இந்த வாரம் கலாரசிகள்


சில நாள்களுக்கு முன்பு வடலூர் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. ஞானசபையில் சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்துவிட்டு வெளியே வந்ததும், மனது பஞ்சுபோல லேசாகிவிட்ட உணர்வு. அண்ட சராசரங்கள் அனைத்துமே அருட்பெருஞ் ஜோதியின் தனிப்பெருங் கருணையினால் இயங்கும் உண்மையை உள்ளம் உணர நேர்ந்தது.அதுவரை சென்றுவிட்டு தவத்திரு ஊரன் அடிகளாரை தரிசிக்காவிட்டால், அது தமிழுக்கும் சமயத்துக்கும் செய்யும் அபசாரம். வள்ளலாரைத் தனது ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு துறவை வரித்துக்கொண்ட தமிழ்த் தொண்டர் ஊரன் அடிகளார்.சன்மார்க்க தேசிகன் என்றால் யாருக்கும் தெரியாது. அதுதான் அவருடைய தீட்சா நாமம். பூர்வாசிரமத்தில் திருச்சியில் நகரமைப்பு ஆய்வாளராக இருந்தவர், வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு அவரையே ஞானகுருவாக ஏற்று, தாமே துறவு பூண்டவர். கடந்த 40 ஆண்டுகளாக வள்ளலார் புகழ் பரப்புவதே தனது பிறவிப்பயன் என்று இயங்கும் இவரது இயக்கத்துக்கு வலுவும் ஊக்கமும் அளிப்பது அருட்செல்வர் நா.மகாலிங்கம்.ஊரன் அடிகளின் இருப்பிடம் நிறைய புத்தகங்கள். அடேங்கப்பா என்று வாய்விட்டு அலறாத குறையாக நான் அதிசயத்தில் சமைந்தேன். அரை நூற்றாண்டு காலச் சரித்திரத்தின் சுவடுகளை இவரது இருப்பிடத்தில் காணமுடிந்தது. திருவருட்பாவுக்கும், திருமந்திரத்துக்கும் இதுவரை வெளிவந்திருக்கும் அத்தனை பதிப்புகளையும் பத்திரப்படுத்தி வருகிறார்.76 வயதில் ஊரன் அடிகளை சற்று சோர்வடையச் செய்திருப்பது தகுந்த உதவியாளர் இல்லாமல் இருப்பதுதான். ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் அவரது நிழலாக அவரைத் தொடர்ந்த ராஜேந்திரனின் திடீர் மரணத்துக்குப் பிறகு அவருக்குச் சரியான உதவியாளர் யாரும் அமையவில்லை. 15 வயதில் அடிகளாரின் இரட்டை மாட்டு வண்டியை ஓட்டும் பையனாக வந்து சேர்ந்த ராஜேந்திரன், அவரது உதவியாளராக மாறிவிட்டிருந்தார். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனான ராஜேந்திரனுக்கு திடீரென்று மாரடைப்பு வந்தது விதியின் சதியல்லாமல் வேறென்ன?ஊரன் அடிகளின் எழுத்துப் பணி நம்மை வியக்கவைக்கிறது. இவரது "சைவ ஆதீனங்கள்' மற்றும் "வீர சைவ ஆதீனங்கள்' ஆகிய இரண்டு படைப்புகளும் தகவல் பெட்டகம். ஆவணப்பதிவு.அடிகளாருடன் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போவதே தெரியவில்லை. வடலூருக்குப் போய் ஊரன் அடிகளாருடன் ஒன்றிரண்டு நாள்கள் தங்கியிருக்க ஆசைதான். காலம் கைகூட வேண்டுமே...*******தென்னிந்தியாவைப் பொறுத்தவரை "மகாராஜா' என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது மைசூர் மகாராஜா மட்டுமே. அடுத்தாற்போல ஒரு சிலருக்கு, திருவிதாங்கூர் மகாராஜாவைப் பற்றித் தெரிந்திருக்கலாம். வடநாட்டில் உள்ளதுபோல பெரிய சமஸ்தானங்களோ, ராஜாக்களோ தென்னகத்தில் இல்லாமல் போனதற்குக் காரணம், முகலாயப் படையெடுப்பும் அதைத் தொடர்ந்து நிறுவப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சியும்தான்.ராஜாக்களைப் பற்றிய பிரமிப்பு மட்டும் நமக்கு இன்னமும் தொடர்கிறது. திரைப்படங்களில் கூட ராஜா ராணி கதைகள் என்றால், அதற்கு இப்போதும் வரவேற்பு காணப்படுகிறது. "மைசூர் மகாராஜா' என்கிற தொடர், குமுதம் ரிப்போர்டரில் வெளிவந்தபோதே எப்போது அடுத்த இதழ் வெளிவரும் என்று காத்திருந்து அந்தத் தொடரைப் படித்த பலரில் நானும் ஒருவன்.தொடராகப் படிக்கும் விஷயங்கள் புத்தகமாக வெளிவரும்போது அதே அளவு சுவாரஸ்யம் இருப்பதில்லை. காரணம், ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுவதுதானோ என்னவோ?மைசூர் சமஸ்தானத்தின் 550 ஆண்டு சரித்திரத்தை ஒரு நாவலைப் படிக்கும் சுவாரஸ்யத்துடன் படிக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் அந்த அரச குடும்பத்தின் செயல்பாடுகள் மட்டுமல்ல, அதை சுவைபட எழுதியிருக்கும் முகிலும்தான் காரணம்.ஹைதர் அலியும் திப்புசுல்தானும் இல்லாமல் போனால் மைசூர் ராஜவம்சத்துக்கு இத்தனை பெயரும் புகழும் கிடைத்திருக்குமா?  யோசிக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.*******பள்ளத்தூர் பழ.பழனியப்பன் பற்றி முன்பே ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன். பரோடா வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கம்பராமாயணத்துக்கு மூலமும் உரையும் எழுத முற்பட்டிருக்கும் செய்தியைக் குறிப்பிட்டு வியந்ததாக நினைவு. சுந்தரகாண்டத்துடன் நிறுத்திவிட்டிருந்த பழ.பழனியப்பன் இப்போது யுத்த காண்டத்துக்கும் உரை எழுதிப் பதிப்பித்துவிட்டார்.""ஒரு பாடலின் கருத்தையோ நிகழ்ச்சியையோ விளக்குமிடத்து, அதனோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் காப்பியத்தில் முன்னரோ, பின்னரோ இருந்தால், அவற்றை இணைத்துக் காட்டும் போக்கு இவ்வுரையாசிரியரின் உரைப்போக்கு என்று சொல்லலாம்''.பழ.பழனியப்பனின் கம்பராமாயண உரையைப் பற்றி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கம்பன் இருக்கைத் தலைவர் முனைவர் தெ.ஞானசுந்தரம் தெரிவித்திருக்கும் மேற்கூறிய கருத்தை எழுத்துப் பிசகாமல் நானும் வழிமொழிகிறேன்.*******நான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறேன் நல்ல பல கவிஞர்கள் சென்னை மாநகரத் தெருக்களில், "ஜோல்னா' பையோடு காணப்படுவதில்லை என்று. அவர்கள் கிராமத்துச் சிற்றோடை அருகில் அல்லது மஞ்சணத்தி மரநிழலில் அமர்ந்தபடி தங்கள் கற்பனைக்கு எழுத்து வடிவம் தந்தபடி வெளியில் தெரியாமல் உலவுகிறார்கள் என்று.அவர்கள் தாங்கள் கவிஞர்கள் ஆகிவிட்டோம் என்பதால் எழுதவில்லை. எழுதவேண்டுமே என்பதற்காகவும் எழுதவில்லை. தன்னுணர்வுக் கவிஞர்களான அவர்களது கவிதையில் இருக்கும் ஈரம் அலாதியானது. வலிந்து சம்ஸ்கிருத, ஆங்கில வார்த்தைகளை அள்ளிவீசி, தங்களது மேதாவிலாசத்தை வெளிப்படுத்த முனையாததுதான் அவர்களது சிறப்பு.விமர்சனத்துக்கு வந்த புத்தகக் குவியலில் "மிச்சமிருக்கும் ஈரம்' என்கிற கவிதைத் தொகுப்பு கண்ணில் பட்டது. எதார்த்தமான மொழி ஆளுமையுடன் கூடிய அந்தக் கவிதைத் தொகுப்பைப் படைத்திருப்பவர் கவிஞர் நெய்வேலி பாரதிக்குமார். நெய்வேலியில் கரி மட்டுமா புதைந்து கிடக்கிறது, கவிதையும்தான் என்பதை நிரூபிக்கும் "மிச்சமிருக்கும் ஈரம்' என்கிற தலைப்பிலான கவிதை வரிகள்.கடற்கரை, ஒரு முழக்கயிறுஇரயில் எதிர்படும் தண்டவாளம்பார்க்கும் போதெல்லாம்யாரோ அழைப்பதுபோல் தோன்றுகிறது...எல்லாக் கவலைகளும் மேலேறி அழுத்தஏதோ நினைவில் நடக்கையில்சிறுகல் தடுக்கி, கால் இடற...மரத்தடி நிழலுக்காக ஒதுங்கி நின்றயாரோ ஒரு கூடைக்காரப் பாட்டி"ஐயோ!... பாத்து நடப்பா' என்றுபதறும் அந்த ஒரு கணம்...ஒரு அங்குலம் அளவு பிடிப்பில்என்னைத் தடுத்தாள்கிறது...எங்கோ பெய்த மழையின் ஒரு துளிநாவின் நுனியை நனைப்பதுஎன் தாகத்தைத் தணிக்கபோதுமாயிருக்கிறதுஅவ்வப்போதுகவிதைகளைத் துளிர்க்கச்செய்கிறதுஎன்னுள்மிச்சமிருக்கும் ஈரம்...

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue