Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – 090. பெரியாரைப் பிழையாமை : வெ. அரங்கராசன்


kuralarusolurai_mun attai
02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை

பெரியார்சொல் கேட்பார், பிழைசெய்யார்
 பெரியார்சொல் கேளார், பிழைசெய்வார்.

  1. ஆற்றுவார் ஆற்றல், இகழாமை; போற்றுவார்
         போற்றலுள் எல்லாம் தலை.
     செயல்வல்ல பெரியாரை இகழாது,
       மதித்துச் செயல்படல் சிறப்பு.

  1. பெரியாரைப் பேணா(து) ஒழுகின், பெரியாரால்
     பேரா இடும்பை தரும்.
     பெரியார்தம் சொல்வழி நடவாமை,
       பெயராப் பெரும்துன்பம் தரும்.

  1. கெடல்வேண்டின், கேளாது செய்க; அடல்வேண்டின்,
     ஆற்று பவர்கண் இழுக்கு.
       கெடவும், அழியவும் விரும்புவார்,
         பெரியார்சொல் கேளாது செய்வார்.

  1. கூற்றத்தைக் கையால் விளித்(து)அற்(று)ஆல், ஆற்றுவார்க்(கு)
     ஆற்றாதார் இன்னா செயல்.
     வழிகாட்டுநர் வழிநடவார் தீச்செயல்,
       எமனைக் கைதட்டி அழைக்கும்.

  1. யாண்டுச்சென்(று), யாண்டும் உளர்ஆகார், வெம்துப்பின்
     வேந்து செறப்பட் டவர்
     ஆள்வார்தம் சீற்றத்திற்கு ஆளாவார்,
       எங்கும் வாழவே முடியாது.

  1. எரியால் சுடப்படினும், உய்(வு)உண்டாம்; உய்யார்,
     பெரியார்ப் பிழைத்(து)ஒழுகு வார்.
     நெருப்பிலும் தப்புவார்; பெரியார்வழி
       நடவார் பிழைசெய்வார், தப்பார்.

  1. வகைமாண்ட வாழ்க்கையும், வான்பொருளும், என்ஆம்
     தகைமாண்ட தக்கார் செறின்….?
     பெரியார் அறத்தைச் சொல்லும்போது
       சீறுவார் வளவாழ்வு என்ஆகும்….?

  1. குன்(று)அன்னார் குன்ற மதிப்பின், குடியொடு
     நின்(று)அன்னார், மாய்வர் நிலத்து.
     குணக்குன்றாரைக் குறைத்து மதிப்பிட்டுப்,
       பிரிவார், குடியொடும் கெடுவார்.      

  1. ஏந்திய கொள்கையார் சீறின், இடைமுரிந்து,
     வேந்தனும் வேந்து கெடும்.
      பெரியார் கொள்கைவழி நடவார்,
       சீறும் ஆட்சியார், கெடுவார்.
  1. இறந்(து)அமைந்த சார்(பு)உடையர் ஆயினும், உய்யார்,
     சிறந்(து)அமைந்த சீரார் செறின்.
      சீர்மிகு பெரியார் சொல்கேளாது
       சீறும் பெருவலியாரும் மீளார்.      
பேரா.வெ.அரங்கராசன்
பேரா.வெ.அரங்கராசன் :ve.arangarasan
(அதிகாரம் 091. பெண்வழிச் சேறல்)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்