Skip to main content

அமீர் குஸ்ரு எனும் வரலாற்றுப் புலவன்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
"அவர் வரலாறு எழுதவில்லை, கவிதை எழுதியிருக்கிறார்" - இப்படி அமீர் குஸ்ரு பற்றிக் கூறியிருக்கிறார் தற்காலத்திய மேற்கத்திய வரலாற்றாளர் ஒருவர். இதைப் பாராட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் அவரது கவிதைகளில் வரலாறு ஒளிந்து கொண்டிருக்கிறது அல்லது வரலாற்றை அவர் கவித்துவமாக எழுதியிருக்கிறார்.
இன்றைய உத்தரப்பிரதேசத்தில் கி.பி.1253ல் பிறந்தவர் குஸ்ரு. தந்தையார் ஒரு ராணுவத் தளபதி. பெர்சிய மொழியில் கவிதைகளை எழுதித் தள்ளினார் குஸ்ரு. ஐந்து லட்சம் கவிதைகளை எழுதியதாகச் சொல்லப்படுகிறது.
இது உயர்வு நவிற்சி அணியாக இருந்தாலும் தற்போது கிடைத்தவற்றை வைத்துப் பார்த்தாலே பிரமாதமான கவித்துவ ஆற்றல் பெற்றிருந்தார் என்பது நிச்சயமாகிறது. "இந்தியக் கிளி" எனப்பட்ட இந்த மனிதர் அனேகமாக அனைத்துக் கவிதை உத்திகளையும் பரிசோதித்துப் பார்த்தவர். "சபாக்கி ஹிந்த்" என்று ஓர் இந்திய பாணியை பெர்சியத்திற்கு வழங்கியவர்.

தான் இந்தியாவில் பிறந்தவர் என்பதில் மனிதருக்கு ஏகப்பெருமை. "நான் இரண்டு காரணங்களுக்காக இந்தியாவைப் புகழ்கிறேன் என்று, இங்குதான் நான் பிறந்தேன்; இது நமது நாடு. சொந்த நாட்டை நேசிப்பது ஒரு முக்கியமான கடமை... அப்புறம் இந்தியா சொர்க்கத்தைப் போன்றது. இதன் சீதோஷ்ணநிலை குராசனை விடச் சிறப்பானது... பசுமை நிறைந்தது, ஆண்டு முழுவதும் பூக்கள் பூத்துக் குலுங்கும்... இங்குள்ள பிராமணர்கள் அரிஸ்டாட்டிலைப் போன்ற அறிவாளிகள்; பல்துறை விற்பன்னர்கள் இங்கு உண்டு" - இப்படி இந்தியாவைப் பிரமாதப்படுத்திப் பேசியிருக்கிறார் கவிஞர். முஸ்லிம்களுக்கு தேசபக்தி இருக்காது. மதபக்தி மட்டுமே இருக்கும் என்கிற அநியாயக் குற்றச்சாட்டுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே பதிலடி இருந்திருக்கிறது.

சமஸ்கிருதம் கற்று தனது மேதமையைக் காட்டியிருந்தார் அல்பெரூணி என்றால், அப்பொழுதுதான் எழுந்துவந்த இந்திமொழியில் அக்கறை செலுத்தியிருந்தார் அமீர்குஸ்ரு. அதை "ஹிந்தவி" என அழைத்தவர் அதிலும் கவிதைகள் எழுதினார். நமக்கு கிடைத்துள்ள "தாரிக்கி அலாய்" எனும் சரித்திர நூலில் நிறைய இந்தி வார்த்தைகள் உள்ளன. இதில் ஆச்சரியம் இல்லை. பெர்சிய - இந்தி அகராதி நூலை எழுதியவர் இவர். வடஇந்தியாவில் உருது மொழி வளர்வதற்கு இந்த நூலும் பயன்பட்டது. அவர் எந்த அளவுக்கு உள்ளூர் வாழ்வோடு ஒன்றிணைந்து போயிருந்தார் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது.

இவருடைய காலத்தில் டில்லியில் சுல்தான்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மறுபுறம் இந்தியாவிற்குள் நுழைய முகலாயர்கள் முஸ்தீபு செய்து கொண்டிருந்தார்கள். ஒருமுறை குஸ்ருவை அவர்கள் கைதியாகப் பிடித்துவிட்டார்கள் என்று கூடச் சொல்லப்படுகிறது. "கிரானுஸ் சாதேன்" என்கிற அவரது நூலில் முகலாயர்கள் படையெடுக்கப்போகிறார்கள் என்கிற செய்தியைக் கேட்டவுடன் இங்கிருந்தவர்கள் எப்படித் துடித்தார்கள் என்பது மிகுந்த கவித்துவத்துடன் வருணிக்கப்பட்டுள்ளது-

"வில்லிலிருந்து புறப்பட்ட
அம்பின் முனை மண்ணில் குத்திய வேகத்தில்
தூதர்கள் வந்தார்கள்.
எல்லையத் தாண்டி முகலாயர்கள்
வந்துவிட்டார்கள் என்றார்கள்.
பாலைவன மணலின் அடர்த்தியாய்
நிறைந்திருக்கிறது அவர்களது படை,
கொப்பரையின் கொதிக்கும் நீராய்
துடிக்கிறது அவர்களது படை என்றார்கள்"

எதிரியே என்றாலும் உள்ள நிலைமையைச் சொன்னார்கள் தூதர்கள். வரும் பகை கடுமையானது என்றாலும் அதைக் கேட்ட டில்லி சுல்தான் மிரளவில்லை. அவன் துணிவோடும், ஆவேசத்தோடும் பேசினான். சிங்கமாய் கர்ஜித்தான்-

"நான் ராஜா
எதிரிகளின் கோட்டைகளை அழிப்பவன்.
ராஜாளியின் காட்டில் கால்வைக்க
ஆந்தைக்கு துணிவு வரலாமா?
மானைத் துரத்திக் கொண்டு நாய் ஓடலாம்,
சிங்கத்தை எதிர்கொள்ள அதால் முடியுமா?
ஹிந்த் ராஜாக்களிடமிருந்து
யானைகளாக, பணமாகக்
கப்பம் வசூலிப்பவன் நான்.
ஒரு சமயம் குஜராத்திற்கு ஏவியும்
ஒரு சமயம் தியோகளுக்கு ஏவியும்
எனது படைக்கு நான் வேலை தருகிறேன்
எனது வேகக் குதிரைகள் எல்லாம்
திலாங்கிலிந்து வந்தவை.
எனது மத யானைகள் எல்லாம்
வங்காளத்திலிருந்து வந்தவை.
மால்வாவிலும் சஜ்நகரிலும்
எனது செல்வம் பாதுகாக்கப்பட்டுள்ளது
எனது சொகுசு ஆடை
கிதாவிலிருந்து வந்தது.
சின் எல்லைகள் எனது இடுப்புக்
கச்சையில் இறுக்கப்பட்டுள்ளன.
பொதி போன்று துணி போட்டுள்ள இந்த
மோசடியான இனத்தவரின் முன்பு
நான் எனது தலைப்பாகையை அகற்றுவதா?
அவர்களது படையின் எலும்புகளை
எனது ஆடைக்கு குஞ்சலங்களாக மாட்டுவேன்"

இதுதான் கவிதையில் வரலாறு அல்லது வரலாற்றைக் கவிதையாகத் தருவது. இதைப் படித்துவிட்டுத்தான் வறட்சியான வரலாற்றாளர்கள் சிலர் மிரண்டு போனார்கள். துவக்கத்தில் சொன்னது போல குஸ்ரு கவிதை எழுதியிருக்கிறார் என்று அவரது கணக்கை முடிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், குஸ்ரு கவிஞர் மட்டுமல்லாது வரலாற்றாளரும் கூட என்பதை இத்தகைய எழுத்துக்களும் வேறு சில உரைநடை நூல்களும் உணர்த்திய வண்ணம் உள்ளன. அதிலே முக்கியமானது ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட "தாரிக்கி அலாய்". அதிலும் தமிழர்களுக்கு இது முக்கியமான சரித்திர ஆவணம்... ஏன் தெரியுமா?

இந்த நூல் 1296ல் அலாவுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்ததலிருந்து 1310ல் அவரது படை மாபாரைப் பிடித்தது வரையிலான செய்திகளைச் சொல்கிறது. மாபார் என்றால் தமிழ்நாடு. மதுரை வரை மாலிக்காபூர் வந்தான் அல்லவா, அது இதில் உள்ளது.

சிறிய நூல் என்றாலும் முழுக்க முழுக்க சரித்திர நூல். எழுதியவர் ஒரு கவிஞர். ஆகவே ஒரு சித்து விளையாட்டு நடத்தியிருக்கிறார். நூலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட துறைக்கான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, கட்டடக் கலைக்கான வார்த்தைகள் ஒரு பகுதிக்கும், கரங்களின் அமைப்பு மற்றும் சக்தியைக் குறிக்கும் வார்த்தைகள் இன்னொரு பகுதிக்கும், சதுரங்க விளையாட்டுக்கான வார்த்தைகள் வேறொரு பகுதிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன!

ராஜபுதன அரசாகிய ரன்தம்போரைப் பிடிக்க அலாவுதீன் கில்ஜி போனபோது அவனோடு சென்றார் குஸ்ரு. அந்தக் கோட்டையையும், அதைப் பிடிக்க நடந்த யுத்தத்தையும் வருணித்திருக்கிறார். முற்றுகை மூன்று மாத காலம் நீடித்தது. கோட்டைக்குள் உணவுத் தட்டுப்பாடு வந்தது. "ஒரு அரிசி மணிக்காக இரண்டு தங்க மணிகளை விலையாகக் கொடுத்தார்கள்" என்கிறார் குஸ்ரு. இனியும் கோட்டைக்குள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. எதிரிகளைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் ராஜபுத்திரர்கள். அப்போதுதான் அது நடந்தது.

"ஒருநாள் இரவு மலையின் உச்சியில் அந்த ராஜா தீயைப் பற்ற வைத்தார். பற்றியெரிந்த நெருப்பில் தனது பெண்களையும் குடும்பத்தாரையும் தூக்கிப் போட்டார். சில விசுவாசமிக்க வீரர்களோடு எதிரியைச் சந்திக்க வந்தார். விரக்தியில் அவர்கள் தங்களது வாழ்வைத் தத்தம் செய்தார்கள்" என்கிறார் குஸ்ரு. இது நடந்தது 1301ல்.

யுத்தத்தில் தோல்வியைச் சந்திக்கப் போகிறோம் என்று தெரிந்தே அதைச் சந்திக்கப் போகிற ராஜ புதனத்து ராஜா அதற்கு முன்பாகத் தனது வீட்டுப் பெண்களைத் தீக்கிரையாக்கி விடுவார். இதற்குப் பெயர் "ஜவ்ஹர்". குஸ்ருவின் எழுத்தே பெர்சிய மொழியில் இதுபற்றி எழுதப்பட்ட முதல் வருணனை. 14ம் நூற்றாண்டு பிறந்திருந்த வேளையிலும் இந்து ராஜகுடும்பத்து மாதர்களின் நிலை இப்படியாகத்தான் இருந்தது.

பெண்களைச் சக உயிர்களாக மதிக்காமல், தமது உடைமையாகக் கருதிய ராஜா தனக்குப் பயன்படாத எதுவும் தனது எதிரிக்குப் பயன்படக்கூடாது எனும்படியாகவே செயல்பட்டார். யுத்தம் என்றால் பெண்களின் நிலை சொல்லத்தரமற்றதாகவே இருந்தது. இருதரப்பில் ஏதோவொரு தரப்பின் பெண்கள் யுத்தக் கைதிகளாக ஆவார்கள் அல்லது எதிரிகளால் கொலை செய்யப்படுவார்கள். ராஜபுதனத்து அரசர்களைப் பொறுத்தவரை மூன்றாவது மார்க்கம் ஒன்றைக் கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். அதுதான் தம்வீட்டுப் பெண்களைத் தாங்களே எரித்துவிடுவது, தங்களது மரணத்திற்குப் பிறகு உடன்கட்டை ஏற வேண்டியவர்கள்தானே என்று, அதற்கு முன்பு அந்தக் காரியத்தைச் செய்துவிட்டு யுத்தத்திற்கு கிளம்பினார்கள். இதற்கு என்று சாஸ்திர சம்மதம் இருந்தது. இப்போதும் இதை மகாவீரச் செயல் எனப்போற்றுகிற வரலாற்றாளர்களும் இருக்கிறார்கள்.

மாபார் எனப்பட்ட தமிழ்நாட்டுக்கு மாலிக்காபூரை அனுப்பிய அலாவுதீன் கில்ஜியின் முடிவு குஸ்ருவுக்கு பெரும் வியப்பைத் தந்தது. "12 மாதங்கள் பயணம் செய்தால்தான் மாபாருக்குப் போக முடியும். அவ்வளவு தூரம் அது டில்லியிலிருந்து" என்று அதற்குரிய காரணத்தையும் தந்திருக்கிறார். மதுரையிலிருந்து டில்லிக்கு இப்பொழுது ரயிலில் 40 மணி நேரத்தில் போய்விடலாம். அன்றோ 12 மாதங்கள் பிடித்தது. அன்றும் இன்றும் தூரம் ஒன்றுதான். ஆனால் நேரம் மாறிப்போனது. இப்பொழுது டில்லி எவ்வளவோ கிட்டே! வெளியின் அளவு உண்மையில் காலத்தைக் கொண்டே தீர்மானமாகிறது. சகலமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கிறது. எப்படியோ 1310ல் டில்லியைவிட்டு மாலிக்காபூர் தலைமையில் மாபாரை நோக்கிப் படை புறப்பட்டது.

தமிழ்நாட்டிற்குள் நுழையும் முன் பாதி வழியில் நின்று அந்த நாட்டு நிலைமையை விசாரித்தான் மாலிக்காபூர் அவனுக்குத் தெரியவந்த செய்தி என்று குஸ்ரு கூறுகிறார்- இதுவரை சுமூகமாக இருந்த மாபாரின் ராஜாக்களாகிய மூத்தவன் வீரபாண்டியனும், இளையவன் சுந்தரபாண்டியனும் இப்போது மோதிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட துவார சமுத்திரத்தின் ராஜா பல்லாளதேவன் அவர்களது ஊர்களைப் பிடிக்கவும், வியாபாரிகளைக் கொள்ளையடிக்கவும் முடிவு செய்து படை கொண்டு புறப்பட்டான். ஆனால் முகமதியப் படை வருவது தெரிந்ததும் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிவிட்டான். "வடக்கே சுல்தான்களின் ஆட்சி வலுப்பட்டு வருவது தெரிந்தும் தெற்கே அண்ணன் தம்பிகள் அடித்துக் கொண்டார்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டைக் கைப்பற்றத் திட்டம் போட்டான் இன்னொரு இந்து மன்னன். மாலிக்காபூருக்கு இது வசதியாக இருந்தது.

மாலிக்காபூரின் படை வலிமையை அறிந்து கொண்ட பல்லாளதேவன், சமரசத்திற்கு ஆள் அனுப்பியதாகக் குஸ்ரு கூறுகிறார். "பிசாசு போன்ற குதிரைகள் வேண்டுமா, பிரம்மாண்டமான யானைகள் வேண்டுமா, தியோகிரில் கைப்பற்றப்பட்டது போன்ற அரிய பொருட்கள் வேண்டுமா, எல்லாம் இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள்" என்றானாம் அந்த ஆள். தளபதியோ முகமதியத்திற்கு மாற வேண்டும் அல்லது ஜிம்மியாக (முஸ்லிம்களின் பாதுகாவலை ஏற்றுக் கொண்டவனாக) இருக்க வேண்டும், அதற்குரிய வரியைக் கட்ட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும் என்று பதில் சொன்னான். இந்தப் பதிலைக் கேட்ட மன்னவன் சொன்னானாம் "இருப்பதை எல்லாம் கொடுத்து விடுகிறேன், எனது பூணூலை மட்டும் விட்டுவிடுங்கள்".

முடிவில் துவாரசமுத்திரத்தின் மன்னன் சகலத்தையும் மாலிக்காபூரிடம் கொடுத்துவிட்டு தனது மதத்தை மட்டும் காப்பாற்றிக் கொண்டான். "கைப்பற்றப்பட்ட யானைகளும் குதிரைகளும் தலைநகருக்கு அனுப்பப்பட்டன" என்று கதையை முடிக்கிறார் குஸ்ரு.

துவார சமுத்திரம் என்பது இன்றைய கர்நாடகம். அங்கிருந்து புறப்பட்ட மாலிக்காபூர் மதுரை வந்து சேர்ந்தான். வந்த போது நகரம் காலியாகக் கிடந்தது. ராஜா சுந்தரபாண்டியன் ராணிமார்களோடு ஓடி ஒளிந்து கொண்டான், குஸ்ரு எழுதுகிறார் - "தான் கைப்பற்றிய யானைகளின் வரிசையை மாலிக் பார்வையிட்ட போது அது மூன்று பரசங்குகளுக்கும் அதிக தூரமாக இருந்தது. அவற்றின் எண்ணிக்கை 512. மேலும், அரேபிய, சிரிய நாட்டுக் குதிரைகள் 5 ஆயிரம். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம் என்று ஐநூறு மன் ஆபரணங்கள் சிக்கின". பெரும் கொள்ளையோடுதான் மாலிக்காபூர் திரும்பினான்.

1310ல் டில்லியை விட்டு கிளம்பிய மாலிக்காபூர் 1311ல் மதுரையைத் தாக்கினான். அங்கிருந்து புறப்பட்டு டில்லியைப் பத்திரமாக அடைந்தான். அவனுக்கு கோலாகல வரவேற்பு காத்திருந்தது. குஸ்ரு எழுதுகிறார் -  "தங்க அரண்மனைக்கு முன்பாக பொது தர்பார் நடத்தினார் சுல்தான் அலாவுதீன். பிரபுக்கள் அனைவரும் அவரவர் தகுதியின்படி வலதுபுறமும் இடதுபுறமும் நின்றார்கள். மாலிக் கைப் காபூர் ஹசார் தினாரி, அவரோடு சென்ற அதிகாரிகளோடு, சுல்தான் முன்பு தோன்றினார். கொண்டுவரப்பட்ட பெரும் செல்வம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சுல்தான் பெரும் மகிழ்ச்சி கொண்டார். வீரர்கள் கவுரவிக்கப்பட்டார்கள். தர்பார் கலைக்கப்பட்டது" பிறருடையதைத் தனி மனிதன் கைப்பற்றினால் அது கொள்ளை. அதையே ஒரு ராஜா செய்தால் அது படையெடுப்பு, வெற்றிப் பெருமிதம். நிலப்பிரபுத்துவ ஆட்சிக் காலம் இப்படியாகவே இருந்தது.

அலாவுதீன் கில்ஜி 1316ல் இறந்ததும் அவனது இதர பிள்ளைகளைச் சிறையிலடைத்துவிட்டு அல்லது குருடாக்கிவிட்டு ஒரு சிறு பிள்ளையை மட்டும் அரியமணையில் உட்கார வைத்து ஆட்சியை தான் நடத்தத் துவங்கினான் மாலிக்காபூர். விரைவிலேயே இவனும் அரண்மனைக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டான். அது தனிக்கதை. எனினும் குஸ்ரு தனது நூலை "மங்கலகரமாகவே" முடித்துவிட்டார் - அதாவது இவனுக்காக டில்லியில் தனி தர்பார் நடத்தப்பட்டதோடு!

புலவர்கள் பலரும் சில புரவலர்களை நம்பியிருந்தார்கள் என்பதைத் தமிழகம் அறியும். இந்த வரலாற்றுப் புலவனின் நிலையும் இதுதான். இவர் டில்லி சுல்தானை நம்பியிருந்தார். அலாவுதீன் கில்ஜியின் சில கொடூரங்களை குஸ்ரு கூறவில்லை என்று விமர்சிப்பவர்களுக்கு தற்கால வரலாற்றாளர் அஸ்கரி தரும் பதில் - "நமது கவிஞர்- வரலாற்றாளரின் அறிவுசார் நாணயம் பற்றிக் கேள்வி எழுப்புவதற்கு முன்பு அன்று நிலவிய சர்வாதிகார, பழிவாங்கும் ஆட்சியாளர்களின் போக்கை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்".

இத்தகைய இக்கட்டான சூழலின் மத்தியில்தான் குஸ்ரு எழுதினார். எனினும் இவரது நண்பரும் அக்காலத்திய பிரபல வரலாற்றாளருமான ஜியாவுதீன் பரணீ இவரது எழுத்துக்களைப் பயன்படுத்தியதிலிருந்து, தனது கணிப்புகளை இவரது எழுத்துக்களை மேற்கோள் காட்டி உறுதிப்படுத்தியதிலிருந்து குஸ்ரு வெளிப்படுத்திய வரலாற்று உணர்வு மெய்யானதே என்பதை நன்கு உணரலாம்.

ஆட்சியாளர்களைப் பகைத்துக் கொள்ளாமல் எழுதவேண்டியிருந்தது என்றாலும் குஸ்ருவுக்கென்று ஓர் ஆன்மிக குரு இருந்தார். அவர்தான் ஷேக் நிஜாமுதீன் அவுலியா. அந்தக் காலத்தில் டில்லியில் இவர் மிகப் பிரபலமானவர். சூபி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இவரது வாக்கு பலித்துவிடும் என்று பாமரர்களால் நம்பப்பட்டது. இவரை மிரட்டிக் கொண்டிருந்தான் சுல்தான் கியாஜுதீன் துக்ளக். "வெளியூரிலிருந்து வந்ததும் முதல் வேலை உன்னை ஒழித்துக் கட்டுவதுதான்" என்று சொன்னான். அப்போது நிஜாமுதீன் சொன்ன வாக்கு: "சுல்தானுக்கு டில்லி வெகுதூரம்". உண்மையிலும் ஒரு படையெடுப்பை நடத்தி முடித்து டில்லி திரும்பும் வழியில் வரவேற்புக் கொட்டகை நொறுங்கி விழுந்து மாண்டு போனான் அந்த சுல்தான்! யதேச்சையாக நடந்தது என்று இப்போது வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள். அன்று அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிஜாமுதீன் மீது குஸ்ரு எந்த அளவுக்கு பக்தி கொண்டிருந்தார் என்றால் 1,325ல் அவர் இறக்கவும், அதைக் கேள்விப்பட்ட குஸ்ரு மறுநாளே மாண்டுபோனாராம். இது உண்மையோ பொய்யோ நாமறியோம். ஆனால் டில்லியில் நிஜாமுதீன் அவுலியா புதைக்கப்பட்டுள்ள அதே வளாகத்தில்தான் அமீர் குஸ்ருவின் சமாதியும் உள்ளது. நிஜாமுதீன் என்று இப்போதும் அழைக்கப்படுகிறது அந்தப் பகுதி. டில்லி சென்றிருந்த போது குஸ்ருவின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினேன். மதுரைப் படையெடுப்பை அவர் வருணித்திருந்தது இந்த மதுரைக்காரனின் நெஞ்சில் அப்போது படபடவென்று ஓடியது.

அந்த வளாகத்திற்குப் பக்கத்திலேயேதான் சக்கரவர்த்தி ஹூமாயூனின் பிரம்மாண்டமான கல்லறை உள்ளது. அங்கே யாரும் பக்திபூர்வமாகச் செல்வதில்லை. இங்கோ ஏகப்பட்ட கூட்டம். உள்ளே நுழைவதற்கு முன்பு வரிசையாகப் பூக்கடைகள். ஒரு கடையில் பூக்களை வாங்கிக் கொண்டு அங்கேயே செருப்பை  விட்டு விட்டு சமாதிகளை நோக்கிச்சென்றார்கள். என்னை அழைத்துப்போன உள்ளூர்க்காரர் பூக்களை வாங்கவில்லை, செருப்புகளை விட மட்டும் ஒரு கடையைத் தேர்ந்தெடுத்தார். திரும்பி வந்ததும் செருப்புகளை மாட்டிக் கொண்டே அதற்குக் காசு கொடுத்தார். கடைக்காரர் கடைசி வரை வாங்க மறுத்துவிட்டார். அவர் பூ வியாபாரியே தவிர செருப்புகளுக்கு வாடகை வசூலிப்பவர் அல்ல. எனது அந்த இந்து நண்பருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. காரணம் வரும்போது என்னை அவர் எச்சரித்துக் கொண்டே வந்தார். "இவர்கள் மோசமானவர்கள், பர்சைப் பத்திரமாக வைத்திருங்கள்". வேடிக்கை என்னவென்றால், டில்லியிலேயே இருந்தும் இதுவரை தான் இங்கு வந்ததில்லை என்றும் என்னிடம் சொல்லியிருந்தார். ஆனாலும் வேற்று மதத்தவர் என்றால் தப்பபிப்பிராயம்.

இத்தகைய மாச்சரியங்கள் என்று ஒழியுமோ? கற்பிதமான மனத்தடைகள் உடைபட நேற்றைய, இன்றைய மனிதர்களை மெய்யாலும் படித்துக் கொள்வது அவசியத்திலும் அவசியம்.

 - அருணன்
(செம்மலர் அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)
Bookmark and Share

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

Comments (2)
  • chitra
    இது போல் நிறைய எழுதுங்கள் அருணன் சார். அப்படியாவது எம் மனத்தடைகள் உடையட்டும். சரித்திரம் தான் எத்தனை சுவாரசியமானது.
Dr. V. Pandian
// பெண்களைச் சக உயிர்களாக மதிக்காமல், தமது உடைமையாகக் கருதிய ராஜா தனக்குப் பயன்படாத எதுவும் தனது எதிரிக்குப் பயன்படக்கூடாது எனும்படியாகவே செயல்பட்டார். // இவை மிகவும் வக்கிரமான வரிகளாகத் தெரிகின்றன. தற்போது ஈழத்தில், சிங்களனிடம் மாட்டிக் கொண்டு, தமிழப் பெண்கள் படும் பாட்டைப் பார்த்த பிறகும், இவ்வளவு வக்கிரத்தோடு அக்கால மன்னர்களைக் கட்டுரையாளர் விமர்சிப்பது, கட்டுரையாளரின் மனம் "வௌ்ளையானதல்ல", அது சிவந்தது என்பதைத் தௌிவாகக் காட்டுகிறது. செம்மலர், "செம்மையான" மலரல்லவே! "சிவந்த" மலர்தானே! அதனால் தான் குஸ்ருவைக் காப்பாற்ற மட்டும் தவறவில்லை! கீழே எடுத்துக் காட்டப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்! // "நமது கவிஞர்- வரலாற்றாளரின் அறிவுசார் நாணயம் பற்றிக் கேள்வி எழுப்புவதற்கு முன்பு அன்று நிலவிய சர்வாதிகார, பழிவாங்கும் ஆட்சியாளர்களின் போக்கை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்". // தமிழகத்தில் பல இடங்களில் "தீப்பாஞ்சாங் குளங்கள்" உள்ளது தெரியுமா? தமது மானத்தையும், மறியாதையையும் காக்க வேண்டி மொத்த ஊருமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வரலாறுகள் தமிழகத்திலும் நிறைய உண்டு!

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்