Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – 081. பழைமை : வெ. அரங்கராசன்


attai-kuralarusolurai

02. பொருள் பால்    
11. நட்பு இயல்.
அதிகாரம் 081. பழைமை

பற்பல ஆண்டுகளாய்த் தொடரும்
 பழம்நட்பின் சிறப்புஉரிமை, பெருமை.

  1. பழைமை எனப்படுவ(து) யா(து)?எனின், யாதும்
   கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
       எதனாலும் கீழ்மைப்படா நட்புஉரிமை
         பெற்ற நட்பே, பழைமை.    

  1. நட்பிற்(கு) உறுப்புக் கெழுதகைமை; மற்(று)அதற்(கு)
     உப்(பு)ஆதல், சான்றோர் கடன்.

       உப்புபோல், அமையும் உரிமைச்
       செயல்தான் நட்பிற்கு உறுப்பு.
  1. பழகிய நட்(பு)எவன் செய்யும்? கெழுதகைமை
   செய்(து),ஆங்(கு) அமையாக் கடை.

       உரிமையோடு செய்ததை ஏற்காவிட்டால்,
       பழைய நட்புதான், எதற்கு?

  1. விழைதகையான் வேண்டி இருப்பர், கெழுதகையான்,
   கேளாது நட்டார் செயின்.
        உரிமையால் நண்பர் கேளாது
       செய்தாலும், பழம்நண்பர் விரும்புவார்.
      
  1. பேதைமை ஒன்றோ? பெரும்கிழமை என்(று)உணர்க,
     நோதக்க நட்டார் செயின்.
       பழம்நண்பர் செய்த துன்பமும்,
         அறியாமையால், உரிமையால் என்க.

  1. எல்லைக்கண் நின்றார் துறவார், தொலைஇடத்தும்,
     தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

       நெடுந்தொலைவில் இருந்தாலும், உச்சநிலை
         நண்பர் நட்பை மறவார்.

  1. அழிவந்த செய்யினும் அன்(பு)அறார், அன்பின்
   வழிவந்த கேண்மை யவர்.

       நண்பர் அழிவே செய்தாலும்,
       அன்புவழி நண்பர், அன்பர்தான்.

  1. கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு,
     நாள்இழுக்கம் நட்டார் செயின்.
       நண்பரின் தவற்றைக் கேளார்க்கு,
       அந்நண்பர் தவறுநாளும் நல்நாளே.     

  1. கெடாஅ வழிவந்த கேண்மையார், கேண்மை
   விடாஅர்; விழையும் உலகு.

       கெடாது தொடரும் பழம்நட்பை
       விடாதாரை, உலகும் விடாது.

  1. விழையார் விழையப் படுப, பழையார்கண்
   பண்பின் தலைப்பிரியா தார்

       நெடுநாள் நண்பரைப் பண்பால்
       பிரியாரை, விரும்பாரும் விரும்புவார்.
பேராசிரியர் வெ. அரங்கராசன்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்