உறையூருக்கு வடக்கே சில மைல் தொலைவில் உள்ளது அந்தச் சிற்றூர். அச் சிற்றூரைச் சேர்ந்த சிற்றிடையாள் ஒருத்தி உறையூருக்குச் சென்றுவருவதும், காவிரியில் குளித்து மகிழ்வதும் வழக்கம். கொழுத்த வாளை மீன்கள் கரையில் ஏறி இரையைக் கவ்விக்கொண்டு மீண்டும் ஆற்றில் துள்ளிக் குதிக்கும் அழகைக் காண்கிறாள் அவள். மனம் இப்படி எண்ணுகிறது: சோழ மன்னனோ போர்க்களத்தில் வாளை ஏந்தி விளையாடுகிறான். காவிரிப் பெண்ணோ நீர்க்களத்தில் "வாளை' ஏந்தி விளையாடுகிறாள். "வில்'லிலிருந்து அம்பு போலப் புறப்பட்டு, பகைவர்களை "புலி'யெனப் பாய்ந்து பந்தாடும் சோழ மன்னனின் வீரத்தை நாடெல்லாம் புகழக் கேள்விப்பட்டவள், இப்போது "மீன்' வளத்தை நேரடியாகக் கண்டுகொண்டாள். அவள், ஒருநாள் சோழ மன்னன் காவிரியில் நீராடக் கண்டாள். கண்ட பொழுதுமுதல் அவனை நினைத்தே தன் உள்ளம் போராடக் கண்டாள். மனமின்றித் தன் சிற்றூருக்குத் திரும்பிய அவள், அங்குள்ள குளத்தில் ஒருநாள் நீராடப் போகிறாள். மடந்தை அவளின் மனப்போக்கை அறிந்தோ என்னவோ, வட திசையிலிருந்து பறந்து வந்த நாரை ஒன்று குளத்தில் இறங்கியது. யாரை விட்டுத் தன் எண்ணத்தை சோழனிடம் சொல்லலாம் என எண்ணியவள், நாரை வந்ததும் நெஞ்சம் உவந்தாள்; நாணத்தில் கன்னம் சிவந்தாள். எப்படியும் சிறிது நேரத்தில் குளத்தைவிட்டுக் கிளம்பும் இந்த நாரை, தென்திசை நோக்கித்தான் செல்லும் என எண்ணிய அவள், நாரையிடம் இப்படிச் சொல்கிறாள். ""அழகிய நாரையே! நீ தெற்கேயுள்ள உறையூருக்குச் செல்வாயானால், தேக வலிமை காரணமாக கரையின் மேல் உராய்ந்து உராய்ந்து ஏறிய மீன்கள் மீண்டும் நீரில் விழுந்து விளையாடும் வளமிக்க நாட்டையுடைய சோழ மன்னனிடம் நான் உற்ற நோயை உரைப்பாய். உன் காலில் விழுந்து கும்பிடவும் நான் தயார்'' என்கிறாள். முத்தொள்ளாயிரத்தில் வரும் முத்தான பாடல் இதோ,செங்கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல்நின்கால்மேல் வைப்பன் என் கையிரண்டும்-வன்பால்க்கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்(கு)உரையாயோ யான்உற்ற நோய்... (பாடல்-21) கரையேறிய மீன்கள் மீண்டும் ஆற்றில் விழுவதுபோல என் ஆசை மனதும் அவனையே மீண்டும் மீண்டும் நாடுகிறது என மறைமுகமாகக் குறிப்பிடுகிறாள் அவள். மேலும், மீன் வளமிக்க உறையூருக்குச் சென்றால், நீ இரைப்பை நிறைக்கலாம்; என் இதய கொதிப்பைக் குறைக்கலாம் என நாரையிடம் நயமாகக் கெ(கொ)ஞ்சுகிறாள் அவள். பாவையவளின் பாசாங்கு நாரையிடம் பலித்ததோ என்னவோ!காதல் படுத்திய பாட்டைக் கண்டோம். இதோ நட்பு படுத்தும் பாடு. அழகான மாலைப் பொழுது. பாண்டி நாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊர். தன் இல்லத்தில் உலவிக் கொண்டிருக்கிறார் புலவர் பிசிராந்தையார். உள்ளத்திலோ உறையூரில் இருக்கும் உயிர் நண்பனாம் கோப்பெருஞ் சோழனை கொள்ளை கொண்ட அன்பு. இருவரும் நேருக்கு நேர் பார்த்ததில்லை. ஆனாலும், அவர்களின் இதயங்களுக்குள் வேர்விட்டு வளர்ந்து, பொழுதெல்லாம் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது "நட்பு' என்னும் பூமரம். அந்திப் பொழுதில் ஆற்றாமையால் உலவிக் கொண்டிருக்கும் பிசிராந்தையார் வானில் இரு அன்னப் பறவைகள் வடக்கு நோக்கிப் பறந்து செல்வதைக் காண்கிறார். எண்ணத்தைத் தூதுவிட என்னத்தை அனுப்பலாம் என நினைத்திருந்த புலவருக்கு அன்னத்தைக் கண்டதும் அளவிலா ஆனந்தம். ஆண் அன்னத்தை நோக்கிக் கூறுகிறார் இப்படி: ""அதிக வெற்றியை உடைய எங்கள் பாண்டிய மன்னன் இந்த நாட்டைக் காப்பதற்குக் கொள்ளும் குளிர்ந்து விளங்கும் முகம்போல இந்த மாலையில் மதியம் ஒளிவீசுகிறது. எனக்கோ இது ஆற்றாமை தரும் மயக்கமான மாலை. நான் மட்டும் இப்படி என் நண்பர் இல்லாமல் வருந்திக் கொண்டிருக்க, நீயோ இணையோடு இன்பமாய் பறந்து செல்கிறாய். நீ வடக்கு நோக்கிப் பறப்பதைக் கண்டால் தெற்கே குமரித் துறையில் அயிரை மீன்களை வயிறார உண்டுவிட்டு வடக்கே இமயமலைக்குச் செல்வதைப்போல் தோன்றுகிறது. அப்படியானால், இடையில் இருக்கும் சோழ நன்னாட்டின் வழியாகத்தான் நீ நிச்சயம் செல்லும்படி இருக்கும். அங்கே உறையூர் என்னும் தலைநகரம் இருக்கிறது. அங்கு உயர்ந்த அரண்மனை தோன்றும். நீயும் உனது பெண் அன்னமும் சிறிது தங்கலாம். அங்கே வாயில் காப்போனுக்கு நின் வரவை உரைத்துவிடாமல் நீயே நேராக அரண்மனைக்குள் சென்றால், அங்கே என் உயிர் நண்பன் கோப்பெருஞ் சோழன் இருப்பான். அவன் கேட்கும்படி நீ உன்னை "பிசிராந்தையாரின் தொண்டன்' என்று ஒரு சொல் மட்டும் சொன்னால், உனது பெண் அன்னம் விரும்பத்தக்க உயர்ந்த அணிகலன்களை அவன் வழங்குவான். இந்த உதவியை நீ சிறிது செய்ய வேண்டும்'' என்கிறார் அவர். அன்னச் சேவல், அன்னச் சேவல்! ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல் நாடுதலை யளிக்கும் ஒண்முகம் போலக் கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் மையல் மாலையாம் கையறுபு இனையக் குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயின் இடையது சோழநன் நாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ வாயில் விடாது கோயில் புக்கெம் பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர் ஆந்தை அடியுரை எனினே மாண்டநின் இன்புறு பேடை அணியத்தன் நன்புறு நன்கலம் நல்குவல் நினக்கே... (புறநானூறு-67) அன்பால் கட்டுண்ட உள்ளங்களைப் பாடாய்ப் படுத்துவதில் காதலுக்கும் நட்புக்கும் அதிக வேறுபாடில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது அல்லவா?
எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment