திருவள்ளுவர்-சர்வக்ஞர்-ஒற்றுமையின் ஒற்றுமை
First Published : 08 Aug 2009 01:33:00 AM IST
ஏழைகள் வாழும் பணக்கார நாடு இந்தியா என்றார் ஒரு கவிஞர். இந்தியா இயற்கை வளம் நிறைந்த நாடு மட்டுமல்ல, இலக்கிய வளமும் நிறைந்த நாடு. நம்மிடம் இருக்கும் இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்தத் தவறியதால்தான் இயற்கையில் வளம்மிக்கவராக, பணக்காரர்களாக இருந்தும் ஏழைகளாக வாழ்கிறோம். அதேபோல் வாழ்க்கையை வளப்படுத்தும் இலக்கிய வளத்தை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியதால் நெறியற்ற வாழ்க்கையை நோக்கி இன்றைய சமுதாயம் பயணிக்கிறது. இயற்கையாலும், இலக்கியத்தாலும் இந்தியா ஒன்றுபட வேண்டும்.இத்தகைய மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க எங்கோ ஓர் ஆரம்ப எழுத்து உதித்தாக வேண்டும். அது இன்று உதிக்க ஆரம்பத்திருக்கிறது. அதற்கு வித்திட்டிருக்கும் இருபெரும் இலக்கியவாதிகள் அய்யன் திருவள்ளுவரும், அப்பன் சர்வக்ஞரும்.இப்படி இரு மாநில ஒற்றுமையை ஏற்படுத்திய இந்த இருமாபெரும் இலக்கியவாதிகளிடமும் மாபெரும் ஒற்றுமை மண்டிக் கிடக்கிறது. அய்யன் திருவள்ளுவர் ஈரடியில் இந்த வாழ்வியலை அளந்தவர். இரண்டு கண்கள் எப்படி சரியான பாதையில் செல்ல வழிவகுக்கிறதோ அப்படி வள்ளுவரின் ஈரடிகள் வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டியாக உள்ளது என்றால் மிகையில்லை.சர்வக்ஞர் மூன்றாவது கண்ணிலும் நம்பிக்கை உடையவராக இருந்ததால் - ஆம் சிவன் மீதும் ஆழமான பக்தி கொண்டதால் - மூன்று கண்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது என்று எண்ணியதால் ஓர் அடி ஓர் கண்ணாக மூவடிகளில் அவர் வாழ்க்கைக்கு வழிகாட்டினார் என்று எண்ணத் தோன்றுகிறது.""நெருப்புக் கிணற்றில் விழுந்ததுபோல் இந்த உலக வாழ்க்கைத் துன்பத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு மேலே வரவேண்டுமென்றால் - இறைவனின் பாதத்தைப் பற்றி மேலேறி வர வேண்டும்'' என்கிறது சர்வக்ஞரின் ஓர் பாடல்... இப்பாடல்பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.என்ற குறளின் கருத்தை ஒத்திருப்பதை நாம் அறியலாம்.""யார் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்க்கைச் சக்கரத்தை நன்கறிந்தவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு அவர்களைக் குருவாகக் கொண்டு வாழ வேண்டும்'' என்கிறார் சர்வக்ஞர்.அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறன்அறிந்து தேர்ந்து கொளல் என்று பெரியாரைத் துணைக் கோடல் என்ற அதிகாரத்தில் நமது அய்யனின் குறள்கள் அனைத்தும் அதே கருத்தைத்தான் வலியுறுத்துகின்றன."சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்உழன்றும் உழவே தலை'இது அய்யன் திருவள்ளுவரின் வரிகள்.""உலகில் உள்ள அத்தனை திறமைகளிலும் தலைசிறந்தது உழவே. உழவே இந்த வாழ்க்கைச் சக்கரத்தைச் சுற்றுகிறது. அது இல்லை என்றால், இன்றைய இந்த உலகம் பாழ்படும்''இது சர்வக்ஞரின் வரிகள்... எவ்வளவு ஒற்றுமை பார்த்தீர்களா... இந்த மாபெரும் கவிஞர்களின் மன ஒற்றுமைதான் மாநில ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறதோ?அடுத்து வாய்மையைப் பற்றி சொல்லும்போது...""வாய்மை பேசுபவனின் முன்னால் இந்த உலகமே தலைவணங்குகிறது. ஒரு தாய் எப்படித் தன் மகனை அன்புடன் அழைத்து அருகில் வைத்துக் கொள்வாளோ அதேபோல இறைவன் அவர்களைத் தன்னருகில் வைத்துக் கொள்கிறார்''.சர்வக்ஞரின் இந்த மூவடிஉள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்உள்ளத்துள் எல்லாம் உளன்அதாவது ஒருவன் உள்ளம் அறிய பொய் பேசாமல் வாழ்வானானால் உலகத்தார் எல்லோருடைய உள்ளங்களிலும் இடம்பெற்று போற்றப்படுவான் என்ற நம் ஐயன் ஈரடிக்கு ஒத்தாக உள்ளது என்பது வியப்பே.எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டும் இக்கவிகள் எப்படிப் பேச வேண்டும் என்று இந்த உலகிற்குச் சொன்னதிலும் கருத்தொற்றுமை உள்ளது வியப்பை அளிக்கிறது.தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினால் சுட்டவடுநம் அய்யனின் இந்த வைர அடிகளுக்கும் ""அன்பான வார்த்தைகள் நிலவு பொழியும் ஒளியைப் போன்றது; அதேசமயம் கடுமையான சொற்கள் காதில் ஆணியை அடிப்பது போன்று கொடுமையானது''.என்ற சர்வக்ஞரின் அடிகளுக்கும் எவ்வளவு ஒற்றுமை பார்த்தீர்களா?எப்படி வாழ வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று கூறிய கவிகள் எப்படி உண்ண வேண்டும் என்று கூறுவதிலும் ஒற்றுமை இருக்கிறது.மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின் தான் முன்னர் உண்ட உணவானது நன்கு செரித்துவிட்ட தன்மையைத் தெளிவாக அறிந்து கொண்ட பிறகு ஒருவன் தக்க அளவு மட்டுமே உட்கொள்வானேயானால் அவனுடைய உடம்புக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.இன்னொரு குறள் கூறுகிறது.அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து.ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்துள்ளதை அறிந்து கொண்டு உடம்பிற்கு மாறுபாட்டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.உடம்பைப் பேணுவதில் சர்வக்ஞர் என்ன சொல்கிறார் பார்ப்போம்.பசிக்காத போது உண்ணாதே... ஆம் செரித்துப் பசிக்காமல் உண்ணாதே - அதிக சூடானது அதிக குளிரானது எடுத்துக் கொள்ளாதே - மருத்துவனின் தயவில் வாழாதே... சர்வக்ஞர் நாடோடியாகச் சுற்றித்திரிந்தாலும் - உடல் நலம் இல்லையென்றால் வாழ்க்கை நலம் பயக்காது என்று இச்சமூகத்தின் பால் அக்கறை கொண்ட கவிஞராகத் திகழ்கிறார்.இப்படி இன்னும் எவ்வளவோ கருத்துகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.இவர்களின் பாடலில் கருத்து ஒற்றுமை மட்டுமல்ல; சில சொற்களை இவர்கள் கையாண்ட விதமும் ஒற்றுமையாக இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்குஅன்பினைப் பற்றி நம் வள்ளுவர் கூறும்போது அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.அன்போடு பொருந்தி இயங்கும் உடம்பு தான் உயர்ந்தது. அப்படி இல்லாதது எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்ட வெற்றுடம்பாகும் என்ற உயரிய கருத்தை எடுத்துரைக்கிறார்.சர்வக்ஞர் ""எலும்பின் மேல் தோல் போர்த்திய இந்த உடம்பிற்கு - ஏன் சாதியின் பெயரைச் சொல்லி வேறுபடுத்துகிறீர் என்கிறார்.''ஆக உயர் பண்பு இருந்தால்தான் இது உடம்பு; அன்பு போன்ற உயர்பண்பும் இல்லாமல் வேற்றுமை பாராட்டக்கூடிய மனப்பாங்கும் இருந்தால் இது வெறும் எலும்பு மேல் போர்த்திட்ட தோல் என இருபெரும் கவிஞர்களுமே உணர்த்துகிறார்கள்.வள்ளுவர் வாழ்ந்ததோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால். சர்வக்ஞர் காலமும் மிகச் சரியாகக் கணக்கிடப்படவில்லை. ஆனால் 17-ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்திலிருந்து அவரைப் பற்றிய கதைகளும் செய்திகளும் உலா வருகின்றன என்பது வரலாறு. வள்ளுவர் முறையான இல்வாழ்க்கை வாழ்ந்தவர். சர்வக்ஞர் ஒரு துறவியைப்போல நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர் என அறிகிறோம். வள்ளுவரை நீண்டு வளர்ந்த தாடியுடன் தூக்கி முடிந்த கொண்டையுடன் பார்க்கிறோம். சர்வக்ஞர் முழுதும் மழித்த தலையுடனே காட்சியளிக்கிறார். வள்ளுவரின் கருத்துகளில் சாந்தம் இருந்திருக்கிறது. ஆனால் அதே கருத்துகளை கூறும்போது சர்வக்ஞர் சற்று கனல் பறக்கவே கூறியிருக்கிறார். சர்வக்ஞர் என்று எல்லா பாடல்களின் முடிவிலும் தன் பெயரைப் பதித்திருக்கிறார்.இப்படி சின்னச் சின்ன வேற்றுமைகளைத் தவிர இந்த இரு கவிஞருக்கும் ஒற்றுமையே மேலோங்கியிருக்கிறது. அதனால் பெங்களூரில் வள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையும் மாநிலங்களின் ஒற்றுமை முயற்சியைப் பறைசாற்றுகிறது. இன்று பக்கத்து மாநிலங்கள் சில காரணங்களுக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் உறவுப் பாலமாகத் திகழ்கிறார்கள் இவர்கள்.நம் மாநிலத்தை வணங்குவோம்; மற்றவரின் நியாயமான விருப்பத்திற்கு இணங்குவோம் என்ற உயரிய தத்துவத்தோடு, தேசிய எண்ணம், ஒரே நாடு என்ற எண்ணத்தோடு வாழ்வோம். அதுவே இந்த மகா கவிஞர்களுக்கு நாம் செலுத்தும் வணக்கம் ஆகும்.தொடரட்டும் இத்தகைய முயற்சிகள்; வளரட்டும் இந்திய ஒருமைப்பாடு.(கட்டுரையாளர்: பா. ஜ. க . மாநில பொதுச் செயலாளர்)
கருத்துகள்
இலக்கிய ஒப்புமை கருத்துகளை அருமையாக விளக்கியுள்ள தமிழிசைக்குப் பாராட்டுகள். புட்பதத்தா என்னும் இயற்பெயருடைய கவிஞர் 'அனைத்தும் அறிந்தவர்'ஆக நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்பதற்காக ' அனைத்தும் அறிந்தவர்' அஃதாவது 'சர்வக்ஞர்' எனப் புனை பெயர் வைத்துக் கொண்டார். தந்தையின் சீர்திருத்த எண்ணம் இவரது அறிவில் உறைந்துள்ளது. ஏனெனில் சைவ பிராமண வகுப்பைச் சேரந்த இவரது தந்தையார், சூத்திரர் என்று ஒதுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கைம்பெண்ணை - விதவைப் பெண்ணை மணம் புரிந்து கொண்டார். இருவருக்கும் பிறந்தவர்தான் கவிஞர். குறளடியில் எழுதியவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். சிந்தடியில் - மூன்றடியில் எழுதியவர் சர்வக்ஞர். இவரது சிறப்பைப் போற்ற கருநாடகத்தினர் எத்தகைய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். ஆனால் முக்காலப் புலவர் உலகப் பாவலர் திருவள்ளுவருடன் ஒப்பிட்டுக் கொண்டு தமிழ்இன எதிர்பைக் கையாளுவது கண்டிக்கத்தக்கது. செயல்பாடற்ற வெற்று வீர உரைகள் ஆற்றும் நம்மவர்களை ஆற்றுப்படுத்துபவர் யாருளர்?
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/8/2009 3:17:00 AM
8/8/2009 3:17:00 AM
இலக்கியச்செல்வரின் இனிய மகளே.
ReplyDeleteதங்களின் படைப்பு, ஒப்பீடு மிகவும் அருமை. நீங்கள் மீன் குஞ்சு. வாழ்க வளமுடன்.
தி.தமிழ்ச்செல்வன்
t.thamizhchelvan@gmail.com