Ilakkuvanarin padaippumanikal: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 56. தொல்காப்பியர் குறிப்பிடும் ஐயர் வேறு; பிராமணர் வேறு

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 56. தொல்காப்பியர் குறிப்பிடும் ஐயர் வேறு; பிராமணர் வேறு

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 13, 2011


இனி இக்கரணம் தோன்றுதற்குரிய காரணம் கூறினார்.  இல்லறம் என்பது நடைபெறுவதற்குக் கணவனும் மனைவியும் காதலால் கூடுதல் வேண்டும்.  காதலால் கூடிய ஆடவரும் மகளிரும் கணவனும் மனைவியுமாக இணைந்து என்றும் வாழ்தல் வேண்டும்.  மறைவாகக் காதல் பூண்டு ஒழுகி மகளிர் நலம் துய்த்துவிட்டுப் பின்னர் மகளிரைக் கைவிடும் ஆடவரும் இருந்திருப்பர்.  பல பூக்களை நாடும் தேன்வண்டுபோல மகளிர் இளநலம் நாடி ஒருவரை விட்டு ஒருவரைப் பின்தொடரும் ஆடவரும் இருந்திருப்பர்.  மகளிர் அழகில் மயங்கி அவரைப் பன்முறையில் சிறப்பித்துக் கூறி அவர் காதலைப் பெற்ற பிறகு அவரை மறந்து வேறொரு பெண்ணிடம் காதல் வலை வீசும் ஆடவரும் இருந்திருப்பர். “கூந்தல் நரைப்பினும் கொங்கை தளரினும் உன்னைக் கைவிடேன்” என்று உறுதிமொழி கூறிவிட்டுப் பின்னர்க் கைவிடும் ஆடவரும் இருந்திருப்பர்.  ஆதலின் தமிழ் நாட்டுத் தலைவர்கள் – பெரியோர்கள் – சான்றோர்கள் இங்ஙனம் பொய்யும் வழுவும் நிகழாமல் தடுத்தற் பொருட்டுக் காதலிப்போர், பலரும் அறியக் கடிமணம் புரிய வேண்டும் என்று விதித்தனர்.  இதையே ஆசிரியர் தொல்காப்பியரும்,
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
என்று கூறிச் சென்றார்.  இதற்கு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் செய்யுங்கால் தம் காலத்து நிலவிய கொள்கைகளையும் தாம் கற்ற வடமொழிக் கருத்துகளையும் கொண்டு வந்து புகுத்துகின்றார்.  அதற்கு ஏற்ப நூற்பாவில் வந்துள்ள  என்ப என்றது ” முதல் நூலாசிரியரை அன்று ; வடநூலாரைப் கருதியது” என்று பொருளுரைத்துக் கொண்டார்.  இவ்வாறு கூறிக் கொண்டதே பொருந்தவறாகும்.  பனம்பாரனார் பாயிரத்துள் கூறியவாறு வடவேங்கடம் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிருமுதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி முந்து நூற்கண்டு முறைப்படக் கூறினாரேயன்றி, வடமொழி நூலைக்கண்டு வடவர் பழக்கங்களை ஏற்றுக் கூறினாரல்லர் ஆசிரியர்.  அவ்வாறு கூறியிருப்பின் தெளிவாகச் சுட்டியுரைத்திருப்பர். “என்ப” “என்மனார்” என்பன வெல்லாம் தமக்கு முன்னுள்ள தமிழ் நூலார்களைச் சுட்டியெனவேயன்றி வடமொழி நூலாரையன்று. “ஐயர் யாத்தனர் கரணம்” என்பதற்கு “இருடிகள் மேலோர் கரணமும் கீழோர் கரணமும் வேறுபடக்காட்டினார்” என்று கூறினார். “ஐயர்” என்னும் சொல் தூயதமிழ்ச் சொல்; தலைவர், மேலோர், வியத்தகு சிறப்புடையோர் என்று பொருள்படும்.  இன்று மற்றவரை  ஐய என்று அழைப்பது ஐயர் என்பதின் விளிவேற்றுமையாகும்.  தமிழ் நாட்டுப் பெரியவர்களை ஐயர் என்று அழைப்பதைக் கண்ட வட நாட்டிலிருந்து வந்த பிராமணர் தம்மையும் ஐயர் என்று அழைத்துக் கொண்டனர்.  பிராமணர்கள் தம்மை ஐயர் என்றும்,  சாத்திரி என்றும் அழைத்துக்கொண்டதைக் கண்ட ஐரோப்பியக் கிருத்தவப் பாதிரியார் தம்மை ஐயர் என்றும், சாத்திரி என்றும் அழைத்துக் கொண்டனர் அன்றோ? ஆதலின் தொல்காப்பியர் குறிப்பிடும் ஐயர் வேறு ; பிராமணர் வேறு.  தொல்காப்பியர் நூற்பாவில் உள்ள ஐயர் தமிழ் நாட்டுப் பெரியோர்களையே குறிப்பதாகும்.
நச்சினார்க்கினியர்தாம் அவ்வாறு கூறினார் என்றால் இந்நூற்றண்டில் வாழ்ந்து மறைந்த பிராமணப் புலவர் ஒருவரும் இந்நூற்பாவுக்குத் தவறுபடப் பொருளுரைத்து விட்டார். “ஆரிய மேலோர் வந்துதான் தமிழர்க்குத் திருமண ஒழுக்கங்களைக்  கற்பித்தனர்” என்று துணிந்து கூறிவிட்டார். ஐயர் என்னும் தமிழ்ச்சொல் ஆரிய என்னும் சொல்லின் மரூஉ என்று கருதி விட்டார் போலும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 181-182)

Comments

  1. Iyer means "periyor" only. It doesnot mean present Ariya Iyers at Tamilnadu who ruined the culture, tradition, Music, Fine Arts, etc etc wherever they are going and settling at there.As they are the fire worshippers they would carry the fire in a mud pond with them(Agni Hothram).While travelling on the banks of rivers naturally the wind would blow the fire would begin to glow. They themselves would come to a conclusion that the God had given them order to settle at there and would settle at there,and slowly they would become the Raja Gurus to the kings and would spoil every thing.Thus everything of us had gone still they ruining.'Brahminaisation' in everything has come, and in due course we would not be astonished if Avani Avittam (wearing Ceremony of 'Holy' Thread Of them) would be a National Holiday.Our Tamil people try to name their children in Sanskrit names. If Chezhian or Parithy being the names of our people it is liked to be imagined that they are brutal and their names are of a poor people. Thus the Ariya Mayai is in full fledged form in Tamilnadu. Writing this myself is a Brahmin but without "parppaneeyam" as I learnt Tamil and came from the family of Tamil Scholars.Hence Tamilnadu Brahmins are Adhi Saiva Sivachariyars only. Please look them they are black as like as us. They are fond of Tamil, Thevaram etc.Hence Iyer mentioned by Tholkappiar is great people only and he never mentioned present Brahmins as Iyers.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue