இந்த வாரம் கலாரசிகன்


முன்பே ஒரு முறை, "காலச்சுவடு' வெளியிட்டிருந்த எல்லீஸின் புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தேன். 1796-இல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் இளம் அதிகாரியாக சென்னை வந்து சேர்ந்த ஆங்கிலேயர்தான் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ். கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலை வெளியிடுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே, திராவிட மொழிகளின் தனித்தன்மை பற்றி அறிவித்தவர் இவர்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள பாட்லியான் நூலகத்தில், இவர் எழுதிய அச்சேறாத கட்டுரை ஒன்றில் தமிழுக்கும் ஹீபுரூ மொழிக்கும் உள்ள ஒற்றுமையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் எல்லீஸ். மனித வாழ்வு பற்றிய நூல்கள் தமிழில் உள்ள அளவு வேறு ஆசிய மொழிகள் எதிலுமே கிடையாது என்பது எல்லீஸின் கருத்து.பிரான்ஸிஸ் எல்லீஸ் திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களிலிருந்து தேர்தெடுத்த சில குறள்களை கவிதை நடையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். சில குறள்களை விளக்க, ஏனைய தமிழ் இலக்கியப் படைப்புகளிலிருந்து மேற்கோள்களை தந்திருப்பது மட்டுமல்ல, அந்த மேற்கோள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.எல்லீஸின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதியை அப்படியே புத்தக வடிவில் தொகுத்து அளித்திருக்கிறார் பேராசிரியர் பி. மருதநாயகம். தொல்காப்பியம் தொடங்கி, பல காப்பியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர் பாடல்கள் என்று அனைத்துப் பழந்தமிழ் இலக்கியங்களையும் ஓலைச்சுவடிகளிலிருந்து படித்துத் தேர்ந்தவர் எல்லீஸ் என்பதை அவரது "திருக்குறள் விளக்கம்' தெளிவுபடுத்துகிறது.இளம் வயதிலேயே எதிர்பாராத முறையில் 1819-இல் எல்லீஸ் ராமநாதபுரத்தில் மரணமடையாமல் இருந்திருந்தால், தமிழுக்கு இன்னும் பல நல்ல ஆய்வுகளை அளித்திருக்கக் கூடும்.
*******
எல்லீஸின் திருக்குறள் பற்றி எழுதியவுடன் எனது மனம் திருச்சிக்குத் தாவியது.கடந்த மாதம் புதுக்கோட்டை கம்பன் விழாவுக்குப் போவதற்காக திருச்சியில் தங்க நேர்ந்தது. சிலப்பதிகாரத்தில் ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டது. நிருபர்கள் ஜெயப்பிரகாஷ், வைத்திலிங்கம் இருவரிடமும் யாரிடமாவது சிலப்பதிகாரம் இருந்தால் வாங்கி வர வேண்டினேன். அவர்கள் சிலப்பதிகாரத்தை மட்டும் கொண்டுவரவில்லை. திருக்குறளையும் சேர்த்தே அழைத்து வந்துவிட்டனர்.எனக்காகச் சிலப்பதிகாரப் புத்தகத்துடன் வந்திருந்தார் திருச்சியைச் சேர்ந்த "திருக்குறள்' முருகானந்தம். திருக்குறளைப் பரப்பி வருவதால் "திருக்குறள்' முருகானந்தம் என்றழைக்கப்படுகிறார் எனும்போது அவரது குறள் தொண்டு எத்தகையது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக "திருக்குறள் அஞ்சல்வழிக் கல்விநிலையம்' ஒன்றை நிறுவி இளையதலைமுறையினர் திருக்குறளைப் படிக்க ஊக்குவிக்கும் தமிழ்ப்பணி இவருடையது. காந்திய சிந்தனையை அஞ்சல்வழிப் பாடமாகக் கற்றுத் தருவது பற்றிக் கேள்விப்பட்ட முருகானந்தமும் நண்பர்களும் திருக்குறளையும் ஏன் அஞ்சல்வழியில் பயிற்றுவித்து, ஒரு தேர்வு நடத்தி "திருக்குறள் இளம் புலமையர்' என்கிற சான்றிதழையும் வழங்கக் கூடாது என்ற முயற்சியில் இறங்கினார்கள்.இந்த முயற்சிக்குக் குன்றக்குடி ஆதீனத்தின் ஆசியும் கிடைத்தபோது அவர்களது உற்சாகம் கரை புரண்டது. சில புரவலர்கள் இதற்கான பாடத்திட்டத்தை அச்சடித்துத் தர முன்வந்தனர்.மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, மணப்பாறை என்று தங்களது தொடர்புகளைப் பயன்படுத்தி, திருக்குறள் அஞ்சல்வழிக் கல்வி மையம் பணியை விரிவுபடுத்திக் கொண்டது. தஞ்சைப் பகுதிக்கான தேர்வை திருவையாறு மன்னர் கல்லூரியிலும், திருச்சிக்கான தேர்வை கி.ஆ.பெ. விஸ்வநாதம் மேல்நிலைப் பள்ளியிலும் நடத்துகிறார்கள். "எங்களது அஞ்சல்வழிக் கல்விக்கு எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. இலவசமாகப் புத்தகங்கள் தருகிறோம்' என்று கூறும் முருகானந்தம், தேர்வின்போது ஒரு சிறிய கட்டணம் மட்டும் வசூலிப்பதாகக் கூறினார். "இலவசமாகச் சான்றிதழ் கிடைக்கிறது என்று சொன்னால் அதற்கு மரியாதையே இல்லாமல் இருக்கிறது என்று தோன்றியது. அதனால்தான் இந்தக் கட்டணம். சான்றிதழ்கள் குன்றக்குடி ஆதீனகர்த்தரின் கையொப்பத்துடன் வழங்கப்படுகிறது' என்று மேலும் விளக்கினார் அவர்.தமிழகம் முழுவதும் திருக்குறள் அஞ்சல்வழிக் கல்வி மையம் ஓர் ஆலமரம் போலக் கிளை விட்டுப் படர வேண்டும் என்பது "திருக்குறள்' முருகானந்தத்தின் அவா. வேறு மாவட்டங்களில் யாராவது தொடங்க விரும்பினால் இலவசமாகப் பாடத்திட்டத்தை அனுப்பித் தரவும் வழிகாட்டி உதவவும் தயாராக இருப்பதாகக் கூறுகிறார் அவர். 'திருக்குறள்' முருகானந்தத்தின் தொடர்புக்கான எண் 9994904454."திருக்குறள்' முருகானந்தத்தின் தமிழ்ப் பணியைப் பாராட்ட எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரிந்தது. அது, திருக்குறள் அஞ்சல்வழிக் கல்வி மையம் பற்றி எழுதுவது. இப்போது, "திருக்குறள்' முருகானந்தத்தின் ஆசை என்னையும் தொற்றிக் கொண்டு விட்டது. ஆலமரம் போல உலகமெல்லாம் கிளைவிட்டுப் படரவேண்டும் திருக்குறள் அஞ்சல்வழி கல்வி மையம்...ஆமாம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித் துறை ஏனைய திருவள்ளுவர் கழகங்கள் போன்றவை இந்த முயற்சிக்கு உறுதுணையாகச் செயல்படக் கூடாதோ..?
*******
பாரதி மோகன் என்றொரு கவிஞர். இவரது "என் காதல் கதைகளும் நீயும்' என்கிற கவிதைத் தொகுப்பை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. தூத்துக்குடி வானொலி நிலையத்தின் ஒலிபரப்புப் பொறுப்பாளர் எம். ராதாகிருஷ்ணன் என்பவர் "எந்தத் தலைப்புக் கொடுத்தாலும் சில நிமிடங்களில் கவிதை சமைக்கும் இவரின் ஆற்றல் பாராட்டுக்குரியது' என்று பின் அட்டையில் கவிஞர் பாரதி மோகனுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருப்பதைப் படித்த பின்னும் அந்தக் கவிதைகளைப் படிக்காமல் இருக்க முடியுமா? படித்தேன். படித்ததில் பிடித்த கவிதை இதோ: இயற்கையே எய்தினால்? நதி எங்கள் வாழ்வென்று நாகரிகம் வளர்த்த கரையில் நான் என்ன சொல்ல விதியென்றானது நதியின் நிலையே ஓடையாய் ஒரு ஓரத்தில் அடடா நாளைய மனிதனுக்கு மிச்சம் என்ன இருக்கும்  இயற்கையே இயற்கை எய்தினால்!

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்