Ilakkuvanarin padaippumanikal 54: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 55. சாதிகள் இல்லாத காலத்தில் சாதி வேறுபாடு எங்ஙனம் தோன்றும்?
இலக்குவனாரின் படைப்பு மணிகள் 55. சாதிகள் இல்லாத காலத்தில் சாதி வேறுபாடு எங்ஙனம் தோன்றும்?
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 12, 2011
” கொடுப்போ ரின்றியும் கரண முண்டே
புணர்ந்துடன் போகிய காலை யானே”
தமிழரிடையே பண்டு தொட்டு நடந்துவரும் திருமண முறையில் சாதி வேறுபாடு இல்லாதிருந்தது. சாதிகள் இல்லாத காலத்தில் சாதி வேறுபாடு எங்ஙனம் தோன்றும்? வருண வேறுபாட்டை எங்ஙனம் மேற்கொள்ள இயலும். வருண வேறுபாடு புகுந்த பின்னரும் சாதிகள் நிலைத்த பின்னரும் வருணத்துக்கு ஒருமுறையும் சாதிக்கு ஒருபழக்க வழக்கமும் ஏற்பட்டு விட்டன. இவை ஏற்பட்ட பின்னர்,
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க் காகிய காலமும் உண்டே,”"
என்ற நூற்பாவை இடைச் செருகலாக நுழைத்துள்ளனர். நாலு வருண வேறுபாடும், நால்வருணத்தினருள் மூவர் மேலோர் என்றும், ஒரு வருணத்தினர் கீழோர் என்றும் கொள்ளும் முறையும் தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் தலைக்கொள்ள வில்லையே. இந்நூற்பா இயற்றப்பட்டது நால்வருணவேறுபாடு உண்டான காலத்தில் தான் என்பதை இந்நூற்பாவே வெளிப்படுத்துகின்றது. இந்நூற்பா கூறுவது என்ன?” மேலோர் மூவர்க்கும் உரிய கரணம் கீழோர்க்கும் ஒரு காலத்தில் உரியதாய் இருந்தது. ஆனால் இன்று இல்லையே” என்பதன்றோ? கீழ் வருணத்தைச் சார்ந்த ஒருவர் தம் பழமைச் சிறப்பை நினைத்து இரங்குவது போன்று அமைந்துள்ளதேயன்றி இலக்கணம் கூறுவதுபோல் அமையவில்லையே. ஆசிரியரே கூறியிருப்பின் மேலோர்க்குரிய கரணம் இன்னது, கீழோர்க்குரிய கரணம் இன்னது என்று விளங்கக் காட்டியிருப்பர். அவ்வாறு பிரித்துக் கூறாதபோது மேலோர்க்குரிய கரணம் கீழோர்க்கும் உரியதாய் இருந்தது என்று கூறுவதில் பொருள் இல்லையே. ஆதலின் இந்நூற்பா இடைச்செருகல் என்று கொண்டு தள்ளற் பாலதேயாகும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:179-180)
Comments
Post a Comment