிடப்படுகின்றன. அதில் கவிஞர் பழநிபாரதி எழுதிய "பாசம்' என்கிற கவிதை காணப்படுகிறது. அதைப் படித்து விட்டுச் சொல்லுங்கள், எனது கணிப்பு சரிதானா என்று!'""எனக்கு இணையதளமெல்லாம் தெரியாது. ஆனால் கவிதையை ரசிக்கத் தெரியும். சொல்லுங்களேன் அந்தக் கவிதையை'' என்றார்.அவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சேர்த்து, இதோ அந்தக் கவிதை~ ""கிளைக்கரம் நீட்டி மரம் உன்னை அன்போடு அழைக்கும் போது உன் அம்மாவை... ஈரக்காற்றெடுத்து மரம் சில்லென்று தழுவும்போது உன் மனைவியை... பூக்களைச் சிந்தி மரம் உன்னைக் குதூகலப்படுத்தும்போது உன் குழந்தையை... எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா? இப்போது சொல்} உன் தாயை உன் மனைவியை உன் குழந்தையை ஒரே நேரத்தில் உன்னால் கொலை செய்ய இயலுமா?''

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue