இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 05: ம. இராமச்சந்திரன்
05
இலக்குவனார் அரசர் கல்லூரியில் பயின்ற
போதுதான், நூலகத்தில் இருந்த மொழியாராய்ச்சி பற்றிய ஆங்கில நூல்களைப்
படித்து, மொழி ஆராய்ச்சி பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டார். கால்டுவெல்
எழுதிய ஒப்பற்ற “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண” நூலையும் இங்குதான்
கற்றார். தமிழ் மொழியின் தொன்மை, தூய்மை, வளமை, இனிமை முதலியன பற்றி நன்கு
அறிந்தார்.
தமிழ்நாட்டில் பேராயக்கட்சி (காங்கிரசு) பிராமணர்களின் செல்வாக்குக்கு உட்பட்டுப் பிராமணர்களின் தலைமையில் இயங்கி வந்தது. நீதிக் கட்சியின் தூய தொண்டுகளால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உயர்வு ஏற்பட்டது.
ஆகவே தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின்பால் பற்றும் பேராயக்கட்சியின்பால்
பற்றின்மையும் மக்களுக்கு உண்டாயின. இலக்குவனாரும் நீதிக்கட்சியின்பால்
மிகுந்த பற்றுக் கொண்டார். காரணம் இலக்குவனார், ‘தமிழ் எமது
உயிர்; தமிழன் உயர்வே தமிழ்நாட்டின் உயர்வு, தமிழ்நாட்டில் தமிழுக்குத்
தான் முதன்மை உண்டு, ஆதலின் தமிழ்ப் பகைவர் எமது பகைவர்; தமிழ் நண்பர் எமது
நண்பராவார்;’10 என்னும் கொள்கை உடையவராக விளங்கினார்.
பண்டைத் தமிழகத்தின் சிறப்பும் தமிழர்
வாழ்வின் மேன்மையையும் இலக்குவனார் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. உயர்தனிச்
செம்மொழியாம் தமிழ், உலக மொழிகளின் தாயாகவும் இருத்தல் கூடும் என்று
எண்ணினார். தமிழ்ப் பெயரையும் இழந்துவருந்தும் தமிழகத்தின் உரிமைக்கும் தமிழ் மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே, தம் கடமை என உறுதி கொண்டார். ‘தமிழ்ப்போரே தம்முடைய வாழ்க்கைப் போர்’ என்ற குறிக்கோளை வாழ்வின் உயிராகக் கொண்டார்.
1945ஆம் ஆண்டு திருநெல்வேலி ம.தி.தா.
இந்துக் கல்லூரியில் தமிழ்வுரிவுரையாளராகப் பணியாற்றினார். திருநெல்வேலி
இந்துக் கல்லூரியில் பணியாற்றிய போது நெல்லை அருணாகிரிநாதர் இசைக் கழகம்
மற்றும் இலககியக் கழகங்களுக்கும் சென்று வள்ளுவர் நெறி பற்றியும், சங்க
இலக்கிய மாண்பு குறித்தும் சொற்பொழிவு செய்தார். இசைநயம் பொருந்திய பாடல்கள் சில யாத்துள்ளார். ‘கல்வியைப் போல் செல்வம் காணக் கிடையாது’11 என்னும் குறள் கீர்த்தனைப் பாடல் பாடியுள்ளார். ‘அந்த நாள் என்று வருமோ’12 என்ற இசைப் பாடலையும் பாடியுள்ளார். 1946இல் ஞாயிறுதோறும் ‘சங்க இலக்கியம்’ என்னும் வார இதழ் வெளியிட்டு வந்தார். 1947இல் பொங்கல் மலரில் ‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’
எனும் கவிதை எழுதினார். பண்டைத் தமிழரின் அகவொழுக்கத்தைச் சங்கச்
செய்யுட்களைக் கொண்டு விளக்கிக் கட்டுரைகள் வரைந்தார். கலித்தொகைப் பாடல்
ஒவ்வொன்றையும் ஓரங்க நாடகம் என்று இயம்பலாம். அண்ணா ‘சங்க இலக்கியம்’ இதழ்
குறித்து திராவிட நாடு இதழில் மதிப்புரை வழங்கியுள்ளார். 13
1947இல் இராமநாதபுரம் மாவட்டத்தில்
மூன்று கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டன. விருதுநகரில் இந்து நாடார் சங்கம்
கல்லூரி ஒன்றை 1947 ஆகத்துத் திங்கள் தொடங்கியது. இக்கல்லூரிக்குத் தமிழ்த்
தமிழ்த்துறைத் தலைவராகப் பணியேற்றார். இங்கு பணி செய்தபோது தான் (1948)
சங்க இலக்கியம் என்னும் வார இதழின் பெயரை ‘இலக்கியம்’ என்னும் பெயரில்
வெளியிட்டார். ‘இந்தி வந்துவிட்டது’ என்னும் தலைப்பில் தலையங்கம் ஒன்று எழுதியுள்ளார். அது வருமாறு:
“இந்தியாவில்
தமிழும் தமிழரும் கெடுகின்றனர் என்றால் தமிழர் அனைவரும் எதிர்த்தால் தானே
முடியும். தமிழ், தமிழ்ப் புலவர்கட்கு மட்டுமே சொந்தம்? அல்லவே. ஆதலின்
எல்லாத் தமழர்களும் ஒன்றுகூடி கட்டாய இந்தியை அகற்றும் திட்ம் இடுதல்
வேண்டும். திராவிட கழகத்தார்கள் தமிழ்ப்புலவர்கட்கு மட்டும் தமிழை
உரிமையாக்காது அனைவர்க்கும் உரிமையாக்கி இந்திமொழக் கிளர்ச்சியைத்
தொடங்குவார்களாக”14
1947 ஆகத்து முதல் 1952 ஆம் ஆண்டு
ஏப்பிரல் வரை விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரியில் பணிசெய்தார்.
ஐந்தாண்டுகள் தொடர்ந்து இங்குதான் பணி செய்துள்ளார்.
1952 இல் நடைபெற்ற பொதுத்தேர்வில்
திருவல்லிபுத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்குக் காங்கிரசு கட்சி சார்பில்
காமராசரும், நீதிக் கட்சியின் சார்பில் அறிவியல் அறிஞர் கோ.து.(G.D.)
நாயுடுவும் போட்டியிட்டனர். கோ.து.நாயுடுவை ஆதரித்துச் சொற்பொழிவு செய்தார்
இலக்குவனார். விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு வே.வ. இராமசாமியை
ஆதரித்துப் பணி செய்தார். தேர்தல் முடிவு வந்தது. பாராளுமன்றத்திற்குக்
காமராசரும் சட்டமன்றத்திற்கு வே.வ. இராமசாமியும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர்.
விருதுநகர் நாடார் சிலர், காமராசர்க்கு
எதிராகத் தேர்தல் பணி செய்த ஒருவரை நாடார் கல்லூரியில் உயர் பதவியிலா
வைப்பது? கூடாது. இலக்குவனாரைக் கல்லூரியை விட்டு நீக்க வேண்டும் என்று
காங்கிரசு நாடார் தீர்மானித்தனர். இலக்குவனாரின் மிகச் சிறந்த நண்பராக
விளங்கிய வே. வ. இராமசாமியையும் தூண்டிவிட்டு விளக்க வினாக் கொடுத்தனர்.
இலக்குவனார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, ‘செந்திற் குமார
நாடார் கல்லூரிக்குத் தமிழ்ப் பேராசிரியர் தேவை’ என்று செய்தித் தாளில்
விளம்பரம் செய்தனர்.
கல்லூரி ஆட்சி மன்றக் குழுவில் இருந்த
அறிஞர் அலெக்சாந்தர் போன்றவர்கள், ‘இலக்குவனார் கடமையைச் செவ்வனே செய்து
வருகிறார். அவரைக் கல்லூரியை விட்டு நீக்கக்கூடாது’ என்று பலவாறு கூறியும்
நிருவாகம் இலக்குவனாரை நீக்கிவிட்டது. கல்லூரியில் தோன்றிய நாள் தொட்டுப்
பணியாற்றி வந்த இலக்குவனார் இதனால் பெரிதும் மனம் உடைந்தார். தன்னுடைய
உள்ளக்குமுறலை வெளிப்படுத்த எண்ணினார். அதன்விளைவாக எழுந்ததே ‘துரத்தப்பட்டேன்’ என்ற கவிதையாகும்.
இக்கவிதையில், கவிஞர் தாம் பட்ட
இன்னல்களையும் தமிழ்ப் பணியாற்றுவதில் எவருக்கும் அஞ்சவில்லை என்ற
உறுதிப்பாட்டையும் புலப்படுத்துகிறார்.
விருதுநகர் செந்திற்குமார நாடார்
கல்லூரியினின்றும் நீக்கப்பட்ட பின் 1952ஆம் ஆண்டு புதுக்கோட்டை சென்றார்.
அங்கு அண்ணல் பு.அ. சுப்பிரமணியனாரைத் தலைவராகவும் பேராசிரியர்
சி.இலக்குவனாரைச் செயலாளராகவும் கொண்டு திருவள்ளுவர் கழகம்
அமைக்கப்பட்டது. இதன் மூலம் கூட்டங்கள் பல நடத்திக் குறள்நெறிக்
கருத்துக்களைப் பரப்பி வந்தார். புதுக்கோட்டையில் இருந்தபோது வள்ளல் பு.அ.
சுப்பிரமணியனார் இலக்குவனார்க்கு உற்றுழியும் உதவி செய்தார். பகுத்தறிவுத்
தந்தை பெரியார் அவர்கள் பரிந்துரையால் 1995ஆம் ஆண்டு ஈரோட்டிலுள்ள மகாசனக்
கல்லூரியில் பணிபுரிந்தார். 1956 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் உள்ள
தெ.தி.இந்துக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணி கிடைக்கவே நாகர்கோவில்
சென்றார். அங்குப் பணி செய்தபோதுதான் ‘கருமவீரர் காமராசர்’
15 என்னும் வரலாற்று நூலை எழுதினார். காமராசர் முதலமைச்சராக இருந்தபோது
இலவசக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அறியாமை இருள் நீங்க
அனைவரும் கற்க வேண்டும் என்ற நோக்கமுடையவர் இலக்குவனார். எனவே காமராசரின்
சிறப்பை இந்நூலில் விளக்கியுள்ளார்.
1959ஆம் ஆண்டு புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியாரின் மணி விழா நடைபெற்றது. அண்ணலின் கல்வித் தொண்டைப் பாராட்டி ‘மாணவர் ஆற்றுப்படை’
என்னும் கவிதையைப் பாடினார் இலக்குவனார். இளமையில் தாம் கல்விச்
செல்வத்தைப் பெறுவதற்காக அடைந்த துன்பத்தை மற்ற இளம் மாணவர்களும் அடையக்
கூடாது. புதுக்கோட்டை அண்ணலை எல்லாரும் அறிந்து, அங்குச்சென்று கல்விப்பயன்
பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாற்றுப்படையை சங்கச் செய்யுள் நடையாம்
ஆசிரியப்பாவால் பாடியுள்ளார்.
குறிப்புகள்:
- சி. இலக்குவனார், கரும வீரர் காமராசர், நாஞ்சில் புத்தகமனை, நாகர் கோயில் 1956, ப.4.
- சி. இலக்குவனார், சென்னை மாநிலக் தமிழாசிரியர் மாநாட்டுச் சிறப்பு மலர், ‘குறள் கீர்த்தனை’, அண்ணாமலை நகர் 1954, ப. 38
- வீ. முத்துச்சாமி, இலக்குவனார் ஆய்வுப் பண்பு,
ந. சேது ரகுநாதனின் ‘பேட்டி’. பின்னிணைப்பு, ப. 9.
- சி. என். அண்ணாதுரை, திராவிட நாடு, வார இதழ், 14.12.1946, ப. 8.
- சி. என். அண்ணாதுரை, திராவிட நாடு, வார இதழ், ‘கலையரங்கம்’ 30.5.48.
- சி. இலக்குவனார், கரும வீரர் காமராசர், நாஞ்சில் புத்தக மனை, நாகர் கோவில் 1956.
(தொடரும்)
ஆய்வாளர் ம. இராமச்சந்திரன்
Comments
Post a Comment