Thamizhk katamaikal 88: தமிழ்க்கடமைகள் 88. வாழ்க நீ தாயே! வையகம் உளநாள்

தமிழ்க்கடமைகள் 

88. வாழ்க நீ தாயே! வையகம் உளநாள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 16, 2011



அமிழ்தினும் இனிய அன்னைத் தமிழே
‘அமிழ்து’ ‘அமிழ்து’ என்றுரைத் ததாலே
‘தமிழ்’ ‘தமிழ்’ என்னும் பெயர்பெற் றனையோ?
இழ்-இழ் எனும் மழலைச் சொல் பயிற்றியே
தய் சேய்ச் சொல்லைத்தம்-இழ் என்பார்
தமிழ் என்றதாலே தமிழா யினையோ?
உலக மொழிகளுள் முதன்மொழி ஆகலின்
மனித குலத்தின் குதலை மொழிப் பேச்சாம்
மழலை ஒலியால் தமிழென்று புகன்றனரோ?
இழுமென் மொழி நின்னடை ஆகலின்
இனிமைப் பொருளும் பயந்தனை அன்றோ?
ஈன்ற அன்பினில் சுரக்கும் அமுதினைச்
சாலப் பரிந்தூட்டும் தாயினும் மேலாய்க்
கோலச் சொற்களில் சுரக்கும் அறிவினைக்
கால மெல்லாம் ஊட்டுந் தாயே தமிழே
ஈன்று புரந்தவள் என்தாய் எனினும்
நன்றும் தீதும் தெளிந்திடச் செய்யும்
அன்னை யாவோய் நின்னை வணங்குகிறேன்.
இருந்தமிழே-உன்னால் இருந்தேன்-வளர்ந்தேன்
இமையோர் அமிழ்தமாயினும் வேண்டேன் எனும்
உரமென் உள்ளத்தே எந்நாளும் உறைந்திட
உயிரொடுங் கலந்த உவரா அமிழ்தே
வாழ்க நீ தாயே வையகம் உளநாள்
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்வினில் தமிழினம் ஓங்கச்சூழ்துயர்நீங்க
வாழ்க தமிழ்மொழியே
- பேராசிரியர் க.அன்பழகனார்: தமிழ்க்கடல்
அலை ஓசை பரவும் தமிழ்மாட்சி: பக்.20



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்