‘தந்தையுமான தாய் நூல்’ ஆய்வுரை -வா.மு.சே.திருவள்ளுவர்
கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின்
தந்தையுமான தாய் நூல் ஆய்வுரை
சென்னையில் சித்திரை 19, 2046 / 2-5-2015
அன்று கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் ‘தந்தையுமான தாய்’ நூல்
வெளீயீட்டு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளூவர் ஆற்றிய
நூல் ஆய்வுரை:
நிலவு முத்துகிருட்டிணன் என் உள்ளம் கவர்ந்த நண்பர். உள்ளதை உணர்வதை
கள்ளமில்லாமல் கூறும் நெஞ்சர். தம் குழந்தைப் பருவம் முதல் இன்றுவரை
பகுத்தறிவு போற்றும் பாவலர். சமுகம் சுற்றத்தார் நண்பர் குடும்பம் என
அனைத்து நிலைகளிலும் செயலாற்றும் செயல் மறவர். எங்களது நிகழ்வுகளில்
எங்களுக்கு தோளோடு தோள் கொடுக்கும் தோழர். முத்துக்கிருட்டிணன் அவர்கள்
தம் நண்பர் கவிஞர் நவநீதம் அவர்களை நமது பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தில்
இணைத்தார். அவர் மிகச் சிறந்த கவிஞர் அவரை ஒரு நூல் வெளியிடுங்கள் எனப்
பலமுறை வலியுறுத்தினேன். அவர் தற்போது காலமாகி விட்டார். அவர் கவிதைகள்
பொன் பொருள் என அலைவோர் மத்தியில் இனிமேல் வெளிவருவது ஐயமே. இதைப் பலமுறை
முத்துகிருட்டிணன் அவர்களிடம் பகிர்ந்துள்ளேன்.
தன் நண்பரைப்போல் இல்லாமல் நெடு நாட்களுக்குப் பிறகு ஒரு நூல்
வெளியிடுகிறார் என அறிந்தவுடன் பாராட்டி மகிழ்ந்தேன். உறுதுணையாக இருந்த
பொருளுடையார் அருளுடையார் அறமுடையார் நெறியுடையார் தலைவர் பாண்டுரங்க
உடையாரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
அருமைத் தமையனார் கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணனிடம் இயல்பாகப் பேசிக்
கொண்டிருந்தபோது நான், “தங்கள் தந்தை எப்படி இருப்பார்? தந்தையின்
படத்தைக் காணமுடியவில்லையே!” என்றேன். அவரது கண்கள் குளமாயின “நான்
தந்தையைப் பார்த்ததே இல்லை. இது நாள் வரை, நான் எவ்வளவோ அலைந்து திரிந்து
தேடியும் தந்தையின் படம் கூட கிடைக்கப் பெறவில்லை” என்றார்.
ஒரு தாய்க்கு நூற்றாண்டு விழா காணும் மகனை இன்றுதான் காண்கிறேன். ’அன்னை
இல்லம்’ எனப் பெயர் வைத்துக்கொண்டு அன்னையை முதியோர் இல்லத்தில் சேர்க்கும்
அவலம் இன்றும் உள்ளது. வாழும்போது ஒருவேளை சோறு போடாமல் செத்தவுடன் திதி
என்று கூறி வடை பாயசத்தோடு காக்கைக்குக் கொடுத்து தான் நிம்மதியாக உண்ணும்
வழக்கம் தொடர் கதையாக உள்ளது..
இந்தக் காலக்கட்டத்தில் தம் தாயின் பிறந்த நாளை எண்ணி நினைவில் கொண்டு
இன்று தம் உறவினர்கள் நன்பர்கள் அனைவரையும் அழைத்து நூற்றாண்டு விழாக்
கொண்டாடும் நேரத்தில் தம் தாயைப் பற்றியும் அந்தத் தாய் ஈன்ற மக்கள்
பற்றியும் தன்னைப் பற்றியும் ”தந்தையுமான தாய்” என்ற நூலை வெளியிட்டுப்
பெரும்பதிவு செய்துள்ள அன்பு மகனை இன்று நாமெல்லாம் கண்டு பெருமிதமும்
பேருவகையும் கொள்கின்றோம்.
‘தந்தையுமான தாய்’ நூலில் தன்னை அவன்
என்றே குறிப்பிட்டு எழுதியுள்ளார். அவன் எனக் கூறும்போது, தான் கவியரசர்
கண்ணதாசன் வழியைப் பின் பற்றுகிறேன் எனப் படிப்போருக்குத் தெளிவு
படுத்துகிறார்.
அவரது எழுத்து நடை மிகச் சிறந்த நடையாக உள்ளதைப் படிப்போர் உணரலாம்.
’சாலையின் இருபுறமும் பச்சைப் பட்டுக்கம்பளம் விரித்தாற்போல பரந்து விரிந்து அடிவானைத் தொடும் அழகிய நஞ்செய் நிழகழனிகள்” (பக்.1)
”அறுவடைக் காலங்களில் செந்நெல் வயல் வெளிகளில் உழைக்கும் மக்களால் உயிர்
பெற்ற ஓவியமாய் அழகு மிளிரும் வயல் வெளிகளின் வரப்பு வரிசையாய்
நெற்கட்டுகளை சுமந்துசெல்லும் காளையர்கள் நடவு செய்ய நடைபோடும் நங்கையர்கள்
கதிர் அறுக்க பரம்படிக்க களையெடுக்க அண்டைவெட்ட என உழைப்பவர்கள் இடையே
நெற்குவியல்களை சுமந்து நிற்கும் களங்கள்”. (பக்.5)
வரலாற்றுச் சான்றுகள் இந்நூலில் நிலையாக இடம் பெற்றுள்ளன.
“மாமன்னன் இராசராச சோழன் தான் கட்டிய கோயில்களுக்கு ஏராளமான நிலங்களைத்
தானமாக வழங்கியுள்ளான். மன்னன் கோயிலுக்கு அளித்த நிலத்திற்குப் பெயர்
தேவதானம் என்றும் சமணத்திற்கு அளிக்கப்பட்ட நிலத்திற்குச் சமணப் பள்ளி
என்றும் பவுத்த விகார்களுக்கு அளிக்கப் பட்ட நிலங்களுக்குப் பள்ளிச் சதகம்
என்றும் அறநிலையங்களுக்கு விடப்பட்ட நிலம் மடப்புரம் அல்லது சாலபோகம்
என்றும் புலவர்களுக்கு விடப்பட்ட நிலம் புலவர் முற்றூட்டு என்றும் பெயர்
பெற்றன”. (பக்.2)
அவன் பிறந்த மடப்புரம் ஊரைப் பதிவு
செயவதற்கு மேற்கண்ட வரலாற்று ஆய்வுகள் இந்நூலின் சிறப்பைப் பகர்கின்றன.
தாய்க்கு மட்டுமல்ல தாய் மண்ணுக்கும் பெருமை சேர்க்கிறார்.
தாய் குழந்தையம்மாள் அதே ஊரில் எதிர்வீட்டுச் சுப்பையாவை மணப்பதைச்
சுவைபடக் கூறுகிறார். இணையருக்கு எழுவர் பிறந்ததையும் அவன் நான்காமவன்
என்பதையும் பதிவுசெய்கிறார். இந்தியா விடுதலை பெற்ற அடுத்தமாதம் அவனின்
தந்தை காலமாகிறார்.
அதற்குப்பின் அவனின் தாய் தந்தையுமானவனாகிறார். தாயாரின் கண்ணீர் அவனை மிகப் பெரிய பகுத்தறிவுவாதியாக நமக்குத் தந்துள்ளது.
“அம்மா நீ அழவேண்டும் என்று உன் தலையில் எழுதிய கடவுளை நாம் ஏன் கும்பிடவேண்டும்?” (பக்.11) என்கிறார்.
அவனது படிப்பு நான்காவதுவரை நாஞ்சலூரிலும்
பின் இராமகிருட்டிணா வித்யாசாலையிலும். தான் சூரப்புலி அல்ல கடைசி
இருக்கை மாணவர் எனத் தாயின் விருப்புக்கு மாறாகக் குத்துச்சண்டை பயின்ற
உண்மையும் உயர்நிலைப் பள்ளியிலேயே நையாண்டியாகப் குற்றாலக் குறவஞ்சி போன்று
கவிதை எழுதும் ஆற்றல் அவனுக்கு வந்துள்ளதும் இந்நூலில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
அன்னையின் ஆசைப்படி பள்ளி இறுதிவகுப்பு முடித்து அண்ணாமலை பல்கலைக்
கழகத்தில் புதுமுக வகுப்பு சேர்ந்து இலக்கியக்கடலில் சங்கமிக்கிறான்.
“அவன் பல்கலைக்கழக மாணவரிடையே பெயர் பெற்று விளங்கினான். புகழ் குவிந்தது படிப்பு கவிழ்ந்தது” (பக்.22)
பின் ஊரில் அவனின் போக்கு திசை மாறியது. அவனது உறவினர் தமிழ்ச் சமுதாயத்தையே
மாற்றிய பெரியாரின் பெருந்தொண்டர் கிருட்டிணசாமி சென்னைக்கு
அனுப்பிவைத்தார். அங்கு தொழிற்கல்லூரி படிப்பை முடிக்கிறான். அங்கும்
தே.ப.ப.(என்.சி.சி.), கூட்டுறவு அமைப்பு ஆகியவற்றில் தன் முத்திரையை
பதிக்கிறான்.
உளுந்தூர்பேட்டைக்குப் பெண் பார்க்கச் சென்று பின் பெண் வீட்டார் மறுத்துவிட்டதையும் அவன் பதிவு செய்கிறான்.
“அவன் அன்னை செய்த
தவப்பயன் பெண்வீட்டார் ஓட்டு வீட்டை ஓட்டைவீடு என்று கூறிப் பெண் தர
மறுத்ததாக மாமா சொன்னார்; மகிழ்ந்தான்”. (பக்.29)
பணியாற்றும்போது தம் பட்டறிவைக் கூறுவது சிறப்பாக உள்ளது.
“அவ்வழியே சென்ற செயற்பொறியாளர் அருகில் வந்து பார்த்துவிட்டு ‘ஓ
கவிதையா’ எனக் கேட்டு வாங்கிப் படித்தார். பரவாயில்லையே நன்றாகத்தான்
உள்ளது நீங்கள் கவிஞரா என்றார். நண்பர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்
என்றான்” (பக்.30)
தன் எழுபது வயதைக் கண்ட நிலையிலும் அதே சொற்கள் இன்றும் கூறக் கேட்டுள்ளேன்.
எந்நிலையிலும் அவனின் தமிழ்ப் பற்று இந்நூலில் தெளிவாக உள்ளது.
அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் அறிஞர் தெ.பொ.மீ அவர்களின் வழிகாட்டலை அவன்
நன்றியோடு பதிவு செய்கிறான்
”தமிழை வெளியிலிருந்து படி” (பக்.31)
சேலத்தில் அவன் ஆற்றிய தொண்டும் இதழ்ப் பணியும் பெரியார் மாநாட்டுப் புரட்சியும் அவனை யார் என்று அடையாளம் காட்டுகிறது.
அவன் தன் மனைவி கற்கண்டு அம்மையாரைக் கரம் பிடிக்க எடுத்த முயற்சி கற்கண்டு
அம்மையாரின் மேல் அவன் கொண்ட அன்பை நாம் அறியமுடிகிறது. சோதிடத்தைப் புறம்
தள்ளி, தந்தை பெரியாரை அழைக்கச் சென்று அவர் ஐயா கிருட்டிணசாமியை வைத்து
நடத்தக் கோரி திருமணத்தில் தன் தாய் ஓரத்தில் கைம்பெண் என நிற்க அன்னையின்
கரத்தால் தாலி வழங்கத் திருமணம் முடித்த பெருமை அன்று முதல் இன்றுவரை,
திராவிடக் கழகத்தின் பெருமையைப் பறைசாற்றும். தாலி அறுப்பு என இன்று
எக்காளமிடும் பரதேசிகளுக்கு ஒரு சவுக்கடி இந்நூல்.
தந்தை பெரியார் அவர்கட்கு உணவு வாங்கிச்சென்று தயங்கி நின்று
கிருட்டிணசாமி வழி பெரியாரிடம் சொல்ல, பகுத்தறிவுப் பகலவன் மறுமொழி இன்று
நிலையாக உள்ள திராவிட இயக்கத்தை உணர்த்துகிறது. இப் பேறு அவனின் அளப்பரிய
பேறு அல்லவா?
“பெரியார் தனக்கேயுரிய புன்னகையோடு அவனைத் தன்னருகே அழைத்து
அமரவைத்துக்கொண்டு சொன்னார்: “நான் ஏன் கையெழுத்துப் போட நாலணா சாப்பிடக்
கூப்பிட்டால் ஐந்து அணா உரூபாய் தர வேண்டும் என்று கூறுகிறேன் எண்ணிப் பார்
எல்லோரும் என்னைக் கூப்பிட்டால் என்னால் முடியுமா? பணம் கொடுத்தால்
சாப்பிடுவேன் என்றால் சிலர் மட்டுமே கூப்பிடுவார்கள். பணம் கிடைக்கும்
அந்தப் பணத்தை நானா கொண்டு போகப் போகிறேன்? எல்லாமே இந்த நாட்டு
மக்களுக்குத்தானே தருகிறேன்.” (பக்.42)
“அச்சமுடையார்க்கு அரணில்லை” என்ற
திருக்குறளைக் கூறி அஞ்சாமையின் சிறப்பை உடைய அவன் செயல்பாட்டை இந்நூல் பல
இடங்களில் செப்புகிறது.
தன் மகனுக்குப் பகுத்தறிவு நிலைக்க பெரியார் எனப் பெயரிட எண்ணி பின்
மாறுபட்ட கொள்கை கொண்டால் பெரியார் கொள்கைக்கு இழுக்கு எனத் தமிழ் நிலவு
எனப் பெயரிட்டது அவனது பகுத்தறிவுக் கொள்கையின் உச்சமாக உள்ளது
தலைவர் கலைஞரின்பால் பேரன்பு கொண்ட அவனுக்கு, சென்னைப் பெருநகர்
வளர்ச்சிக்குழுமத்தின் பேருந்து நிலையத் திறப்புவிழா அறிவிப்பாளராக
அலுவலகத்தால் நியமிக்கப்பட்டு ஆற்றிய பங்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கது
”அப்படி அழைக்கும்போது அவன் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தாற்போல ஓர்
ஆற்றல் உருவானது. கலைஞர் என்றே சொல்லக் கூடாது எனச் சொன்னவர் முகத்தில்
கரியைப் பூசினாற்போல் பெருமித உணர்வோடு பேசினான் அப்படி அவன் கலைஞரைப்
புகழ்ந்து அழைக்கவே ஏறத்தாழ இரண்டு நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்
கொண்டார். (பக்.51)
அலுவலகப் பணிக்காகத் தான் சென்றபோது கண்ட துன்பங்களும் நட்பின்
ஆளுமையாள் தப்பியதும் பணி ஓயவுக்குப் பின்னும் பணியாற்றிய சிறப்பும் நயமாக
நூலில் அவனால் கூறப்பட்டுள்ளது.
”அப்பணியை முடித்து அனைவரது பாராட்டையும் பெற்றான். குழுமத் தலைவர்
குழுத்தலைவர் (அமைச்சர்) மொழியாக்கத்தைச் சுவைத்ததாகவும் செயலர் பின்னர்
கூறினார்” (பக்.51)
“ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்”
என்ற வள்ளுவப்பெருமானின் குறள் இம் மகனை ஈன்ற தாய்க்கும் தொடக்கம் முதல் இன்று வரை பொருந்தும்.
தாய்க்குப் புற்று நோய் எனத் தெரிந்தவுடன் தாய்க்குத் தெரியாமலேயே
சிகிச்சை செய்ததையும் தாய்க்காகவே மகிழ்வுந்து வாங்கி மகிழ்வித்ததையும்
தாயின் கரத்தாலே தாலியும், தாயின் கரத்தாலே புது வீட்டிற்குச் செங்கலும்
எடுத்துத் தரச் செய்த தாயின்பால் அவன் கொண்ட அன்பையும் உணர்ந்தவர் அவரைப்
பாராட்டத் தவறவில்லை. தாய்க்கு ஆளுயர மாலை சூட்டியதும் தாய்க்குப் பவளவிழா
சிறப்பாக நடத்தியதும் முத்துவிழா காண முடியுமோ என்ற அச்சத்தில்
தொடக்கத்திலேயே முத்து விழாவும் நடத்திய அவனுக்குத் தன் தாய்
குழந்தையம்மாளின் சார்பிலும் உலகத் தாய்களின் சார்பில் உச்சிமோந்து
பாராட்டி மகிழ்கிறேன்.
நன்றி வணக்கம்.
-வா.மு.சே.திருவள்ளுவர்
தமிழ்ப்பணி வலைப்பூ
Comments
Post a Comment