எழிலரசி அல்லது காதலின் வெற்றி 7 – பேரா.சி.இலக்குவனார்
மகிழ்ச்சி ததும்பும் மாநட் பினர்போல்
வேடிக் கையுடன் வியப்புச் சொற்களும்
கலந்துரை யாடியே காத்தவீ ரனுக்குப்
பலியிடுங் கடாவைப் பொலிவுறச் செய்து
- இழுத்துச் செல்லு மேழை களிடை 6
அடைந்தனர் முடிவில் யாருமில் காட்டை.
அவருடை தங்கை யவனுடை மையலில்
வீழ்க் காரணம் விளைத்த பிழைக்கு
- பழிகொள வெண்ணினர் விழிக ளழன்றன
கைகள் சென்று கைவாள் தொட்டன
ஆடலனுடைய, கோட்டமில் தோற்றம்,
அவர்கள் கல்லுளம் அனலிடை யிட்ட
- மெழுகுபோ லாக்க, நழுவின கைகள்;
நடுங்கினர் வலிமை யொடுங்கி நின்றனர்.
முரணிய தோற்றம் முழுது முணர்ந்து
அவர்கருத் தறியா தாடலன் தானும்.
- ஏறு போனின் றிறும்பூ தெய்தினான்.
எழிலர சிக்கோ ரின்ப முத்தம்
தழுவி யளித்ததும், தையல் மணந்தால்
நேருமிடரும் நினைவில் வரவே,
- மின்னொளி போல மேவிட வலிமை
பாய்ந்ததை யொப்பப் பாய்ந்தன ரவன்மேல்
அவர்கள் பாய்தலுக் ககப்படா னாகித்
துள்ளி யோடினன்; தொடர்ந்தனர் விரைந்து
- பிடிபடா னென்று பின்னோ னொருவன்
ஆடலன் தனக்கு அன்பா யென்றும்
ஒக்க வுறைவோ னுயர் முடி வீழ்ந்தது!
உள்ள மழிந்தனர்; ஒன்று மறிந்திலர்!
- நின்றனர் திகைத்து; நெடுஞ்சே ணிடையில்
இயல்பிற் சென்ற இளவலின் செயலும்
கொடிதெனக் கருதிக் கொல்ல நினைத்தனர்
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது
படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)
Comments
Post a Comment