திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள் – இ. சூசை

இ.சூசை :i.susai-thamizhsusai

திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள்


  இளங்காலைப் பொழுதில் புதுப்பொலிவோடு செயல்களைத் தொடங்கும் வானொலி நேயர்களே! வணக்கம்.
  இன்றைக்குச் சற்றேக் குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தலை சிறந்த தமிழ் இலக்கிய ஆய்வாளர் செகவீரபாண்டியனார். கவிராசப் பண்டிதர் என்று உலகம் அவரை அழைத்தது. தூத்துக்குடியில் 1920-களில் தொடங்கி  வாழ்ந்தவர். அன்றைய ஆங்கில அரசு அவரின் நூல்களைப் பாடநூலாகக் கல்வி நிறுவனங்களில் வைத்தது. அன்றைய தமிழ் கூறும் உலகில் அவர் புகழோடு இருந்தார். கம்பஇராமாயணத்தை ஆராய்ந்து, கம்பன் கலைநிலை என்று பல தொகுதிகள் கதைமாந்தர், இலக்கியத்தன்மை என வெளியிட்டார்.
குமரேசா! என விளித்து ஆடுஉ முன்னிலை அமைத்து, திருக்குறள் ஆய்வினை, கதை, ஒப்பீடு என உரையாக அமைத்து, ஒரு நேரிசை வெண்பாவினைப் பிற்பகுதியில் குறளுடன் அமைத்து முற்பகுதியில் கதையினைச் சுருக்கி ஈரடிகளில் அமைத்து ‘திருக்குறள் குமரேச வெண்பா’ என மீட்டுருவாக்க இலக்கியம் படைத்த பேரறிஞர் செகவீரபாண்டியனார் எனலாம். அறத்துப்பால் 800, பொருட்பால் 800 என பெருந்தொகுதிகளாக விளக்குமுறை ஆய்வினை மேற்கொண்டவர்.
கதை – 1
திண்தோள் புரூவன் ஏன் தேவரினும் முன்துணிவு
கொண்டுவென்று மீண்டான் குமரேசா – மண்டியே 
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு’
தூங்கல் – சோம்பல், சோர்தல், தாழ்தல், தூங்காமை வினையடியாகப் பிறந்த எதிர்மறைப் பெயர் என விளக்கம் தருவார். தூங்காமை – சோம்பாமை
ஆட்சியாளருக்கு விரைவு, கல்வி, துணிவு நீங்காப் பண்பு என மாமன்னன் புரூவரன் வரலாற்றினைக் கதையாகக் கூறுவார்.
நினைவுக் குலத்தோன்றல், புதன், இளை இவன் பெற்றோர். கட்டழகு, ஆண்மை, அருள் உடையவன். இவன் ஆட்சியில் பிரதிட்டனபுரத்தில் அரமகளிர் சிலருடன் ஊர்வசி பூஞ்சோலையில் உலவினாள். சமூகவிரோதிகள் சிலர் அவளை வன்புணர்ச்சிக்குக் கடத்தினர். அலறினாள்; நடுங்கினாள்; அங்கிருந்த எவரும் உதவவில்லை. தேவர்கள் அஞ்சியோடினர் அவளின் அவலக்குரல் கேட்டு வில்லுடன் விரைந்து சென்று புரூவரன் காத்தான். மீட்டு அமரர் வேந்தனிடம் சேர்த்தான்.
  ஆட்சியாளர்கள் விரைந்து, துணிவுடன் செயல்படவேண்டும். இவனின் துணிவு, விரைந்து செய்யும் ஆற்றல் கண்டு இந்திரன் தன்மகளான ஊர்வசியை இவனுக்கு மணம் முடித்தான். கதையைக் கூறிவிட்டு,  விரிவைப் பாகவதத்தில் கற்று உணர்க எனப் படிப்பவனுக்கு நூலினைப் பரிந்துரைப்பார்.
பொருப்பினை சிற கரிந்தவன் புரத்து மங்கையருள்
உருப்பசி பெயர் ஒண்டொடி உருவினில் சிறந்தாள்
எனப் பாரதப் பாடல்களையும் தநது விளக்குவார்.
காலமறிதல் 
வெண்டோட் செழியனும்மேல் தேர்ந்து பொழுது அறிந்து 
கொண்டு சென்றான் போர்மேல் குமரேசா-கண்ட
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகலவெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
குமரேசா! என விளியில் தொடங்குவார். காலம் அறிந்து செயல் செய்தலை விளக்குவார். காக்கையைவிடக் கூகைவலிமையானது. ஆனால் பகலில் காகம் அதனைக் கொத்தி வென்றுவிடும். செழியன் என்ற பாண்டிய மன்னன் பொழுது அறிந்து காத்திருந்தான். திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள்மான், பொருநன், என்று ஐந்து மன்னார் இணைந்து பகைமை பாராட்டினர்.
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை 
அருள்சமம் சிதையத் தாக்கி முரஉமொடு
ஒருங்கப் படேஎன் ஆயில்
என்ற புறப்படாலைக் கூறி விளக்குகிறார்
தலையாலம் கானத்துப்போர் கதையாக விரிகிறது.
கதை -2 சீவகன் பொழுது அறிந்து போரிட அவன் தாயை விசயைக் கூறியதை விவரிக்கிறார்.
   இடத்தொடு பொழுது நாடி
யெவ்வினைக் கண்ணு மஞ்சார்
மடப்பட லின்றிச் சூழ
மதிவல்லார்க் கரிய துண்டோ
கடத்திடைக் காக்கை யொன்றே
யாயிரங் கோடி கூகை
யிடத்திடை யழுங்கச் சென்றாங்
கின்னுயிர் செகுத்த தன்றே.

என்ற பாடலில்,  ஒரு செயலைச் செய்பவர் இடம், காலம் கருதி செய்தால், செயலில் அச்சமின்றி செய்தால், முட்டாள்தனமாகஅன்றி அறிவுடன், அறிவுத் துணையாளருடன் செய்தால் அரிதான செயலையும் எளிதில் முடிக்கலாம். ஒரே ஒரு காகம் ஆயிரம் ஆற்றல் வாய்ந்த ஆந்தைகளைக் களத்தில் கொல்லும் என மகனுக்குத் தாய் கூறிய அறிவுரையை விளக்குகிறார்.
கதை-3 பாரதக் கதையில்,
பாரதம் முடிந்த 18-ஆம் நாளில் அசுவத்தாமன், கிருதவன்மன் முதலிய வீரர் பாசறையில் தோல்வி, சிறுமை உணர்ந்து ஒடுங்கிருந்தபோது, இரவில் ஆந்தை காகங்களைக் கூட்டில் சென்று அவற்றை அடித்துக் கொன்றதைக் கண்டனர். பகைவர் பலராயினும் காலம் அறிந்து செய்தால் வெல்லலாம்.
சினையில் பல்பெரும் காகம் அரும்பகல் அழிந்த கூகையினால்
சாலவும் இடருற்று அலமரக்கண்டு தம்மிலே முகமுகநோக்கி
காலமும் இடமும் அறிந்து அமர் செகுத்தல் கடன் எனக் கருதினரன்றே.” 

பாரதக் கதை, சீவகன் கதை, செழியன் கதைகளில் காலமும் இடமும் அறிந்து செல்லப்பட்டதால் வெற்றிக்கிட்டியது நாமும் காலமும் அறிந்து செயல்பட்டுவெல்வோம்.

இ. சூசை

 இணைப் பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை, தூய வளனார் கல்லூரி, திருச்சி-620002.
திருச்சிராப்பள்ளி வானொலி உரை 18.11.2015



Comments

  1. நன்றி அய்யா இதுபோன்ற பதிவுபற்றிய நுட்ப அறிவு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. மிக்க நன்றி கிடைத்தபின் மற்றவை பதிவேற்றுவேன் அய்யா

    ReplyDelete
  2. தாங்கள் அவற்றை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தால் நான் அகரமுதல இதழில் வெளியிடுவேன். பின்னர் அவற்றை நீங்கள் பகிரலாம். அல்லது அதனை நான் முகநூலிலும் பதிவேன். அங்கிருந்தும் நீங்கள் பகிரலாம்.

    உங்கள் ஒளிப்படங்களை அனுப்பி வையுங்கள்.

    திருக்குறள் கருத்தரங்கம் நீங்கள்தானே நடத்துகிறீர்கள். அது பற்றிய விவரம்கேட்டேன். தரவில்லையே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்