எழிலரசி அல்லது காதலின் வெற்றி 6 – பேரா.சி.இலக்குவனார்
6
அழகிய தையலை யன்புடன் மணக்க
செம்ம லெவனுமி ச்சிறந்த நகரில்
மனப்பெரு மையுடன் மகிழ்ந்து வருவன்
- மணத்தால் நமது பணத்தைப் பகுக்க
எண்ணினோ மல்ல; எண்ணி னவளும்
வேளி ரொருவனை விரும்பி மணப்பின்
பெருமை யுமுண்டு பெரும்பய னுறுவோம்.
அவ்வித மின்றி யனைவரும் வெறுக்க
- அழகிய தங்கை யற்பக் கூலியை
சிறுத்துப் பெருத்துஞ் செல்வ மிலானை
மணந்தால் வருவது மானக் கேடென
எழிலர சிக்குறு மின்ப வாழ்விற்
சிறுதி பயக்க எண்ணினர் சூழ்ச்சி.
- அதுதான்
அயிர்ப்பில் லாதா டலனைக் கொல்லின்
அவனுருக்காணா அவ்வெழி லரசி
“நம்மை மறந்து நங்கை யொருத்தியை
மணந்திவண் வந்திலன் போலு” மென்று
- மறப்பினும் மறப்பள் மாவெழில் வேளை
மறவா தொழியின் மனவே தனையால்
“ஆடவ ரென்போ ரற்பரே” யென்று
காளை களையவள் காண வெறுத்து
கவுந்தீயாய்ப் பாழியைக் கடிதினி லடைவளால்
- அவட்குரி த்தாயவும் அடையலா மென்பதே.
பொருள்வேட்கையப் புன்வன் றொழிலை
செய்யத் தூண்ட பொய்க்கஞ் சாது
வேட்டை விழைந்து வெளியிற் செல்வதாய்
செப்பினர் துணிந்து. சேயிழை யறிய
- ஆடலன் தன்னையும் அவருட னழைத்தனர்
என்றும் போலவே அன்றும் நினைத்து
அவர்நிலை நாடா தவனு மொருப்பட
ஆடல னோடே அவனிழல் போலவே
ஒக்கவுறையும் தக்கவ னொருவனும்
- சேர்ந்தே ஐவரும் சென்றனர் அடவி.
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது
படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)
Comments
Post a Comment