Skip to main content

சோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ? – யாழ்ப்பாவாணன்

தமிழ் சோறு போடுமா? :thamizh-soarupoadumaa

தமிழ் சோறு போடுமா என்றே
தமிழர் தான் பாடுகிறார் இன்றே
                            (தமிழ்)

வழித்தோன்றல் வழிவந்து வாழ்நாளில் பேசிநின்று
வழிநெடுக நடைபோட முயன்றால் தமிழனென்று
ஆளுயர அறிவுயரத் தலைநிமிரத் துணைநின்று
ஒத்துழைத்த தமிழைச் சோறுபோடு என்கிறாயே!
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                           (தமிழ்)

சுற்றும் உலகில் பிறமொழி பேசிநின்று
உலகம் சுற்றி வருகையில் தமிழனென்று
வயிற்றை நிரப்ப வழியேதும் இல்லையென்று
சோறு போடுமா தமிழென்று கேட்கலாமோ?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                           (தமிழ்)

பேருக்குத் தமிழனென்று எப்போதும் சொல்லிநின்று
ஊருக்குள் தமிழர் பண்பாட்டை உதறிநின்று
எவருக்குப் பிறமொழியில் செயற்பட முன்நின்று
சோறு போடுமா தமிழென்று குளறலாமோ?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                            (தமிழ்)

நுட்பத் தெரிவுகளில் தமிழிருப்பது ஏனென்று
கிட்ட நெருங்காது ஆங்கிலத்தின் வழிநின்று
பிறரோடு நெருங்கினாலும் வேற்றுமொழி நாடிநின்று
சோறு போடுமா தமிழென்று முழங்கலாமோ?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                            (தமிழ்)

பேச்சளவில்தான் தமிழனெனக் கூறிநின்று
எழுத்தளவில்தான் தாய்த்தமிழை மறவென்று
செயலளவில்தான் பண்பாட்டைத் துறவென்று
சோறு போடுமா தமிழென்று தூற்றலாமோ?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                            (தமிழ்)

ஈன்ற தாயும் தமிழச்சி தானென்று
ஈன்ற பின்பேசப் பழக்கியது தமிழென்று
தமிழ்த் தாயவள் ஊட்டிய சோறின்று
சோறு போடுமா தமிழென்று கேட்குமா?
நானும் தான் கேட்கிறேன் இங்கே!
                                             (தமிழ்)

தமிழா! உன்எழுத்தில் பிறமொழியை நீக்கிநின்று
தமிழா! உன்சொல்லில் நற்றமிழைச் சுட்டிநின்று
தமிழா! உன்பேச்சில் தேன்தமிழைக் கொட்டிநின்று
தமிழா! உன்செயலில் பண்பாட்டைக் காட்டிநின்று
வாழ்ந்து காட்டு; தாய்த்தமிழே சோறுபோடுமே!
நானும் தான் சொல்லுகிறேன் இங்கே!
                                             (தமிழ்)

 – யாழ்ப்பாவாணன்
யாழ்ப்பாவாணன்: yaazhpaavaanan
http://www.ypvnpubs.com/2015/11/blog-post.html



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue