Ilakkuvanarin pataippumanikal 66: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 66. முக்காலத்துக்குரியனவும் கூறினர்
இலக்குவனாரின் படைப்பு மணிகள் 66. முக்காலத்துக்குரியனவும் கூறினர்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 26/09/2011
‘செவியறி வுறூஉ’ ‘வாயுறை வாழ்த்து’ என்பன புலவர்கள் பிறரைத் திருத்துவதற்காகப்பாடுவனவே.
மேனாட்டில் அரசியலறிஞர்கள் பலர் – உரூசோ, காரல் மார்க்சு, பெயின், மெக்காலே போன்றவர்கள் – அவர்தம் காலத்து அரசைத் திருத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள், இன்று பேரிலக்கியங்களாய்த் திகழ்கின்றன. அவ்வாறே, தமிழ் நாட்டிலும் அரசைத் திருத்த – நல்வழிப்படுத்த – செங்கோலாட்சி புரியக் கூறிய கருத்து நிறைந்த பாடல்கள் பேரிலக்கியப் பகுப்பினுள் அடங்குவனவாய் உள்ளன. புலவர்கள் பொருள் கருதிப் புகழ்ந்து பொய்வாழ்வு நடாத்தினர் என்று கருதுதல் கொடிது. இடித்துரைத்து மக்களுக்கு ஏமம் நாடும் காவலர்களாய் இலங்கினர். அவர்கள் பாடல்கள் இலக்கண ஆசிரியர்களால் துறைகள் வகுக்கப் பெற்றுப் பின்வரும் புலவர்கட்கு முன் மாதிரியாய்த் திகழும் நிலை பெற்றன. அவ்வாறு தோன்றிய இலக்கியங்களைக் கொண்டுதானே ஆசிரியர் தொல்காப்பியர் திணையும் துறையும் வகுத்துச் செல்கின்றார். ஆகவே பாடாண்திணை என்பது வெறும் புகழ்ச்சிக்குரிய திணை என்று கருதாது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் கருத்துகள் பல கொண்ட நல்லிலக்கியம் தோன்றுவதற்குரிய திணை என்று கருதுதல் வேண்டும். ஆசிரியர் தொல்காப்பியர் அக்காலத்துக்குரியன மட்டும் கூறினாரிலர், அரசியல் தலைவர்கள் போன்று. முக்காலத்துக்குரியனவும் கூறினர் அரசியல் அறிஞராய்.
‘ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்காலம் மூன்றொடு கண்ணிய வருமே ’
(உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியின் அடிப்படையில் மூன்று காலத்துக்குரியன கருதிப் பாடப்படும்)
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 234-235)
Comments
Post a Comment