கொடிநிலை, கந்தழி, வள்ளி...!



தொல்காப்பியத்தில் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் மூன்று வாழ்த்து நிலைகள் சொல்லப்படுகின்றன. இம்மூன்றுக்கும் நச்சினார்க்கினியர் தத்துவார்த்தப் பொருள் கண்டுள்ளார்.இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழ்மக்கள் இயற்கை வழிபாடு செய்தார்கள் என்பதற்கு அடிப்படையாகத் துலங்கும் இம்மூன்றும், கொடிநிலை, கால மாற்றத்தால் பரிணாம வளர்ச்சி பெற்று, திருக்கோயில் கொடிமரமாக, ஏற்றப்படும் கொடியாக; "பலிக்கல்'லாக, வள்ளி, பலிக்கல்லில் படைக்கப்படும் பலியாக மாற்றம் பெற்றன என்னும் முறையில் இப்போது சிந்திக்கலாம்.இயற்கை வழிபாடாகிய மரவழிபாட்டுடன் இம்மூன்றையும் தொடர்புபடுத்தியும் பார்க்கலாம்.முதலில் கொடிநிலை - கானகத்தில் இருள்பட வளர்ந்த மரங்களின் மீது இயற்கையாகவே தழைத்துச் செழித்த கானகத்துக் கொடிகள் சுற்றிப் படர்ந்து நெடிதுயர்ந்து சென்றிருப்பது இயல்பு.இதைக் கண்ணுற்ற அக்கால மக்கள் மன உணர்வில், அப்போது அவர்களுக்குக் கிடைத்த பட்டறிவிலும், நூலறிவிலும் கொடிசுற்றிப் படர்ந்துள்ள மரங்களின் மீது தெய்வத்தன்மை பொருந்தி இருப்பதாக மதித்துக் கடவுளுக்குச் சமமாகக் கருதி வணங்கினார்கள்.இரண்டாவது - கானகத்துக் கொடிகள் சுற்றிய மரத்தின் வற்றி உலர்ந்துபோன அடிப்பகுதி. அந்த அடிப்பகுதியைப் பார்த்த அம்மக்கள் மனத்தில், பழைய மனநிலை உணர்வு காரணமாக, முன்பு கொடி சுற்றிப் படர்ந்த மரத்தைத் தெய்வத்துக்கு நிகராகக் கருதி வணங்கியதைப் போன்று, வற்றி உலர்ந்த அந்த மரத்தின் அடிப்பகுதியிலும் தெய்வம் குடிகொண்டிருப்பதாக மதித்து வழிபட்டனர்.""கடவுள் போகிய கருத்தாள் கந்தத்துஉடன் உறை பழைமையின் துறத்தல் செல்லாதுஇரும்புறாப் பெடையோடு பயிறும்பெருங்கல் வைப்பின் மலை'' (அகம்.307-12-15) ""கடவுள் நிலை பெற்றிருந்து இப்போது நீங்கிச் சென்றுவிட்ட கரிய அடிப்பகுதியை உடைய கந்தழி'' என்று அகநானூறு - நித்திலக்கோவை கூறுகிறது. இச்சான்றும் நினைக்கத்தக்கது.""கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே'' என்று திருநாவுக்கரசர் பாடுகிறார். "கந்தழி' என்பது, தனிப்பரம் பொருளாகிய "கந்தக் கடவுள்' எனச் சுப்பிரமணிய பராக்கிரமம் என்னும் நூலில், சகத்திரான்ம பரிபாலன மூர்த்திப் படலத்தில் ஒரு குறிப்பு வருகிறது.மூன்றாவது வள்ளி - வள்ளி என்பது கொடி. மரம் வற்றி உலர்ந்து கீழே சாய்ந்து முற்றிலும் சிதைந்துபோன நிலையில், மரத்தைச் சுற்றிப் படர்ந்து மேலே சென்ற கொடி, படர்ந்து செல்லுவதற்குப் பற்றுக்கோடு இன்றித் தரையில் பரவிக் கிடந்தது.பழைய பெருமை கருதி, இக்கொடியிலும் தெய்வம் குடிகொண்டிருப்பதாக மதித்து அவர்கள் வழிபாடு செய்தனர். இந்த இயற்கை வழிபாட்டு முறையை அறிந்த ஆசிரியர் தொல்காப்பியனார் கொடிநிலை, கந்தழி, வள்ளி எனப் பெயரிட்டு அவற்றையும் வழிபடத் தக்கனவாக மதித்து அழைத்தார்.""கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'' (தொல்.புற-33) கன்னிப் பெண்கள் தங்களின் திருமணம் தாங்கள் விரும்பும் வண்ணம் நிறைவேறுதல் வேண்டும் என வேண்டிப் பிறையைத் தொழுவது தொன்மை வழக்கு. அவ்வியற்கை வழிபாட்டினைப் போன்றே கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய இயற்கைப் பொருள்கள் மூன்றுக்கும் தெய்வத் தன்மை ஏற்றி வழிபட்டனர்.இயற்கையாகவே கொடிசுற்றி மேலே சென்றுள்ள மரத்தைக் கொடிநிலை எனப் போற்றி வணங்கினர் அல்லவா! இந்த வழிபாட்டுநிலை பரிணாம வளர்ச்சி பெற்றது; காலம் தோறும் படிப்படியாக வளர்ந்தது.கானகத்து இயற்கை வழிபாட்டோடு தொடர்புடைய இம்மரம்தான், நமது பண்பாட்டு வளர்ச்சியின் சின்னமாகத் தோன்றுகின்ற திருக்கோயில்களில், கால வளர்ச்சியில் "கோயில் கொடி மரமாக' வடிவம் பெற்று உயர்ந்தது. கானகத்தில், அம்மரத்தைச் சுற்றிப் படர்ந்து மேலே சென்ற கொடியே, திருக்கோயில் கொடி மரத்தில் ஏற்றப்படும் கொடியாக வடிவம் பெற்று உயர்ந்தது. அரசனுக்கு உரிமைப்படுத்தப்பட்ட கொடியிலும் சின்னம் அமைக்கப்பட்டது.இவ்வாறு அனுமானிப்பது மிகவும் பொருத்தமேயாகும். நடைமுறை அனுபவ அறிவுக்கும் சிந்தனைக்கும் ஏற்ப அமையும். எனவே, தொல்காப்பியனார் கூறியுள்ள கொடிநிலையே, பிற்காலத்தில் கோயில் கொடிமரமாக உருவெடுத்தது என்று கூறுவது பண்பாட்டு வரலாற்று நோக்கிலும், சமுதாய வரலாற்று நோக்கிலும், மானிடவியல் நோக்கிலும் மிகவும் பொருந்தமாகும்.தொல்காப்பியனார், கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் இம்மூன்றையும் இத்தகைய எளிய பொருளிலா கூறியிருப்பார் என்னும் ஐயவினா எழும்.""கொடி நிலையானது, அரி, அயன், அரன் என்னும் மூவர் கொடிகளும் ஒன்றனோடு உவமித்துத் தன் அரசன் கொடியைப் புகழ்தல். கந்தழியாவது, திருமால் வாணாசுரனின் சோ நகரத்து அரணை அழித்த வெற்றியைச் சிறப்பிப்பது. வள்ளியாவது, முருகக் கடவுள் பொருட்டுப் பெண்டிர் வெறியாட்டு அயர்வது''இவ்வாறு புறப்பொருள் வெண்பா மாலை (கொளு-39,40,41) தெய்வத் தொடர்புபடுத்திக் கூறியிருப்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பின்வரும் எளிய பொருளும் சொல்லப்படுகிறது.மாற்றாரை வென்று உயர்த்தி, கொடியின் சிறப்பினைப் பாடுதல் கொடிநிலை என்றும், மாற்றாரது அரணை அழித்த வெற்றியைக் குறிப்பது கந்தழி என்றும், வள்ளல் தன்மையைக் குறிப்பது வள்ளி என உரைப்பதும் வரலாற்று அணுகுமுறை, மானிடவியல் நோக்கு ஆகியவற்றுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்