அவுஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதைவாங்கியிருக்கிறார்களாம் ‘இந்தியர்கள்’. கடந்த வாரம் கூட ஒரு ‘இந்தியர்’ கும்மாங்குத்து வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம்.
அவுஸ்திரேலிய அரசு ‘இனவெறி'யுடன் நடந்து கொள்கிறதாம்.
அடப் பாவிகளா... ரெண்டு பேருக்கு உதடு கிழிந்ததற்கே ‘இனவெறி' என்று கூச்சல் போட்டால், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மழலைகள்... பெண்கள்... முதியவர்கள்... என்று எந்த இரக்கமும் இன்றி பாஸ்பரஸ் குண்டுகளாலும் புல்டோசர் ஏற்றியும் எங்கள் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே... அதனை என்னவென்று சொல்வீர்கள்? அவுஸ்திரேலிய சாராயக்கடையில் குடித்துவிட்டு அலப்பரை செய்தபோது விழுந்திருக்கிறது முதல் உதை.
அதற்கே குய்யோ... முய்யோ... என்று கூப்பாடுகள்... பிரதமரின் எச்சரிக்கை... உள்துறை, வெளியுறவுத் துறையின் அலறல்கள்... தூதுவர்களின் கண்டனம்... வட இந்தியத் தொலைக்காட்சிகளின் ஓலங்கள்...
இவற்றையயல்லாம் பார்த்தும் கொஞ்சம்கூட இரக்கம் வரவில்லை. மனம் இறுகிப் போயிருந்தது.
இதற்காக வேதனைப்படவுமில்லை.
கண்ணீர் வடிக்கவுமில்லை என்பதுதான் உண்மை.
காரணம்: எதை விதைக்கிறார்களோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
பத்துப் பதினைந்து நாட்கள்கூட ஆகவில்லை எம் இனத்தின் தளிர்களும்... இளம் குருத்துக்களும் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு. மொத்த தமிழினமும் துயரத்தின் உச்சியில் நின்று குமுறியபடி ஆதரவுக் கரங்களுக்காய் அலைபாய்ந்தபோது, ஒருவரும் வரவில்லை.
வாயைத் திறக்கவில்லை பிரதமர்.
வாயைத் திறக்கவில்லை தூதரகங்கள்.
வாயைத் திறக்கவில்லை உள்... வெளி அமைச்சகங்கள்.
தமிழகத்தின் சகல ஜீவன்களும் தங்கள் உறவுகளுக்காய் கதறிக் கண்ணீர் விட்டபோது, கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தது மத்திய அரசு.
குடும்பம் குடும்பமாய்க் கூடி அழுதோமே நாம்.
தமிழகத்தின் தெருக்கள் தோறும் சந்தித்துக் கொண்டவர்கள், “என்னவாச்சு பிரபாகரனுக்கு?”
“என்னவாச்சு முற்றுகையில் சிக்கியுள்ள மக்களின் கதி?” என்றுதானே பரிதவித்தார்கள்.
‘கதியற்றோருக்குக் கடவுளே துணை’ என நம்பியவர்கள் கோயில்களில் குமுறித் தீர்த்தனர்...
மசூதிகளில் மனம் வெதும்பி மண்டியிட்டனர்...
ஆலயங்களில் அழுது புலம்பினர்...
மனிதரை நம்பியவர்களோ... யுத்தத்தையே நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து வீதியில் இறங்கினர்.
எதற்கும் செவிசாய்க்கவில்லை அவர்கள்.
வாயும் வயிறும் எரிகிறது.
குண்டடி பட்டு செத்து வீழ்வதும் தமிழன்.
அவனுக்காய் தொண்டை வற்றிக் குரல் கொடுப்பவனும் தமிழன்.
ஆனால்... அவுஸ்திரேலியாவில் அடிபட்டவன் அப்படி இல்லையே.
எமது கண்ணீரைக்கூட கேலி செய்தது வடக்கத்திய மீடியாக்கள். தமிழர்களும் அவர்களது நகரங்களும் தரைமட்டமாக்கப்பட்டபோது பட்டாசு வெடித்து கொண்டாடாதது ஒன்றுதான் பாக்கி. நாம் அழுதுகொண்டிருந்த வேளையில் அவர்கள் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் நாம் அப்படியா இருந்தோம்?
குஜராத்தில் பூகம்பம் என்றால் கண்ணீர் வடித்தோம். கட்டியிருந்தது போக மிச்சமிருந்ததை அள்ளிக் கொடுத்தோம்.
ஒரிசாவில் வெள்ளம் என்றால் வாய்ப்பு இருந்தவர்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தையும்... வசதியற்றவர்கள் தங்கள் உண்டியலின் சேமிப்பையும் கூட துயர் துடைக்கக் கொடுத்தோம்.
கார்கிலில் போர் மேகங்கள் என்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்தி யுத்த நிதி அளித்தோம்.
அன்று அவர்கள் அழுதபோது நாமும் அழுதோம்.
ஆனால் இன்று நாம் அழும்போது நாம் மட்டுமே அழுகிறோம்,
என்ன கொடுமை இது?
ஆனால் இந்தப் பாரபட்சம் இன்று மட்டுமில்லை, என்றும்தான்.
வளைகுடாப் போரில் மலையாளிகள் மாட்டிக் கொண்டனர் என்றதும் ஓடோடிப் போனார் அமைச்சர் உன்னிக் கிருஷ்ணன்.
பிஜித் தீவில் குஜராத்திகளுக்குப் பிரச்சினை என்றபோது குமுறி எழுந்தது இந்திய அரசு.
ஒஸ்ரியாவில் இரண்டு சீக்கியர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் செத்தார் என்பதற்காக, பஞ்சாப்பே பற்றி எரிந்தது.
அடுத்த கணமே “காப்பாற்ற நானிருக்கிறேன் கவலைப்படாதீர்கள்” என தானாடாவிட்டாலும் தன் தசை ஆடியது இந்தியப் பிரதமருக்கு.
இவற்றையயல்லாம் பார்க்கும்போது, எனக்குள் எழும் கேள்வியயல்லாம் ஒன்றே ஒன்றுதான்:
எங்களைப்பற்றி இந்தியா கவலைப்படாதபோது, எதற்காக நாங்கள் இந்தியாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?
அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நமது கதி...
அது ‘மாமா’ நேரு காலமாக இருந்தாலும் சரி... அது ‘அன்னை’ இந்திரா காலமாக இருந்தாலும் சரி... அது ‘அன்னை’யின் தவப்புதல்வன் காலமாக இருந்தாலும் சரி... அது ‘அன்னை’யின் மருமகள் காலமாக இருந்தாலும் சரி...
அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நமது கதி.
ஆக
தமிழனென்று சொல்லுவோம்.
தலை நிமிர்ந்து செல்லுவோம்.
தமிழர்களது தலையை
மற்றவர்கள் விட்டுவைக்கும் பட்சத்தில்.
- பாமரன்
(தமிழக அரசியல் வார இதழ் ஒன்றில் இருந்து)
Comments
Post a Comment