பிடித்தது: வாழ்க்கையை மாற்றியமைத்த புத்தகம்!




அது அந்தக் காலம். வீட்டினுள் எந்த சேதி நுழையலாம், எந்த விஷயம் தவிர்க்கப்படலாம் என்பதை வீட்டின் குடும்பத்தலைவர்தான் தீர்மானிப்பார். நான் பள்ளிச் சிறுவனாய் இருந்தபோது எங்கள் வீட்டிற்குள் "கல்கண்டு' மட்டும்தான் நுழையும்.அதிலும் விலக்கப்பட்ட பக்கங்கள் உண்டு. சங்கர்லால் தணிக்கை செய்யப்படுவார். எப்படி பல் ஆரோக்கியம் பேணுவது? எந்தப் பழம் எந்த உடற்பகுதிக்கு ஆரோக்கியம் தரும். அமெரிக்காவில் ஃபோர்டு எங்கேயிருக்கிறது? எத்தனை கார் தயார் செய்கிறது? என்றெல்லாம் எங்களுக்குத் தெரிய வரும்.ஆனாலும் பல் விளக்க சோம்பல்தான். பழந்தின்னப் பிடிக்காதுதான். ஃபோர்டைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை? போகிறபோக்கில் அப்பாவின் கேள்விக்கணை தொடுக்கும். ""போன வாரம் மலச்சிக்கலைப் பத்தி கல்கண்டுல என்ன போட்டிருந்தான்?'' பதில் சொல்லியாக வேண்டும் இல்லையென்றால் காதின் கீழ்நுனி திருகப்படும். அதற்காகவே விளக்கெண்ணெயைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.ஆனால் எனக்கு ஆச்சரியம். பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதைவிடக் கல்கண்டில் மலச்சிக்கலைப் பற்றி வந்தது கேட்கப்படுவதுதான். சரி விடுங்கள். பள்ளிப் பாடத்தைவிட பொது அறிவு முக்கியம் என்று பெற்றோர் அந்தக் காலத்தில் அறிந்திருந்தார்கள்.என்றாலும் நூலகத்திற்குச் செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. படிக்கிற வயதில் கதைப்புத்தகம் படிப்பது பெருங்குற்றமல்லவா? செங்கல்பட்டு லோகோ ஷெட்டிற்குப் பின்னால் மாவட்ட நூலகம் அமைந்திருந்தது.நண்பர்கள் வீட்டிற்குச் செல்வதாய் பொய் சொல்லி, நூலகத்திற்குச் செல்வதுண்டு. வாயில் நுழையாப் பெயர்களோடு வண்ணப்படங்கள் நிறைந்த கைக்கடங்கா அகலமான புத்தகங்கள்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவை ரஷ்ய மொழிபெயர்ப்புகள் என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன்.அதற்கப்புறம் தாம்பரம் கிறித்துவ கல்லூரியில் ஒரு வருடம் பி.யு.சி. அந்த ஒரு வருடம் இருக்கிறதே! சுதந்திரம் என்ற பெயரில் "அவுத்து விட்ட மாடு' மாதிரி இங்கு மேய்வதா? அங்கு மேய்வதா? என்று அலைபாய்ந்தே மேயாமல் ஓடிவிட்டது. பள்ளிக்கூடத்தில் குறைந்தபட்சம் பாடங்களையாவது கட்டாயம் படிக்க வேண்டுமென்ற பயம் இருந்தது. இங்கு இதுகூட இல்லாமல் போயிற்று.அப்புறம் ஏது மற்ற புத்தகங்களைப் படிப்பது? தேர்வில் தோல்வியுற்றுத் தலைகுனிந்து தந்தையின் முன் நின்றபோது முடிந்தது கல்வி. அப்புறம் ஒரு வருடம் விமானப்படையில் பயிற்சி. அதற்கப்புறம் ஒரு வருடம் நடிப்புப் பயிற்சி. அங்கு சுத்தமாய் புத்தகமென்பதே கிடையாது. கனவு காண்பதற்கே நேரம் போதாத போது கற்பனைக் காவியங்களை எங்கே தேடிப் படிப்பது?நண்பர் யூகிசேதுவின் உதவியோடு அவருடைய நண்பர் சங்கர்ராமன் வீட்டில் தங்க வேண்டியதாயிற்று. ஒருநாள் சங்கர்ராமன் ஒல்லியாய் ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்து, ""இதப் படிச்சுப் பாருங்க'' என்றார்.நான் என்னமோ காஃபி கொடுக்கப்பட்டதைப் போல ""இல்ல பரவாயில்லிங்க'' என்றேன். சங்கர்ராமன் நான் சொன்னதையே வேறுமாதிரி சொல்லிப் புத்தகத்தைத் திணித்தார். வேறு வழியில்லாமற் படிக்க ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்த பிறகுதான், புத்தகத்தின் தலைப்பையும் ஆசிரியரின் பெயரையும் பார்த்தேன். "கரைந்த நிழல்கள்' - அசோகமித்திரன். அப்போது ஏற்கனவே இரண்டு படங்கள் நடித்து முடித்திருந்ததால் வாசித்த கதையின் ஒவ்வொரு வரியும் காட்சியாய் வந்து விரிந்தன. அதற்குப்பின் "மோகமுள்'. இப்படித்தான் பற்றிக் கொண்டது இந்தப் படிக்கிற பழக்கம்.அதன்பின் சுயமாய்ப் புத்தகங்களைத் தேடிப் பிடித்து, படித்ததை விவாதித்து, பகிர்ந்து கொண்டு, என்ன படிக்கலாம் என்று கேட்பவர்களுக்கு சில புத்தகங்களைச் சொல்லுமளவுக்குப் போனேன்.இதுதான்...இந்தக் காலகட்டம்தான் என் உண்மையான கல்விக்காலம் என்பேன். என்னில் தன்னம்பிக்கை வளர்த்து, சிந்திக்க வைத்தது இப்பழக்கம். பியர் அடிக்க ஆரம்பித்தால் அது எங்கெங்கோ கொண்டு போய்விடுமென்று பயமுறுத்துவார்கள். பாருங்கள் அதுபோலவே இந்த வாசிக்கிற பழக்கம் என்னை வேறு வேறு தளங்களில், பிரதேசங்களில் பயணிக்கச் செய்தது.கொஞ்சகாலம் ராயப்பேட்டையில் ரஃபாத் என்ற நண்பருடைய வீட்டில் தஞ்சம். அங்கு அவருடைய மைத்துனர் ரவூஃப் பழக்கமானார். அவருடைய சின்னஞ்சிறு அறையில் புத்தகங்கள் இறைந்து கிடக்கும். ஒதுக்கிவிட்டுத்தான் உட்கார முடியும். ஒருநாள் அவர் சிறிய 90 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்று தந்தார். ""படி'' என்றார். நான் படித்தேன். புத்தகத்தில் பாதிப் பக்கங்கள் காட்சி வடிவாயிருந்தன. நான் படம்கிடம் பார்க்காமல் சள்ளென்று படித்து முடித்துவிட்டு, இது என்ன பெரிய புத்தகம் என்ற தோரணையுடன் ரவூஃபிடம் திருப்பிகி கொடுத்தேன். அவர் என்னையே உற்றுப் பார்த்தார். எனக்கு ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல் நெளியத் தோன்றியது.சிலநாட்கள் கழித்து சில மோசமான நிகழ்வுகளால் தன்னம்பிக்கை இழந்து என்ன செய்வது என்றறியாது மன உளைச்சலில் உழன்று கொண்டிருந்தேன். ரவூஃபிடம் அழுது புலம்பினேன். அவன் ஆறுதல் சொல்லித் தேற்றுவான் என்று பார்த்தால், ஏற்கனவே படித்த அந்தப் புத்தகத்தைக் கையில் திணித்து எழுந்து போய்விட்டான்.நான் செய்வதறியாது அப்புத்தகத்தோடு மவுண்ட்ரோடில் நடக்கவாரம்பித்தேன். கால்பாட்டுக்கு அது என்னை இழுத்துச் சென்றது. எண்பதுகளில் இப்போது போல நெரிசலும் இல்லை. புகையும் இல்லை. நான் நடந்து காதி கிராஃப்ட்டை அடைந்தேன். கையில் இருந்த காசுக்கு சுக்கு காப்பி வாங்கி நாக்கு வெந்துபோக குடித்தேன். சுள்ளென்று சுட்டதினால் ஒரு விறைப்பு வந்தது. அப்படியே நடைபாதையில் உட்கார்ந்து கையில் கனத்த அப்புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். மெதுவாய் என்னைச் சுற்றியிருந்த இரைச்சல் காதினின்று அடைப்பட்டது. படித்து முடிக்கையில் ஏதோ ஒரு பரபரப்புத் தோன்றியது.மீண்டும் புத்தகத்தை படிக்கத் தோன்றியது. எழுந்து அண்ணா சுரங்கப்பாதையை ஓடிக் கடந்து ராஜாஜி ஹாலை அடைந்து பெருத்த மரநிழலில் உட்கார்ந்து, மெதுவாய் படித்து ஒவ்வொரு பக்கத்தையும் உள்வாங்கினேன். கடைசிப் பக்கத்தை முடிக்கையில் அழுகை அடிவயிற்றிலிருந்து பீறிட்டு வந்து தொண்டையை அடைத்து நின்றது.அதை வெளியேற்ற "ஓ' வெனக் கத்தத் தோன்றியது. அக்கம்பக்கம் ஆள்நடமாட்டம் இருந்ததால் அதை அப்படியே விழுங்கினேன். குனிந்து கைகளால் தலையைத் தாங்கி குலுங்கிக் குலுங்கி அழுதேன்.என் உதடுகள் ""நான்...நான்...ஜோனதன் லிவிங்ஸ்டன்...நான் காற்றை வெற்றி கொள்வேன்...நான் பறப்பேன்...நான் பறந்தே தீருவேன். ஏனென்றால் நான் ஜோனதன் லிவிங்ஸ்டன்'' என்று எனக்கு மட்டுமே கேட்கும்படி அரற்றிற்று. ஓர் அரைமணி நேரம் கழித்து பேரமைதி ஏற்பட்டது.எழுந்து அப்படியே நடந்து எம்.எல்.ஏ.ஹாஸ்டல், தொலைக்காட்சி நிலையம், பல்கலைக்கழகம், அகன்ற சாலை, குப்பைகளால் தன்னிறமிழந்த மணற்பரப்பு இவற்றையெல்லாம் கடந்து நுரை பொங்கும் கடலலைகளால் என் காலை நனைய விட்டேன். காலின் குளிர்ச்சி என் மனதையும் சென்றடைந்தது. நேரஞ்சென்று, தொடுவான தூரத்தில் ஒரு ஒற்றைப் பறவை பறந்து கடந்து சென்றது.என் மனம் சொல்லிற்று அது ஜோனதன் லிவிங்க்ஸ்டனாகத்தான் இருக்க வேண்டும்... அது நான்தான்...நான்தான்...என்று என் உதடுகள் மீண்டும் அரற்ற ஆரம்பித்தன. அப்போது பேரலை ஒன்று என்னை நிலைதடுமாறச் செய்து தள்ளியது. நான் என்நிலைக்குத் திரும்பினேன். சற்றுதூரத்தில் ரவூஃப் கொடுத்த அந்த நீலநிறப் புத்தகம் ஒரு சிற்றலையால் உள்வாங்கப்பட்டது. நான் அதை மீட்க எத்தனிக்கவில்லை. அதன்சாரம்தான் என் நரம்புகளில் அதிர்ந்து கொண்டிருந்ததே. பின்குறிப்பு:சென்ற வாரம் ஒரு பெருத்த மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது படித்தது புதிதாய் படிப்பது போலிருந்தது. புதிய ஓர் அர்த்தத்தைக் கொடுத்தது. மன உளைச்சல் மறைந்தோடிற்று. என் வாழ்க்கையை மாற்றியமைத்த புத்தகம் இது என்றால் அது மிகையாகாது.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்