தொல்காப்பியம், வேதங்களுக்கு முந்தைய நூலல்ல!


கோவை செம்மொழி மாநாட்டில் "இலக்கணம்' பற்றிய  ஆய்வில், முனைவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு என்றும், ரிக் வேதத்துக்கு முற்பட்டதாகத் தொல்காப்பியம் இருக்கக்கூடும் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார் என்று தினமணி 25-6-2010 அன்று தெரிவித்திருந்தது. வேதத்துக்கு முந்தையது தொல்காப்பியம் என்ற முனைவர் நெடுஞ்செழியன் கருத்துக்குத் தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் ஆதரவாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.சிறப்புப் பாயிரம்:தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். அதன் பிற்பகுதி வருமாறு:நிலம் தரு திருவில் பாண்டியன் அவையத்துஅறம் கரை நாவின் நான்மறை முற்றியஅதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்துமயங்கா மரபின் எழுத்துமுறை காட்டிமல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்ததொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்பல்புகழ் நிறுத்தப் படிமையோனே""நிலம் தரு திருவில் பாண்டியன் அவையில், அறத்தை உணர்ந்த, உணர்த்தும் நாவினையுடைய, நான்கு மறைகளையும் தெரிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில், புலவர் கூடிய பேரவையில், மயக்கமின்றித் தெளிவாகத் தான் உணர்ந்து, பிறர்க்கு எழுத்து முறையைக் காட்டிக் "கடல் சூழ்ந்த உலகத்து ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண  நூல் செய்திகளையும் கற்று தொல்காப்பியன் எனத் தன் பெயரை அமைத்துக் கொண்டு, இந்நூலால் பல சிறப்புகளைப் பெற்ற தூயோன்'' என்று முனைவர் ச.வே.சுப்பிரமணியன் இந்த வரிகளுக்குத் தெளிவுரை எழுதியிருக்கிறார்.நான்மறை:சிறப்புப் பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற சொல் சம்ஸ்கிருத மொழி நான்கு வேதங்களையே குறிக்கும். ""நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார். அவை: தைத்திரியம், பெüடிகம், தலவதாரம், சாமவேதம் ஆகும். இனி ரிக், யஜுர், சாமவேதமும் அதர்வனமும் என்பாரும் உளர். அது பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தார் ஆகலின்'' என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்கு விசேட உரை எழுதியுள்ளார்.வியாசர் காலத்துக்கு முன்பே தைத்திரியம் ஆதியாகிய நான்கு வேதங்கள் இருந்தன என்பதும், அவற்றை இக்காலத்திற்கு ஏற்பத் தகுதியாக வியாசர் ரிக் ஆதியாகிய நான்மறைகளாக வகுத்தனர் என்பதும் நச்சினார்க்கினியரின் விசேட உரையாகப் பெறப்படுகின்றன.நான்கு வேதங்களையும் நன்கு அறிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியத்தின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. எனவே, வேதங்களுக்கு முந்தைய நூல் அன்று தொல்காப்பியம் என்பது தெளிவு.ஐந்திரம்:ஐந்திரம் என்பது சம்ஸ்கிருத மொழியில் எழுந்துள்ள இலக்கண நூல் என்று முனைவர் ச.வே.சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார். ரிக், யஜுர், சாம, அதர்வனம் ஆகிய வேதங்களுக்கு மிகவும் பின்னரே ஐந்திரம் எழுதப்பட்டது என்பதை மொழியியல் அறிஞர்கள் அறிவார்கள். ஆக, சிறப்புப் பாயிரத்தின் ஐந்திரம் என்ற சொல்லும் முனைவர் நெடுஞ்செழியன் கூற்றுரைக்கு ஆதரவாக இல்லை.ஐந்திரம் என்ற சம்ஸ்கிருத இலக்கண நூல் செய்திகளையும் கற்றறிந்தவர் தொல்காப்பியர் என்ற குறிப்பையும் அருள் கூர்ந்து நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.அந்தணர் மறைத்தே:தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பிறப்பியல் 20-ஆம் சூத்திரம் வருமாறு:எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்துசொல்லிய பள்ளி எழுதரு வளியின்பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்துஅகத்து எழுவளி இசை அரில்தப நாடிஅளபிற்கோடல் அந்தணர் மறைத்தே;அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே(உயிர், மெய், உயிர்மெய் முதலிய) எல்லா எழுத்துகளும் (பிறக்கும் முறையை முன்னைய நூலாசிரியர்கள்) விளக்கியிருப்பதனால், மேற்கூறிய (தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் என்னும்) எட்டு இடங்களிலும், உந்தியில் இருந்து எழுகின்ற உதானன் என்னும் காற்றினால் பிறக்கின்றன. (பரை, பைசந்தி, மத்திமை என்னும்) ஓசைகளின் பிறப்புடன், எழுத்துகளின் பிறப்பைச் சொல்லுமிடத்து, (மேற்கூறிய எட்டு உறுப்புகளும் உதானன் என்னும் காற்றும்) வெவ்வேறாக மாறுபட்டு அமையும் தன்மையால், மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசையைக் குற்றமற ஆராய்ந்து, எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல் என்னும் தன்மை உடையனவாகக் கொள்ளும் முறைமை, பார்ப்பனர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட முறைமை உடையதே ஆகும். அவ்வியல்பினை இங்கு கூறாமல், நெஞ்சத் தானத்தில் இருந்து எழுந்து, வெளியே நம் காதுகளில் கேட்கும்படி ஒலித்துப் பொருளை உணர்த்துகின்ற வைகரி ஓசையினது (எழுத்தினது) தன்மை அல்லது மாத்திரையினை மட்டுமே கூறுகின்றன''. தமிழ்ப் பேரறிஞர் ந.ரா. முருகவேள் இவ்வாறு பதப்பொருள் கூறியுள்ளார், இந்தச் சூத்திரத்திற்கு.வேதங்களின் தொன்மையையும், அவற்றால் விளக்கப்பட்ட ஓசைகளின் நுட்பங்களையும் தொல்காப்பியர் நன்கு அறிந்திருந்தார். அவர் இந்தச் சூத்திரத்தில் அகத்தெழு வளியிசை நன்று, புறத்திசை மெய்தெரி வளியிசை நன்று என உடம்பிலிருந்து காற்று வெளிப்பட்டு வருவதை இரண்டாக வகுத்தார்; அகத்தெழு வளியிசை அந்தணர் வேதங்களில் உள்ளது என்றார். அதாவது, உந்தியினின்றும், மூலாதாரத்தினின்றும் எழுவது யாதோ அது அந்தணர் மறைத்தே என்றார்.ஆறு செயல்கள்:தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் இருபதாம் சூத்திரம் ""அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்'' என்ற முதல் வரியுடன் தொடங்குகிறது. ""ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும்'' என்று இந்த வரிக்கு முனைவர் ச.வே.சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார்.ஓதல் - நான்கு வேதங்களையும் ஓதிக் கற்றல்.ஓதுவித்தல் - பிறருக்கு வேதங்களை ஓதிக் கற்பித்தல்.வேட்டல் - யாகங்களைச் செய்தல்.வேட்பித்தல் - பிறர் யாகங்களைச் செய்யுமாறு செய்தல். (யாகங்களைப் பிறருக்காகச் செய்தல் என்றும் ஆம்).ஈதல் - தம்மிடம் உள்ள பொருளைப் பிறருக்குத் தருதல்; ஏற்றல் - பிறர் தரும் பொருளை ஏற்றுக்கொள்ளுதல்.வேதங்களில் விதித்துள்ள வண்ணம் இந்த ஆறு செயல்களையும் தொல்காப்பியர் காலத்துத் தமிழகப் பார்ப்பனர்கள் செய்தார்கள். இதனாலேயே தொல்காப்பியர் இங்கு பதிவு செய்கிறார்.ஓத்து:தொல்காப்பியம்  பொருளதிகாரம் அகத்திணை இயல் 31-வது சூத்திரம் ""உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான'' என்பது ஆகும். வேதங்கள் உயர்ந்தோர்க்கு உரியவை என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். பொருளதிகாரம் செய்யுளியலில் 169-வது சூத்திரம் வருமாறு:நேரின மணியை நிரல்பட வைத்தாங்குஓரினப் பொருளை ஒருவழி வைப்பதுஓத்து என மொழிப உயர்மொழிப்புலவர்""ஓர் இனத்தைச் சார்ந்த மணிகளுள், தரத்தால் ஒத்த மணிகளை வரிசைபெற அமைத்துக் கோத்தல் போல, ஓர் இயலைச் சார்ந்த பொருள்களை ஒருவழி அமைத்து வெளிப்படுத்துபவை வேதங்கள்'' என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கும். பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இந்தச் சொல், இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதங்கள் எழுதப்பட்டவை அல்ல. அவை பரம்பரை பரம்பரையாக ஓதப்பட்டு வந்துள்ளன. எனவே, அவை ஓத்து என்று குறிப்பிடப்படுகின்றன.கீழ்க்கணக்கு நூல்கள்:""அந்தணர் ஓத்து உடைமை ஆற்ற மிக இனிதே'' என்று "இனியவை நாற்பது' நூலின் 7-வது பாடல் தெரிவிக்கிறது.பார்ப்பனர்கள் வேதங்களை மறவாது இருத்தல் மிக இனிது என்பது பொருள். ""இன்னா ஓத்திலாப் பார்ப்பான் உரை'' என்று இன்னா நாற்பது நூலின் 21-வது பாடல் குறிப்பிடுகிறது. ""வேதங்களை ஓதாத பார்ப்பனன் சொல் பயனற்றது'' என்பது பொருள்.""கூத்தும் விழவும் மணமும் கொலைக் களமும் ஆர்த்த முனையுற்றும் வேறிடத்தும் ஓத்தும் ஒழுக்கும் உடையவர் செல்லாரே; செல்லின் இழுக்கும் இழவும் தரும்'' - இது "ஏலாதி' என்ற நூலில் 62-வது பாடல்.இந்தப் பாடலிலும் ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கிறது.""மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்'' என்பது திருக்குறள். ""பார்ப்பனன் ஒருவன் தான் கற்ற வேதங்களை மறந்தான் ஆயினும், அவற்றை அவன் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் ஒழுக்கம் கெட்டால் இழிந்தவன் ஆகிவிடுவான்'' என்பது பொருள்.இனியவை நாற்பது, இன்னா நாற்பது, ஏலாதி, திருக்குறள் ஆகிய இவை அனைத்தும் சங்கம் மருவிய கால பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். ஆக, ஓத்து என்ற சொல் வேதங்களையே குறிக்கிறது என்பது தெளிவு.தொல்காப்பியம் வேதங்களுக்கு முந்தைய நூல் என்ற முனைவர் நெடுஞ்செழியனின் கூற்றுரை பிழையானது - ஏற்கத்தக்கது அன்று - என்று தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் உறுதியாகவே சுட்டுகின்றன.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue