திருக்குறள் அறுசொல் உரை – 089. உள்பகை: வெ. அரங்கராசன்
02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 089. உள்பகை
வெளியில் தெரியாமல், மனத்துள்ளே
ஒளிந்துஇருந்து, அழிக்கும் கொடும்பகை
- நிழல்நீரும், இன்னாத இன்னா; தமர்நீரும்,
இன்னாஆம் இன்னா செயின்.
நோய்தரும் நிழல்நீரும், தீமைதான்;
நோய்தரும் உறவும், தீமைதான்.
- வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக,
கேள்போல் பகைவர் தொடர்பு.
வெளிப்பகைக்கு அஞ்சாதே; உறவுபோல்
நடிக்கும் உள்பகைக்கு அஞ்சு.
- உள்பகை அஞ்சித் தன்காக்க, உலை(வு)இடத்து,
மண்பகையின் மாணத் தெறும்.
புதைசேற்றினும், உள்பகை, பேரழிவு;
அதிலிருந்து காத்துக் கொள்,
- மனம்மாணா உள்பகை தோன்றின், இனம்மாணா
ஏதம் பலவும் தரும்.
மனம்சிறக்க உதவா உள்பகையால்,
இனம்சிறக்காது; துன்பமும் ஆம்.
- உறல்முறையான் உள்பகை தோன்றின், இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
உறவினர்தம் உள்பகை, பலவகை
மரணத் துன்பங்கள் தரும்.
- ஒன்றாமை, ஒன்றியார் கண்படின், எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
ஒன்றுபட்டாரிடம் ஒன்றுபடாவிட்டால்,
என்றும் அழிவே ஒன்றுபடும்.
- செப்பின் புணர்ச்சிபோல் கூடினும், கூடாதே
உள்பகை உற்ற குடி.
செம்பின் மூடிபோல் ஒன்றுபட்டாலும்,
உள்பகைக் குடியார் ஒன்றுபடார்.
- அரம்பொருத பொன்போல் தேயும், உரம்பொரு(து)
உள்பகை உற்ற குடி.
அரம்தேய்த்த பொன்போல், உள்பகை
உரசினால் குடும்பமும் தேயும்.
- எள்பக(வு) அன்ன சிறுமைத்தே ஆயினும்,
உள்பகை உள்ள(து)ஆம் கேடு.
எள்துண்டுபோல், உள்பகை சிறிதே
ஆயினும், ஆம்கேடு பெரிது.
- உடம்பா(டு) இலாதவர் வாழ்க்கை, குடங்கருள்,
பாம்போ(டு) உடன்உறைந்(து) அற்று.
மனம்பொருந்தார் வாழ்க்கை, குடிசைக்குள்
பாம்புடன் வாழ்வது போன்றது.
பேரா.வெ.அரங்கராசன்
Comments
Post a Comment