Ilakkuvanarin pataippumanikal 58: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 58. உரையாசிரியர் தாம் அறிந்தவற்றையெல்லாம் நூலினுள் புகுத்த முயலுதல் பெருந்தவறு
இலக்குவனாரின் படைப்பு மணிகள் 58. உரையாசிரியர் தாம் அறிந்தவற்றையெல்லாம் நூலினுள் புகுத்த முயலுதல் பெருந்தவறு
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 16, 2011மூன்று வருணத்தார்க்கும் கூறினார் என்று நச்சினார்க்கினியர் கூறுவதிலிருந்து பெரும்பான்மை மக்களாம் வேளாளர் கற்பதற்கு உரிமை பெற்றிலர் என்பது தானே வெளிப்படுகிறதன்றோ? தொல்காப்பியர் தமிழர் அனைவர்க்கும் நூல் செய்தனரேயன்றி அவர் காலத்தில் தமிழ் நாட்டில் இல்லாத வருண பாகுபாட்டை உளங்கொண்டு நூல் செய்தார் என்றல் பொருந்துமா? உரையாசிரியர் என்போர் தாம் அறிந்தவற்றையெல்லாம் நூலினுள் புகுத்த முயலுதல் எவ்வளவு பெருந்தவறு என்பதைப் பல நூல்களுக்கு உரைகண்ட பெரும்புலவர் நச்சினார்க்கினியர் உணராது போயினரே. இவ்வளவு வலிந்து புகுத்த விரும்பியது எற்றுக்கோ?
அகத்திணை யியலில், ” உயர்ந்தோர்க்குரிய ஓத்தின் ஆன”" என்பதற்கும் பொருந்தா உரையே புகன்றுள்ளார். ஓத்தின் ஆன = வேதத்தினால் பிறந்த வட நூல்களும் தமிழ் நூல்களும், உயர்ந்தோர்க்குரிய = அந்தணர் வணிகர்க்கும், உயர்ந்த வேளாளர்க்கும் உரிய.
இங்கு ஓத்து என்பதற்கு வேதம் என்று பொருள் கொண்டுவிட்டார். ஓத்து என்ற தமிழ்ச் சொல், ஆராய்ச்சி நூல்கள் என்று பொருள் தரும். இப்பொருள் தருவதை “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்”" என்ற குறளானும் உணர்க. “ஆராய்ச்சி நூல்கள்” என்பன இக்கால பட்டப்படிப்புக்கு மேற்பட்ட படிப்பை (Post-graduate) ஒத்த கல்விக்குரியன. ஆராய்ச்சிக் கல்விக்குரியோர் அறிவாலும் உழைப்பாலும் உயர்ந்தோரே யாவர். முதன்மையாகத் தேர்ச்சி பெறுகின்றவர்களையே இன்றும் ஆராய்ச்சிக் கல்விக்குரியராக்குகின்றனர். அன்றும் இவ்வாறு இருந்துளது. எல்லார்க்கும் உரியதன்று ஆராய்ச்சிக் கல்வி ; அறிவாலும் கல்வியாலும் உயர்ந்தோர்க்கே உரியது என்றார் ஆசிரியர்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 194-195)
Comments
Post a Comment