பிடித்தது: என்னைக் கவர்ந்த பத்து நூல்கள்



உங்களைக் கவர்ந்த பத்துப் புத்தகங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால், நா.பா.வின் குறிஞ்சிமலர், தி.ஜா.வின் மோகமுள், சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை போன்ற சில நாவல்களே பலரது பட்டியல்களில் இடம்பிடிக்கும். இவையெல்லாம் சிறந்த படைப்புகளே. ஆனால் நாவல்கள் மட்டும்தான் படிக்க வேண்டியவையா? சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வடிவங்களிலும் இசை, மதம், தொல்லியல் போன்ற பல்வேறுதுறைகளிலும் எத்தனையோ நல்ல நல்ல நூல்கள் உண்டே? அவற்றையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது எப்போது? அப்படியொரு முயற்சி இது. அண்மைக் காலத்தில் நான் முழுமையாக வாசித்த புத்தகங்களில் நாவல் தவிர்த்து என் கவனத்தைக் கவர்ந்த பத்தே பத்து நூல்களின் மிகச் சுருக்கமான அறிமுகம் இதோ: 1. எழுத்து உலகின் நட்சத்திரம் தீபம் நா.பார்த்தசாரதி நா.பா.பற்றிய கட்டுரைத் தொகுப்பு. அவரே எழுதிய இரு கட்டுரைகளும் நூலில் உண்டு. நா.பா. அமுதசுரபிக்காகச் சுயசரிதை எழுதிய போது எழுதியவாறே மருத்துவமனையில் காலமானது பற்றிச் சொல்லும் விக்கிரமன், நா.பா.வின் பிடிவாத குணம் பலமாகவும், பலவீனமாகவும் இருந்ததை விவரிக்கும் கி.ராஜேந்திரன், சைக்கிள் கேரியரில் அமர்ந்து நா.பா.பயணம் செய்ததை நினைவுகூரும் சுப்ர பாலன்....இப்படி நூலில் தொட்ட இடமெல்லாம் சுவாரஸ்யம். வாழ்க்கை வரலாற்றுத் துறையில் முத்திரை பதிக்கும் நூல். 2. "மாணிக்க வீணை': ஸ்வாமிநாத ஆத்ரேயர். தற்போது கோவிந்தபுரத்தில் வாழ்ந்துவரும் முதுபெரும் எழுத்தாளர் ஸ்வாமிநாத ஆத்ரேயர் எழுதிய கதை, கட்டுரை, நாவல் அடங்கிய நூல். தி.ஜானகிராமனின் நெருங்கிய நண்பர் ஆத்ரேயர். மணிக்கொடி மரபைச் சேர்ந்தவர். சம்ஸ்க்ருத அறிஞர். கட்டும் செட்டுமான சொற்சிக்கனம் நிறைந்த நடைதான் இவரது பலம். அந்த நடையழகில் மனம் பறிகொடுத்துக் கொண்டே வாசிக்கிறோம். படிப்பவர்களைக் கீழே வைக்கவிடாமல் கட்டி இழுத்துக் கொண்டு போகும் எழுத்தாற்றல். 3. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலாசிரியர் எழுத்தாளர் நாகூர் ரூமியின் நடை வசீகரம் நூலுக்குத் தூண்டில். இஸ்லாம் என்பதே சாந்தியும் சமாதானமும்தான். வன்முறையும் இஸ்லாமும் ஒன்றுக்கொன்று முரணானவை (பக் 56) என்கிறார் ஆசிரியர். நடைமுறையில் சிலர் செய்யும் தவறுக்கு ஒரு முழு சமுதாயத்தைத் தாக்குதல் தகாது என்ற உணர்வை ஏற்படுத்துகிறார். மதநல்லிணக்கத்தைத் தோற்றுவிக்க இந்நூல் உதவும். 4. டைரி (1916.1975) : சிவகுமார் நடிகர், ஓவியர் தற்போது கம்பராமாயணப் பேச்சாளர். திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கியவர் சிவகுமார். நேரப் பற்றாக்குறையால் தவிக்கும் பிரமுகர்களில் ஒருவரான இவரிடம் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது ஆச்சரியம். சிவகுமாரின் நாட்குறிப்பு இன்னொரு காலகட்ட கண்ணாடி. இடையிடையே கண்ணைக் கவரும் புகைப்படங்கள், நூலாசிரியரே வரைந்த ஓவியங்கள், அடுத்தவர் டைரியைப் படிப்பதில் தனி உல்லாசக் குறுகுறுப்பு இருப்பது மனித இயல்பு. ஒருவர் தன் டைரியையே அச்சிட்டுத் தந்தால் சுவாரஸ்யத்திற்குக் கேட்கவா வேண்டும்? 5. இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிஞர்கள் பிரமிக்க வைக்கும் தயாரிப்பு. ஒவ்வொரு கவிஞருக்கும் அமுதோன் வரைந்த கண்ணையள்ளும் சித்திரங்கள். நாம் விரும்பி வாசித்த கவிஞர்களின் சித்திரங்கள் வரும்போது, விரல்கள் பக்கத்தைப் புரட்டாமல் தயங்கி நிற்கின்றன. அகநானூறு, புறநானூறு என நூறுநூறாய்த் தொகுக்கும் தமிழ் மரபில் தொகுப்பாசிரியர் ப.முத்துக்குமாரசுவாமி இறங்கியுள்ளார். சிலம்பொலி செல்லப்பன் அணிந்துரை, நூலின் முகப்பில் சூட்டிய சொல் மகுடம். ஜாதி, மத, அரசியல் பிரிவுகள் கடந்து கவிதை அனுபவம் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு நூலைத் தொகுத்திருக்கும் மனப்பக்குவம் மெச்சத்தக்கது. 6. ஐராவதி கல்வெட்டியில் மேதை ஐராவதம் மகாதேவன், எழுத்தாளர். தினமணி முன்னாள் ஆசிரியர். அவரைப் பற்றியும் அவர் துறைசார்ந்த அறிஞர்களின் பொதுக் கட்டுரைகளை உள்ளடக்கியும் வெளிவந்துள்ளது ஐராவதி என்று பொருத்தமாகப் பெயரிடப்பட்டிருக்கும் நூல். வெளிதேசங்களிலும் இந்தியாவிலுமாக இருக்கும் இளைஞர்கள் சேர்ந்து நூலை உருவாக்கியிருக்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற அறிஞர்களின் கட்டுரைகளைக் கேட்டு வாங்குவது எத்தனை கடினமான பணி என்பதைச் சொல்லத் தேவையில்லை. 7. ஒரு மனிதன் மகாத்மாவான கதை: கி.கஸ்தூரி ரங்கன். கணையாழி நிறுவனரும் தினமணி முன்னாள் ஆசிரியருமான கி.கஸ்தூரி ரங்கன் எழுதிய நூல். மாணவர்களுக்குப் பயன்படும் வகையிலான எளிய நடை. காந்தியைப் போலவே நூலின் தயாரிப்பும் ஆடம்பரமே இல்லாமல் அமைந்துள்ளது. ஆங்காங்கே பொருத்தமான புகைப்படங்கள். காந்தியின் வாழ்வைப் படிக்கப் படிக்க ஒரு மனிதர்தானே இப்படியெல்லாம் வாழ்ந்தார், நாமும் ஏன் இப்படி வாழக்கூடாது என்ற உத்வேகம் இளைஞர்களிடையே எழும். எழ வேண்டும். 8. கோதை நாயகி இசை மார்க்கம் வை.மு.கோதைநாயகியை முன்னோடி எழுத்தாளர், பத்திரிகையாளர், சுதந்திரத் தியாகி, பேச்சாளர் என்று பலரும் அறிவார்கள். ஆனால் அவர் மிகச் சிறப்பான இசைக் கலைஞர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கோதைநாயகியின் மாபெரும் சிறப்பே அவர் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அந்தத் துறை நிபுணர்களுக்கு இணையாகச் செயலாற்றித் தானும் அத்துறை நிபுணராகவே ஒளிவீசினார் என்பதுதான். அவர் மிகச் சிறந்த கீர்த்தனை ஆசிரியர். அவரே எழுதிய கீர்த்தனைகள் பல இதுவரை அச்சேறாமல் இருந்தன. நம் நன்றிக்குரிய பி.ராமபத்ரன் அவற்றை அவரது குடும்பத்தாரிடமிருந்து தேடித் தொகுத்து கோதைநாயகியே எழுதிய ஸ்வரக் குறிப்புகளுடன் நூலாக்கியுள்ளார். இசையன்பர்கள் தவறவிடக் கூடாத அபூர்வ நூல். 9. வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரின் கோம்பி விருத்தம் (பழைய இலக்கியம்) அகலிகை வெண்பா உள்படப் பல அரிய தமிழ் நூல்களால் இலக்கியத்தை அணி செய்த வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரின் 150 ம் ஆண்டு இது. 90 ஆண்டுக்கு மேல் வாழ்ந்த அவர், தொழிலால் கால்நடை மருத்துவர். அவர் எழுதிய கம்பராமாயண சாரம் என்ற நூல் கம்பனின் கவிதைகளுக்கு ஓர் ஒளிவிளக்கு. கோம்பி விருத்தம் என்ற விருத்தப் பாக்களால் ஆன ஒரு நூலையும் எழுதியுள்ளார். ஜெ.மெர்ரிக், ஆங்கிலத்தில் எழுதிய புகழ்பெற்ற கேமலியான் (பட்ங் இட்ஹம்ப்ங்ர்ய்) என்ற நூலின் தமிழ்க் கவிதையாக்கம் இது. கிடைக்காமலிருந்த இந்நூல் அண்மையில் மறுபிரசுரம் கண்டுள்ளது. பழந்தமிழன்பர்கள் தவறவிடக் கூடாத நூல். 10. அழகிரிசாமி இலக்கியத் தடம்: தொகுப்பாசிரியர் மு.பரமசிவம். மறக்க முடியாத மாணிக்கங்களில் ஒருவர் கு.அழகிரிசாமி. தன்னடக்கமே வடிவான ஞானி. அவரது எழுத்து குறித்து வல்லிக் கண்ணன், கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், ஆ.மாதவன், மகரிஷி, சா.கந்தசாமி, தீப.நடராஜன், ராஜமார்த்தாண்டன், கல்கி, சிட்டி, வண்ணநிலவன், பிரபஞ்சன், நீலபத்மநாபன், வெங்கட்சாமிநாதன் உள்ளிட்ட பலரது கட்டுரைகளின் தொகுப்பு இது. அழகிரிசாமியின் வாழ்வும் பேசப்படுகிறது. படைப்புகள் விமர்சனப்பூர்வமாகவும் அணுகப்படுகிறது. தொகுப்பாசிரியர் மு.பரமசிவத்தின் கடின உழைப்பால் தமிழுக்குக் கிடைத்த கொடை.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்