கலித்தொகை போன்ற ‘களித்தொகை’ – உருத்திரா

     08 நவம்பர் 2015      கருத்திற்காக..
வேம்பூ-vempuu
நண்டு - nandu

வேம்பு நனை ஈர்ங்கண்



வேம்பு நனை ஈர்ங்கண் அலவன் ஆர்ப்ப
தூம்பு கொள் நறவின் மணிச்சிறைத்  தும்பி
அயல் சினை சேக்கும் அரிமணற் சேர்ப்ப!
ஓங்கு பூ வேழத்து உளை அலரி செறித்த
விரி இமைப் பூமயிர் அவள் உண்கண் வீழ்ந்து
மல்லல் களிற்று மருப்பு மாய்ந்தன்ன
புண்பட்டனை என்னை.அறிகுவை இஃது
அவள் பால் பட்ட காதல் மாத்திறம் .
அறிகுவை!அறிகுவை! மற்று எற்றுக்கு
நின் வெண்முத்துக்குடையும் ஆனை நிரையும்?
அவள் விழிநாடு வெல்லுதல் இயலுமோ
வளை நரல் பௌவம் கலன் ஊர்பு துறைவ‌
வளை கொண்டு நகை செயும் அவள் நுண் திறம்
ஈண்டு நினக்கு இறை ஈயுமோ அறிதி மன்னே!

பொழிப்புரை:

 தமிழ்ச்சொல்லில் “நனை” என்பதற்கு பூவின் சிற்றரும்பு என்ற பொருள் உண்டு என நான் அறிந்து மிகவும் வியப்பு உற்றேன். சொல்லின் பொருள் வழங்கும் பரிணாமத்தில் நம் தமிழின் சிறப்பு வெளிப்படுகிறது.நனை என்றால் ஈரப்படுதல் என்றுதான் நமக்குத்தெரியும்.ஆனால் பனிப்பொழிவில் முதலில் நனவது சிறு பூக்களின் மெல் அரும்புகள் தான். அவை நனைந்து “பூவாய்” விரியும் இயற்கையை தமிழ்ப்புலவர்கள் நுட்பத்துடன் கண்டிருக்கிறார்கள். எனவே நனை என்ற வினைச்சொல்லின் அடியாய் இந்த “நனை” என்ற வினை ஆகுபெயரே அந்த “சிறு பூவின்” அரும்புக்கு ஆகி வந்துள்ளது.ஒப்பற்ற கற்பனைக்கவிஞன் “அம்மூவனார்” ஐங்குறுநூறு “மருதத்திணையில்”(30 ஆம் செய்யுள்) “வேம்புநனை அன்ன நெடுங்கண் களவன்”என்று நண்டின் கண்ணுக்கு உவமையாக வேப்பம்பூவின் நுண் அரும்பை பாடியிருக்கிறார்.இந்த வியப்பில் விரிந்த என் கற்பனையின் விளைவே இச்சங்கநடைச் செய்யுள்.

இனிச்செய்யுளின் பொருளுரைக்கு வருவோம்.

(தொடரும்)
(நான் எழுதிய சங்கநடைச்செய்யுள் இது. தமிழ்த்தொன்மையின்  தண்ணிய எழுத்துகளுக்குள்ளும் நாம் கொஞ்சம் நனைவது நமது “களித்தொகை” ஆகும்.)
  • (உ)ருத்திரா
  • 53ruthra



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue