இலக்குவனார் திருவள்ளுவன் 22 நவம்பர் 2015 கருத்திற்காக.. திருக்குறள் குமரேச வெண்பாவின் அறக்கதைகள் இளங்காலைப் பொழுதில் புதுப்பொலிவோடு செயல்களைத் தொடங்கும் வானொலி நேயர்களே! வணக்கம். இன்றைக்குச் சற்றேக் குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தலை சிறந்த தமிழ் இலக்கிய ஆய்வாளர் செகவீரபாண்டியனார். கவிராசப் பண்டிதர் என்று உலகம் அவரை அழைத்தது. தூத்துக்குடியில் 1920-களில் தொடங்கி வாழ்ந்தவர். அன்றைய ஆங்கில அரசு அவரின் நூல்களைப் பாடநூலாகக் கல்வி நிறுவனங்களில் வைத்தது. அன்றைய தமிழ் கூறும் உலகில் அவர் புகழோடு இருந்தார். கம்பஇராமாயணத்தை ஆராய்ந்து, கம்பன் கலைநிலை என்று பல தொகுதிகள் கதைமாந்தர், இலக்கியத்தன்மை என வெளியிட்டார். குமரேசா! என விளித்து ஆடுஉ முன்னிலை அமைத்து, திருக்குறள் ஆய்வினை, கதை, ஒப்பீடு என உரையாக அமைத்து, ஒரு நேரிசை வெண்பாவினைப் பிற்பகுதியில் குறளுடன் அமைத்து முற்பகுதியில் கதையினைச் சுருக்கி ஈரடிகளில் அமைத்து ‘திருக்குறள் குமரேச வெண்பா’ என மீட்டுருவாக்க இலக்கியம் படைத்த பேரறிஞர...