Skip to main content

குறளின்பம் : தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால் – தமிழநம்பி

thalauppu+kuralinbam_thamizhanambi
தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. – குறள். 1107
  இது, காமத்துப்பாலில், புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில் ஏழாம் குறளாகும். இக்குறளின் பொருள் : அழகும் ஒளிறும் மாநிறமும் பெற்ற அருமை நிறைந்த காதலியொடு கொள்ளும் புணர்ச்சித் தழுவல், தமக்குச் சொந்தமான உரிமை இல்லத்தில் இருந்துகொண்டு, தம்முடைய சொந்த முயற்சியால் முறையாக ஈட்டிய வருவாயைக்கொண்டு சமைத்து உருவாக்கப்பட்ட உணவைத், தாமும் விருந்தினருமாக, நிறைவாரப் பகுத்துஉண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் இணையானது என்பதாகும்.
  ஈண்டுத் திருவள்ளுவப் பெருந்தகை வேறுசில இடங்களில் கூறியிருக்கும் கீழ்க்காணும் கருத்துகளும் ஒப்புநோக்கத்தக்கன:
  முயற்சிசெய்து ஈட்டியபொருள் முழுவதும் தகுதியுடையார்க்கு உதவி செய்வதற்கே ஆகும் – (கு.212)
முறையான முயற்சியால் கிடைத்தது தெளிந்த நீர் போன்ற கூழே ஆயினும் அதனை உண்பதைவிட இனிமையானது வேறில்லை – (கு.1065)
  எப்போதும் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீயநோய் அணுகாது. – (கு.227)
  கிடைத்த உணவை இயன்றவரைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டுப் பலவகை உயிர்களையும் பாதுகாத்தல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையான அறமாகும். – (கு.322)
  இவற்றுடன், ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்னும் புறநானூற்று வரியும் (பு.17), மணிமேகலை வரியும் (மணி.1255) ஒப்புநோக்கத் தக்கனவாம். மாந்தர் வாழ்வில் மிகஉயர்ந்த இனிமையை, இன்பநிலையைப் பகுத்துண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் எனக் குறள் கூறுகிறது.
இக்குறளைப் படித்தறியும்போது, ஈடிணையற்ற நாகரிகம் பண்பாடு கொண்ட சான்றாண்மையராக முன்னோர் இருந்திருக்கின்றனர் என்ற எண்ணத்தால் நெஞ்சம் பெருமையால் இருமாந்து பூரிக்கும். ஆனால், அதேபோழ்தில், இன்றுள்ள தமிழரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆற்றொணாக் கவலைகள் நெஞ்சை அழுத்தும். இவை அடிக்கடி நிகழும்.
  பொருத்தமான எதுகையும், முதலடியில் பொழிப்பு மோனையும் இரண்டாமடியில் இணை மோனையும் அமைந்து இனிய ஒழுகிசைச் செப்பலோசையுடன் குறள் படிக்க இன்பம் தருகிறது.

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue