இரவலராய் மாறிய மன்னன்



இன்றைய உலகில் தனக்குக் கீழ்நிலையில் உள்ள ஒருவர் நற்செயல் செய்யும்போது அவர்களைப் பாராட்டுவது என்பதோ, அவர்தம் செயல்களுக்கு ஆதரவு தருவது என்பதோ கிடையாது. ஆனால் மனச்சான்று சிறிதும் இன்றி அவரை இகழ்வர். இத்தகைய மனிதப் பண்பற்ற இழிகுணங்கள் மனிதனிடம் இருத்தல் கூடாது. தன்னைவிடத் தாழ்நிலையில் ஒருவர் நற்செயல்களைச் செய்தால், அவரைப் பாராட்டுவதுடன் அவர்தம் செயல்களுக்கும் உறுதுணையாக இருத்தல் வேண்டும். இத்தகைய மனிதப் பண்பினை புறநானூற்றில் இடம்பெறும் பாடல் ஒன்று தெளிவுற எடுத்துரைப்பது நினைத்தற்குரியதாகும். வள்ளல்களைப் புலவர்களும், பரிசிலர்களும் வாழ்த்திப் பாடுவர். இது இயற்கை. ஆனால் வள்ளல் ஒருவனை அவனினும் ஆற்றலால் உயர்ந்திருந்த மன்னன் போற்றிப் பாடுவது அரிது. சிறுகுடி என்ற சிற்றூருக்குத் தலைவனாக பண்ணன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனைக் கிழான் என்றும் பண்ணன் என்றும் கூறுவர். அவனது நெல்லித்தோட்டமும் தீஞ்சுவை நீர் அளிக்கும் கிணறும் இலக்கியத்தில் இடம்பெற்று இறவாத் தன்மையடைந்துள்ளன. இப் பண்ணனைப் பற்றி மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்ற புலவர், ""இடுக்கண் இரியல் போக உடைய கொடுத்தோன்! கொடைமேந் தோன்றல்'' (புறம்-388) என்று அவனது வள்ளல் தன்மையை எடுத்துக்காட்டிப் புகழ்கிறார். இப்பண்ணன் ஆட்சியாலும் அரசாலும் மிகப் பெரியன் என்று கொள்ளுதற்கில்லை. இவன் குறுநில மன்னரிலும் சிறு நிலப்பரப்பினை உடையவன். எனினும் முடியுடை மூவேந்தரிலும் கொடைத்திறம் மிக்கவன். இதனால் இவன் பெற்ற சிறப்புப் பெயர், "பசிப்பிணி மருத்துவன்' என்பதாகும். பசியாகிய நோயைப் போக்கும் மருந்தினை அளித்து மகிழும் வள்ளல் என்பது இதன் பொருளாகும். இவனது இப்பெரும் புகழைப் புலவரேயன்றி இவனினும் மிக்க ஆற்றலும் அறிவும் உடைய சோழ மன்னனும் போற்றி இருக்கின்றான். சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் என்பது அச்சோழ மன்னனது பெயராகும். இம்மன்னன் பேராற்றலும் பெருவளமும் உடையவனாகத் திகழ்ந்தான். எனினும் பண்ணனது பண்பைக் கண்டு, இரவலனாக மாறி அவனைப் பாராட்டிப் புகழ்கிறான். இதன்மூலம் இரண்டு பெரிய உண்மைகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறார். ஒன்று, அவன் கவிதை வளம் உடையவன் என்பது. மற்றொன்று, அவன் பண்பில் சிறந்து விளங்குபவன் என்பது. சோழனின் மனிதநேயப் பண்பையும் வாழ்வியல் உண்மைகளையும், ""யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் காண்கிவன் கடும்பினது இடும்பை யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந்தன்ன ஊண்ஒலி அரவம் தானும் கேட்கும் பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச் சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும் மற்றும் மற்றும் வினவுவதும் தெற்றெனப் பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே!''(புறம்-173) என்ற பாடல் தெளிவுற எடுத்துத்துரைக்கிறது. பண்ணனின் சிறப்பறிந்த மன்னர் மன்னனின் உணர்ச்சி பொங்குகிறது; ஊற்றெனச் சுரக்கிறது; கவிதை பிறக்கிறது. முதலிலே தோன்றுவது பண்ணன் நெடுங்காலம் வாழ வேண்டுமே என்ற உணர்வுதான். எவ்வாறு நெடுங்காலம் வாழ்வான்? அவனும் மனிதன்தானே! கூற்றுவனுக்கு இலக்காக ஒருநாள் மடிய வேண்டியவன் தானே! கூற்றுவனை வேண்டுகிறான் மன்னன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். தனது ஆயுளையும் எடுத்துக் கொடுத்துப் பண்ணனை நெடுநாள் வாழவைக்குமாறு வேண்டுகிறான். எவ்வளவு பெரிய நல்லுள்ளம்! அடுத்த வேளை உணவுக்கு என் செய்வேன் என ஏங்கும் ஏழை ஒருவன் இதைக் கூறவில்லை. வாழ்வை வெறுத்தொதுக்கும் வளமிலான் கூற்றும் அன்று. செல்வ வாழ்வில் புரளும் மன்னர் மன்னன் இதைக் கூறுகிறான். பண்ணனின் பண்புக்கேற்ற வண்ணம் பாராட்டும் சோழ மன்னனின் புலமையை இதில் காணலாம். தன்னையும் ஓர் இரவலனாக வைத்து மதித்தால்தான் வள்ளல், பண்ணனது பெருமையை உணர்த்த முடியும் என எண்ணிய மன்னன் தன்னிலை மறந்து தன்னை எளியவனாகத் தாழ்ந்த நிலையில் வைத்து நோக்குகிறான். அந்த நோக்கிற்குப் பண்ணன் வெறும் பண்ணனாகவோ வள்ளலாகவோ தோன்றவில்லை. "பசிப்பிணி மருத்துவ'னாகக் காட்சியளிக்கிறான். "பசிப்பிணி மருத்துவன்' என்ற சொற்றொடர் ஆழம் வாய்ந்ததாக அமைந்து, எளிதாகப் பொருள் உணர்த்துகிறது. மேலும், ஆட்சியாளர்கள் பிறர் செய்யும் நல்லனவற்றைப் பாராட்டுதல் வேண்டும். மாறாக அவர்களைத் தூற்றக் கூடாது. மக்களுக்குப் பயன் நல்கும் செயல்களைச் செய்வோருக்கு உறுதுணையாக இருப்பது ஆள்வோரின் கடமையாகும் என்ற இக்காலத்துக்குப் பொருந்தும் அரிய வாழ்வியல் கருத்துகளையும் சோழமன்னன், இப்பாடல் வழி எடுத்துரைப்பது நோக்கத்தக்கதாகும்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue