பிடித்தது: பத்து புத்தகங்கள்



"உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்' என்றொரு நூல் சோவியத் அக்டோபர் புரட்சியைப் பற்றி எழுதப்பட்டது. இருபதாம் நூற்றாண்டே, ஆரம்பம் முதல் இப்படிப் பல பத்துநாட்கள் கொண்டதாக நேர்ந்துவிட்டது.இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியிலேயே பிறந்துவிட்ட எனக்கு முதலில் படிக்கக் கிடைத்த நூல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. சார்லஸ் டிக்கன்ஸ் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் பதினெட்டாம் நூற்றாண்டைப் பற்றி எழுதிய "எ டேல் ஆஃப் டூ சிடீஸ்'. இதில் உள்ள இரு நகரங்கள் லண்டனும் பாரிஸýம். பாதிக்கு மேல் முக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்வது பாரிஸில்தான். இந்த நூலைத்தான் எவ்வெவ்வளவு வெவ்வேறு பதிப்புகளில் படித்து லயித்திருப்பேன்! இன்னும் அந்த நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் நாளெல்லாம் படித்துக் கொண்டிருப்பேன்.அடுத்த புத்தகம் "காபுலி வாலாவும் இதர கதைகளும்' . இதைத் தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் படித்து வேறு சிந்தனையே இல்லாது மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறேன். உண்மையில் இந்த நூலை என் வாழ்க்கையில் மிகவும் நெருக்கடியான தருணத்தில் பார்க்க நேர்ந்தது. இதிலுள்ள கதைகளை என் மகன்களுக்கும் சொல்லியிருக்கிறேன். அவர்களும் அதில் உள்ள கதைகளைப் படித்துப் பயன் அடைந்திருக்கிறார்கள். ஒரு நூலின் மிகப் பெரிய பயன், அது மனித மனத்தையும் கற்பனையையும் விரிவாக்குவது.மூன்றாவது அன்று ஒரு வாரத் தொடராக வந்த உ.வே.சாமிநாதய்யரின் "என் சரித்திரம்'. மிக நீண்ட வரலாறுடைய தமிழ் இலக்கியத்தில் ஆரம்பப் படைப்புகளிலிருந்து சமகாலம் வரை ஏராளமான இலக்கியப் படைப்புகளைப் பகுப்பாய்ந்து பலவற்றைப் பதிப்பிக்கவும் செய்த அந்த மனிதருக்கு வெகு இயல்பாக மிக நவீன உரைநடை கைவந்தது. அத்துடன் கவனத்தை மிக உயர்ந்த நிலையில் இருத்தி வைக்கும் வெளிப்பாடு. ஓர் உதாரணத்துக்குக் கூற வேண்டுமானால் அவருடைய பல உரைநடை நூல்களில் ஒன்றான "தியாகராஜ செட்டியார்' வாழ்க்கை வரலாறு.மீண்டும் பள்ளிப் பருவத்தில் படித்த ஒரு படைப்பு: "கள்வனின் காதலி'. கல்கியும் சுவாரசியமான கதை சொல்லி. அவருடைய பிற்காலப் படைப்புகளில் இந்தக் கதை சொல்லல் சற்று மிகையாகிவிட்டது. "கள்வனின் காதலி'யிலும் சில அதீத வரிகள் உண்டு. ஆனால் மொத்தப் படைப்பில் "கள்வனின் காதலி' பல சிறப்பான பகுதிகள் கொண்டது. இன்றும் அந்தப் படைப்பின் பல வரிகள் மனதை விட்டு அகலவில்லை.பள்ளி, கல்லூரியில் கல்வி பயிலும் அனைவருக்கும் அவர்களுடைய பல பாட நூல்களே மறவா இலக்கியமாக இருக்கும். என் காலத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மு.வ. படைப்புகளை புனித நூல்களுக்கு இணையாகக் கருதினார்கள். எனக்குக் கிடைத்த நூல்கள் ஆங்கிலத்தில்தான்.தற்செயலாக ஒரு தமிழ் சிறுகதையைப் படித்தேன். படைப்பாளி பெயர் தெரியாது. ஆனால் அந்தப் படைப்பு என்னை வெகுநாட்கள் தூங்கவிடாமல் செய்தது. அவ்வளவுக்கும் அது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு விலக நினைத்த ஒருவர் பற்றியது. என்னுடைய நாற்பதாவது வயதில் அந்தப் படைப்பாளி புதுமைப்பித்தன் என்று அறிந்தேன். என்னை மிகவும் பாதித்த தமிழ் எழுத்தாளர்களில் அவர் முதல் மூன்று நான்கு இடங்களில் இருப்பார்.புதுமைப்பித்தனை அறிந்தால் கு.ப.ரா.வும் சி.சு.செல்லப்பாவும் உடனே கண்முன் வந்துவிடுவார்கள். மீண்டும் சிறுகதைகள்தான். "எழுத்து' பத்திரிகைக்கு ஓராண்டுச் சந்தா கட்டியதற்காக அவருடைய "வாடிவாசல்' கிடைத்தது. வியந்து போய்விட்டேன். பின்னர் பல ஆண்டுகள் கழித்து ஹெமிங்வேயின் "டெத் இன் தி ஆஃப்டர்நூன்' படித்தேன்.இப்போது ஒருவாறு பட்டியல் தயாரிக்கலாம் என்று நினைக்கிறேன்.1. எ டேல் ஆஃப் டூ சிடீஸ் - சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியது.2. தாகூர் படைத்த "காபுலிவாலாவும் இதர கதைகளும்'3. "என் சரித்திரம்' - உ.வே.சாமிநாதய்யர் எழுதியது.4. "கள்வனின் காதலி' - கல்கியின் முதல் நாவல்5. புதுமைப்பித்தன் சிறுகதைகள்6. கு.ப.ரா. சிறுகதைகள்7. "வாடி வாசல்' - சி.சு.செல்லப்பாவின் குறுநாவல்.8. "வாழ்ந்தவர் கெட்டால்' - க.நா.சுப்பிரமணியத்தின் ஒரு சிறுநாவல்.9. வில்லியம் ஃபாக்னர் என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய "சவுண்ட் அண்ட் ஃப்யூரி'10. "நாற்பத்தொன்பது சிறுகதைகள்' - அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே படைத்தது.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue