தமிழைப் பிழையின்றி பேசுவோம், எழுதுவோம்!


செம்மொழித் தமிழ் என்பதன் அனைத்து விளக்கங்களும் செந்தமிழ் என்னும் சொல்லுள் அடக்கம். "தன்னேரிலாத தமிழ்' என்னும் நம் தாய்மொழி, இந்நாளில் செந்தமிழாக இல்லாமல் சிதைந்த தமிழாக மாறிவருகிறது. நம் மக்கள் பேச்சு வழக்குகளிலும், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், திரைப்படம் முதலிய ஊடகங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் தமிழ் சிதைக்கப்பட்டு வருகிறது.தமிழ்மொழி தமிழாசிரியர்களுக்கு மட்டுமோ, தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிக்காரர்களுக்கு மட்டுமோ சொந்தமன்று; தமிழர் அனைவர்க்கும் உரிமையுடைய அரிய கருவூலம் அது. தமிழில் பேசுவதைத் தாழ்வாகக் கருதும் பெருமக்கள் (?) இன்றும் இருக்கிறார்கள். தமிழ்தானே எப்படிப் பேசினால் என்ன? எழுதினால் என்ன? என்று ஏளனப் பார்வையுடன் அக்கறையற்று இருப்போரும் உள்ளனர். நல்ல தமிழை - பிழையற்ற தமிழைப் பேசவும் எழுதவும் வழிகாட்டக் கூடிய அறிஞர்களும் அருகிவிட்டனர்."தமிழ் படிக்க வேண்டும் - தமிழின்பம் பருக வேண்டும்' என்ற ஆர்வத்தைப் பிள்ளையர்க்கு வளர்க்கக்கூடிய கல்விமுறையும் ஆசிரியர்களும் குறைந்து வருதல் பார்க்கிறோம். ஆசிரியர்தம் தமிழறிவே ஐயத்திற்கிடமாகிப் போயிற்று. இந்நிலையில் என்ன செய்யலாம்? நாளை வரப்போகும் தமிழ்ச் சமுதாய மக்கள் தமிழையே மறந்தவர்களாய் - அறியாதவர்களாய் ஆகிவிடக் கூடாதே என்னும் அக்கறையில் தமிழைப் பிழையின்றி பேசவும் எழுதவும் எடுத்துக்காட்டுகளுடன் வழிகாட்ட "கவிக்கோ' ஞானச்செல்வன் வாரம்தோறும் "தினமணி கதிரில்' தொடர் குறிப்புகளைத் தர இருக்கிறார். அடுத்தவாரம் முதல் "தினமணி கதிரில்' கவிக்கோ ஞானச்செல்வன் எழுதும் "தமிழைப் பிழையின்றி - பேசுவோம், எழுதுவோம்' தொடர் தொடங்குகிறது.-ஆசிரியர்.
கருத்துக்கள்

நல்ல முயற்சி! பாராட்டுகள். தினமணியும் பிழையற்ற தமிழில் செய்திகளைத் தருவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். சான்றாக இச்செய்தியின் தலைப்பிலேயே பிழையின்றிப் பேசுவோம் என ஒற்றெழுத்து வந்திருக்க வேண்டும். ஆனால், விடுபட்டுள்ளது. தினமணி ஆசிரியர் குவினருக்கும் செய்தியாளர்களுக்கும் பயிற்சி அளித்து நல்ல தமிழைப் பரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உலகத் தமிழர்களின் உவகைக்குரிய இதழாக மாறட்டும்! ஆசிரியருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/17/2010 1:16:00 PM

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்