இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 21, 2011
ஆசிரியர் தொல்காப்பியர் “அமைதியை நிலைநாட்டப் போர் புரிதலை இலக்கியங்களில் பாராட்டலாம். இலக்கியப் பொருளாகக் கொள்ளலாம். காரணமின்றி வலிமை யொன்றே கருதிப்போரிடும் கயவர்களை இலக்கியங்களின் பொருளாகக் கொண்டு இலக்கியம் இயற்றுதல் கூடாது” என்று வழிகாட்டியுள்ளார். இங்கும் இருபதாம் நூற்றாண்டின் உயர் கொள்கையாகக் கருதப்படும் பகை தணிவினைப் போரைத் தொல்காப்பியர் கூறியுள்ளமையால் தமிழர் உயர் நாகரிகச் சிறப்பு மலை விளக்காய் இலங்குகின்றதை எண்ணி மகிழலாம். தமிழன் என்று சொல்லலாம். தலைமிர்ந்து நிற்கலாம். அமைதியை நிலை நாட்டும் போர் என்றும் வேண்டியதுதான். அமைதியை அழிக்கும் போர் மறைய வேண்டியதுதான். போர் ஒழிக்கும் புதுமை இலக்கியம் போற்றுக. தும்பைத் திணை பன்னிரண்டு துறைகளுடையது. பன்னிரண்டு துறைகளும் பண்டைத் தமிழகப்படை மறவரின் ஆண்மை மிகு வீரத்தை அழகுற விளக்குகின்றன. அக்காலத்தில் தேர்ப்படை இல்லை போலும். ” தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலவும்” என்னுமிடத்தில் தேர் குறிப்பிடப்பட்டிலது. தேர் தானே இயங்காது குதிரையால் இழுக்கப்பட வேண்டியிருந்தமையான், குதிரைப் படைபுள் அடக்கிவிட்டனர் எனக் கருத இடமுண்டு. அக்காலப் போர் முறையுள் வேந்தரும் படைத்தலைவரும் முன்னின்று போர் நடத்தி வெற்றி பெறுவாரே யன்றி, இக்காலம் போல் படையை முன்னிறுத்திவிட்டுத் தாம் தக்கதோர் காவலிடத்தில் வீற்றிருந்து கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்திலர். ஆதலின் போர் வெற்றி முழுவதும் முன்னின்று நடாத்தும் வேந்தரையோ படைத்தலைவரையோ சார்ந்திருந்தது. படைகளுள் தார்ப்படை, தூசிப்படை, கூழைப்படை என்பன போன்ற பலவகைப் பிரிவுகள் ஒழுங்குறப் பொருந்தியிருந்தன. போர்ச் செயலுள் தனியாண்மை காட்டிய வீரமறவர் வழியில் வந்த தமிழ்ப் பெருமக்களைப் படைக்குரியராக ஆங்கிலேயர் மதியாது இருந்தமை வருந்தத்தக்கது.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 223-224)
Comments
Post a Comment