நம் நாட்டில் பழங்காலத்தில் இருந்து அறம் மற்றும் நீதிக்குத் தான் முதலிடம். முக்தி அடைவதுதான் அக்கால மனிதர்களின் வாழ்க்கை லட்சியமாக இருந்தது. அதற்கு முக்கியமான கருவி அறம். இந்த மனித உலகில் எப்படி வாழ வேண்டும் என்று சொல்வதுதான் அற இலக்கியங்களின் முக்கிய நோக்கமாகும். தார்மிகக் காவியங்களும் சாஸ்திர நூல்களும் கூறுவது இதனைத்தான். காவியங்களில் ஏதோ ஓர் அரசனின் அல்லது மகா புருஷனின் கதை இருந்தாலும் அதன் லட்சியப் பின்னணி தருமத்தை நோக்கியதாக இருக்கும். இந்த உலகத்தில் அவர்கள் வாழும் பொழுது எப்படி நாலு பேருக்கு முன்மாதிரியாக வாழ்ந்தார்கள். நன்னடத்தையால் பெயர் பெற்றார்கள் என்று சொல்வது தான் அந்த நூல்களின் குறிக்கோள் என்று சொல்லலாம். நீதி இல்லாமல் அறம் இல்லை; நல்லொழுக்கம் இல்லாமல் நற்கதி இல்லை. அதனால் அறத்தைப் போதிக்கிற எல்லோரும் நீதியைச் சொல்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் பிற மொழிகளிலும் நீதி இலக்கியங்கள் உள்ளன. கர்நாடகத்தில் கி.பி. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மக்கள் கவிஞர் சர்வக்ஞர். இவர் எப்பொழுதும் லோகசஞ்சாரம் செய்பவர். அப்படி அவர் ஊர்ஊராகச் செல்கிறபொழுது ஆங்காங்கே தான் கண்ட, உண்ட அனுபவங்களையும் கற்றுக்கொண்டதையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொள்ள முடியும். தான் இப்படித்தான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாக சர்வக்ஞர் ஒரு பாடலில் தெரிவிக்கிறார்: சர்வக்ஞன் என்பவன் கர்வத்தால் ஆனவனோ? சர்வபேரிடமும் ஒவ்வொன்றைத் தான் கற்றுக் கல்வியின் மேருவாய் ஆனான் சர்வக்ஞன் "த்ரிபதி' எனும் பெயர் கொண்ட மூன்றடிகளால் எழுதப்பட்ட உரைப்பாக்களை இவர் எழுதியுள்ளார். கன்னட நாட்டுப்புறப் பாடல்களின் வழியாகத்தான் இந்த மூன்றடி வடிவ உரைப்பாக்கள் மிகுதியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வடிவம் கொண்டதால் இப்பாடல்கள் மக்களுக்கு உகந்த பாடல்களாயின. த்ரிபதிகள் மூலமாக சர்வக்ஞர் தம் கருத்துகளைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். எளிய மக்களுக்குப் புரிகின்ற நிலையில் மிக எளிமையாக உயர்ந்த கருத்துகளைக் கூறுகின்றார். கேட்டால் போதும் அவை மனதில் தங்கும் இயல்புடையவையாகும். சர்வக்ஞர் என்பது இவருடைய இயற்பெயர் அல்ல. மக்களிடமிருந்து கிடைத்த விருதுப்பெயர் அல்லது பட்டப்பெயராக இருக்கலாம் அல்லது கன்னட வீரசைவ வசனக்காரர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரையே தமது காவியத்தில் புனைபெயராக வைத்துக்கொள்கிற பழக்கம் கர்நாடகத்தில் உண்டு. அதைப்போல் இவரும் தெய்வத்தின் பெயரையே தனது புனைபெயராக வைத்துக் கொண்டிருக்கலாம். அனைத்தும் அறிந்த அறிவன் இறைவன் மட்டும்தான். அவ்விறைவனை மனத்துள் நிலைத்து வைத்துக் கொண்டுள்ளதன் குறியீடாகவும் இது இருக்கலாம். அனைவரும் தம் உறவினர் என்று வாழ்ந்த உலகக் குடிமகன் இவர். எனவே, யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்கிறார். சமூகத் தொண்டே வாழ்க்கையின் லட்சியம் என்று கருதி வாழ்ந்தவர். வாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களைப் பற்றியும் பாடுகிறார். இசையில்லாப் பாட்டும் இன்பமில்லா வாழ்வும் இசைவில்லா அரசனின் ஆட்சியும் பாழூரின் மிசை வாழும் கூகை காண் சர்வக்ஞா அரசன் என்றாலே அத்துடன் தியாகக் குணத்தையும் கொண்டிருக்க வேண்டும். அப்படி அல்லாத அரசனின் ஆட்சி பாழடைந்த ஊரிலுள்ள கூகைபோல் என்கிறார் அவர். கோடி வித்தைகளில் உழவே சிறந்தது. நாட்டில் இராட்டைகளும் சுழலும். இலையெனில் வாட்டங்கள் மிகுமே சர்வக்ஞா இப்பாடலில் விவசாயத்தின் சிறப்பை அழகாகக் கூறுகிறார். கோடி வித்தைகளை ஒருவர் கற்றிருந்தாலும் விவசாயத்தை என்றும் மறக்கக் கூடாது. ஆட்சி நிர்வாகத்திற்கான அடிப்படைப் பொருளாதாரமாக இருப்பது விவசாயமே ஆகும். சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை'.... என்கிற குறளுடன் இதை இணைத்துப் பார்க்கலாம். வாழ்க்கையைப் பற்றி சர்வக்ஞர் ஓர் எளிமையான சூத்திரத்தை நம்முன் வைக்கிறார். அது, அன்னம் படைப்போருக்கும் உண்மை உரைப்போருக்கும் தன்போல் பிறரைப் பார்ப்போருக்கும் கையிலாயம் கண்முன் காட்சியாம் சர்வக்ஞா அன்னம் படைப்பது, உண்மை உரைப்பது, தன்னைப் போலவே பிறரையும் காண்பது ஆகிய இம்மூன்றும் சர்வக்ஞன் கூறுகின்ற சூத்திரம். இதன் மூலமாகத் தானத்தையும், தானம் செய்கிறவன் சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறார். இவைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமாக முக்தியை அடையலாம் என்பது அவருடைய நம்பிக்கை. இதனால், தானம் கொடுப்போனுக்கும் இறைவனுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்கிறார். சர்வக்ஞரின் உலக அனுபவம் பரவலானது. அவருக்கு சாஸ்திர ஞானமும் இருந்தது. அதைவிட விவகார ஞானம் அதிகமானது. வாழ்க்கையில் எது சரி, எது சரியல்ல என்ற பார்வையின் மூலமாகத்தான் நீதியை நிலைநாட்டப் புறப்படுகிறார். சில நேரங்களில் அவரது உரைப்பாக்கள் சிந்திக்கவும் வைக்கின்றன. சர்வக்ஞர் புதிதாக எந்தத் தத்துவத்தையும் சொன்னவர் அல்ல. வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டும் எளிமையாகச் சொல்கிறார். நல்லவன் இல்லாத ஊரும் கள்ளனுடன் தொடர்பும் பொய்யன் சொல்லும் - இம்மூன்றும் சகதியில் முள்ளை மிதித்தாற் போல் சர்வக்ஞா என்கிறார். நாம் எந்தவிதமான மனிதர்களுடன் பழகுகிறோமோ அதே குணம் நமக்கும் வந்துவிடும். அதனால், எப்பொழுதும் நல்லவருடனான நாட்டத்துடனேயே இருக்க வேண்டும். ஒள்ளியருடன் இணைந்த கள்ளன் ஒள்ளியனாம் ஒள்ளியன் கள்ளனுடன் இணையில் அவனொரு கள்ளனே ஆவான்காண் சர்வக்ஞா நல்லவரிடம் இருக்கிற சில குறைகளைப் பொருள்படுத்தக் கூடாது. அவர்களிடம் இருக்கின்ற நற்செய்திகளை மட்டும் காண வேண்டும் என்று கூறும்போது இப்படிக் கூறுகிறார்: பழங்களில் வளைந்துள்ளது வாழை பழமது சுவையில் மிகுவதுபோல் பெரியார்தம் பிழையும் நன்மைக்கே சர்வக்ஞா பெண்ணைப் பற்றி சர்வக்ஞர் பலவிதமான கருத்துகளைக் கூறுகிறார். நாட்டுப்புறப் பாடல்களில் வரும் கருத்துகளுடன் அதை ஒப்பிடலாம். பெண்ணின் அழகு, ஈர்ப்பு, குடும்ப வாழ்க்கை, சஞ்சல குணங்களை எல்லாம் அழகாகச் சொல்கிறார். மனிதருடைய எல்லா நடவடிக்கைகளுக்கும் முக்கியக் காரணம் வாழ்க்கையை நாம் காணும் விதம். நமது பார்வைதான் நமது சிந்தனைகளை வழிநடத்துகிறது. எல்லாவற்றையும் எல்லோரையும் பார்க்கின்ற கண்தான் நம் எல்லாச் செயல்களுக்கும் முக்கியக் காரணம். கண்ணினால் புண்ணியம் கண்ணினால் பாவம் கண்ணினால் இகம் பரம் எனவே - உலகிற்கு கண்ணே காரணம் சர்வக்ஞா நாம் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வது கண்ணின் மூலமாகத்தான். ஐம்புலன்களில் கண்ணே சிறந்தது. கண் பார்த்ததை மனம் விரும்புகிறது. பல விஷயங்களைப் பேச்சைவிடக் கண்ணே மிகுதியும் உணர்த்துகிறது. கண்ணைப் போலவே நாக்கைப் பற்றியும் சர்வக்ஞர் கூறுகிறார். நாம் பேசும் பேச்சு அடுத்தவர் மனதில் புண் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். நாக்கைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்தால் நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிட்டும். கத்தியால் ஆனபுண் மாயுமே சுற்றியாடும் நாவினால் ஆனபுண் - மாயுமோ சாகும் நாள்வரையும் சர்வக்ஞா இது திருவள்ளுவர் சுட்டும் "தீயினாற் சுட்ட புண்' எனும் குறளை நினைவுபடுத்துகிறது. உடலெனும் புற்றிற்கு நாக்கே பாம்பாகும் கடும் கோபமெனும் விடமேற தன்மை கெட்டு மடிய நேரிடும்காண் சர்வக்ஞா வாழ்க்கையைப் பற்றி சர்வக்ஞர் கூறுகின்ற பல விஷயங்கள் சுவையாகவும் மனதில் நிற்கும்படியும் உள்ளன. கடவுள், கோயில், பக்தி, குரு முதலிய விஷயங்களைச் சொல்கிறபொழுது சர்வக்ஞருடைய கற்பனை தெளிவாக விளங்குகிறது. வாழ்க்கையில் கிட்டும் அனுபவம்தான் எல்லா நீதிகளையும்விட மிகப்பெரியது என்பது அவருடைய கருத்தாக உள்ளது. (கட்டுரையாளர்: சென்னைப் பல்கலைக் கழக கன்னட துறைத் தலைவர்)
எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment