இடைவிடாமல் புலம்பிக்கொண்டிருந்தார் அப்பா. ""ஏண்டா மாரிமுத்து இப்படி நடக்குது?'' எதைப் பற்றிய பேச்சாக இருந்தாலும் இறுதியில் அப்பாவின் புலம்பல் இப்படியாகவே இருக்கிறது. சுப்பண்ணன்கூட இதுபற்றித்தான் நேற்று இவனிடம் விசாரித்தார். தோட்டத்தில் வேலை செய்கிற போதும் இப்படித்தான் புலம்புகிறாராம். ""உன்னோட படிப்பு, கல்யாணம், வேலை... இது பற்றிக்கூட எதுவும் இத்தனை நாள் பேசினதேயில்லைடா... இவரா இப்படின்னு ஆச்சரியமா இருக்கு... வயசுக்கு வந்த பொண்ணு வீட்ல காத்திட்டிருக்கா அதப் பத்தியும் கவலையில்லே...'' அம்மாவும் இதைத்தான் கூறுகிறாள். அப்பாவுக்கும் அரசியலுக்கும்கூட அப்படியொன்றும் நெருங்கிய பந்தம் ஒன்றுமில்லை. இவரோடு இருப்பவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினர்கள்தான். சாதிச் சங்கங்கள்கூட அலர்ஜிதான். அது பற்றியும் அம்மா அலுத்துக் கொள்வாள். ""எல்லா மனுசங்களும்தான், திண்ணை, பாலம்னு உக்காந்து நாலு வார்த்தை பேசுதுங்க... நம்ம வூட்டுலயும்தான ஒரு ஆம்பிளை இருக்குதே.. எப்பப்பாரு வூடே கதின்னு கெடக்கு...'' அம்மாவின் பேச்சுக்கு வேணிக்காதான் பதிலடி கொடுப்பாள். ""ஊரு வம்பில்லாம இருக்காகளே... அதுக்கு கோயில் கட்டி கும்பிடணும்... அதது வீட்டுல ஆம்பிளைக வூடே அண்டறதில்லேனு புலம்பலா இருக்கு... நீங்க என்னக்கா இப்படிச் சொல்றீங்க...'' ""ஆமா... உங்க அண்ணனை நீதான் மெச்சிக்கணும்'' ""நம்ம பானு புருஷன் கத தெரியும்தானே... அந்தக் காட்டுப் பண்ணாடி புள்ளக்கிட்டே வம்பு பண்ணி பெரும் ரகளையாப் போச்சு.... டேசன் வரை போயிருச்சாம்...'' ""ஊரு கதை நமக்கெதுக்கு...?'' ""இல்லேக்கா... அண்ணனைப் பத்தி நீங்க சொன்னதால நானும் சொன்னேன். நேத்து பேப்பர் படிச்சிட்டு இருந்தவரு பொலபொலன்னு கண்ணீர் வுட ஆரம்பிச்சிட்டாரு... ஏக்கா தெரிஞ்சவங்க யாராச்சும் ஏக்செண்ட் ஆயிட்டாங்களா..?'' ""இல்லேடி.. லெங்கா தேசத்திலே நம்மள மாதிரி தமிழ் ஆளுங்க இருக்காங்களாம்... அவங்களை அங்க இருக்கிற சில பேரு கொல்றாங்களாம்... அதுக்குத்தான் இப்படி அழுதிருக்காரு...'' ""அவங்க நமக்கென்ன தாயா? புள்ளையா? இந்த மனுசன் இப்படியும் அழுவாரா?'' நேற்று அருக்காணி அக்கா போனவுடன் அம்மாவும் இது பற்றித்தான் இவனிடம் நச்சரித்தனர். ""எலக்சன்ல ஜெயிக்கிறதும் சம்பாரிக்கறதுதான் இங்கிருக்கிறவங்களுக்கு பெரிசா போச்சு. நம்மாளுக அடிச்சு கொல்றதைப் பத்தி நம்ம மக்க ஆரும் பேசமாட்டேங்கிறாங்க. சில பேரும்தான் பேசுறாங்களாம்... அதுவும் எலக்சனுக்காகப் பேசுறதாகவும் சொல்றாங்க. எதை நம்பறதும்னும் தெரியல...'' ""ஏம்பா... நீங்க மூணாவதோ, நாலவதோதான படிச்சிருக்கிறதா சொன்னீங்க... அது கூட உங்களுக்கு ஞாபகம் இல்லே. பேப்பரே எழுத்துக்கூட்டித்தான் படிக்கிறீங்க. உங்களுக்கு இலங்கைப் பிரச்னை பத்தி என்ன தெரியும்? நீங்க இப்படி புலம்பி என்ன ஆகப் போகுது? சும்மா இருங்க. வீணா உடம்பக் கெடுக்காதீங்க...'' ""ஏலேய்... ரோசம் கெட்ட பயலே. வெட்கங்கெட்ட மூதி... உங்க ஆத்தால, உங்கப்பனை பக்கத்தூட்டுக்காரன் வந்து அடிச்சுப் போட்டுட்டு போனாலும் இப்படித்தான் பேசுவியாக்கும். உங்க அக்காளை மானக்கேடு படுத்தினா அப்பவும் வேடிக்கை பாத்துக்கிட்டே இருப்பாயோ? சும்மா கெடைக்கிற அரிசியைத் தின்னு தின்னு ஊரு சனங்கதான் ரோசம் கெட்டு பேச்சுன்னா நீயுமாடா... போடா போய் கவர்மென்ட்டை நக்கிப் பிழைடா. நீ கவர்மென்ட் வேலைக்காரன் அப்படித்தான் பேசுவே'' அதிர்ந்துவிட்டான் மாரிமுத்து. அப்பாவின் சொற்களே அல்ல இவை. அடி மனசில் வெந்து புலம்பிக் கொண்டிருக்கிற சொற்கள் இவை. எப்படியோ பிறீடுகிறது. ""டேய்... இங்க வாடா'' மறுபடியும் எதற்குக் கூப்பிடுகிறாரென்று அச்சமாயிருந்தது. ""லெங்கை எந்தப் பக்கம் இருக்குனுகூட எனக்குத் தெரியாதுடா. ஆனா நம்ம சனங்க கொத்து கொத்தா சாகறாங்கன்னு அன்னாடும் சொல்றாங்க.. நாம எதுவுமே செய்ய முடியாதாடா...'' ""அதெல்லாம் அரசாங்கம் பாத்துக்கும்... நீங்க அமைதியா இருங்க. அக்காவை அடுத்த வாரம் பொண்ணு பாக்க ஆனைமலைக்காரங்க வரப் போறாங்களாம். அதுக்கு மாமா வூட்டுக்கு நேர்ல போய் சொல்லிட்டு வரணும். நீங்க கொஞ்சம் தயாரா இருங்க...'' ""அரசாங்கம்ங்கிறது நாமதான்டா... அன்னிக்கு நம்ம ராசு தோட்டத்துல பக்கத்து ஊர்க்காரங்க யாருக்கும் தெரியாத செத்த கோழிகளை வீசிட்டுப் போயிட்டாங்க... ஆருன்னு விசாரிச்சு கண்டுபிடிச்சு, ராசு தட்டிக் கேட்டான். கேட்ட பாவத்துக்கு ராசைப் புடிச்சு அடிச்சுப் போட்டாங்க. நம்ம பிரசண்டு சும்மாவா இருந்தாரு. ஊரு சனங்களையெல்லாம் தெரட்டிட்டு நாயம் கேட்கப் போகலையா... இங்க எந்த அரசாங்கத்தை எதிர்பார்த்துட்டு இருந்தோம்..'' ""அது வேற... இது வேறப்பா... இப்படி நீங்க பேசுறத கேட்டால அவங்க ஆளுன்னு போலீஸ் புடிச்சிட்டு போயிடும்'' ""ஏண்டா ஒரு மனுசனோட கஸ்டத்தைப பத்தி இன்னொரு மனுசன் பொறுக்க முடியாம அங்கலாய்ப்பட்டா அது தப்பா? மனுஷத் தன்மை இல்லாதவங்கதான் இப்படியெல்லாம் பேசுவாங்க... அவங்களுக்கு வந்த சாவு. நமக்கு வர எவ்வளவு நேரமாகும். படிச்சவனுங்க இதயெல்லாம் யோசிக்க மாட்டானுங்க போலிருக்கு'' அப்பாவின் கேள்விகளுக்கு தன்னிடம் எந்தப் பதிலுமே இல்லையென்பதை உணர்ந்தபோது அவமானமாக இருப்பதோடு, கையாலாகத்தனமும் சுட்டது. அப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறார் என்பதே ஆச்சரியம். வியப்பு! நேற்றைக்கு முந்தைய தினம் குழந்தைகளைப் பற்றி அம்மாவிடம் ஏதோ புலம்பிக் கொண்டிருந்தார். கையில் செய்தித்தாள். ""இங்க பாரு காவேரி. இந்தக் கொடுமையை ஸ்கூலு படிக்கிற குழந்தைக மேல குண்டு போடுறாங்க. பிஞ்சுக் குழந்தைக அம்மான்னு கதறுச்சோ... அய்யோன்னு கதறுச்சோ... மனசு கேக்க மாட்டேங்குது... நெஞ்சே அடைச்சிட்ட மாதிரி இருக்குது.'' அன்றிரவு அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்திருந்தது. வாடகை காரில் பொள்ளாச்சிக்கு கொண்டு போக வேண்டியதாயிற்று. போகிறவரை தவிப்பாய் இருந்தது. அப்பாவின் முகம் பரிதாபகரமானதாகவும் எதையோ இழந்ததின் துயரமாகவும் இருந்தது. உயிருக்கு ஆபத்தில்லை என்றார்கள். ஆனால் மனதில் எந்தக் குழப்பமும் இருக்கக்கூடாது என்றார்கள். அதிர்ச்சி தரக்கூடிய செய்தி எதையும் பக்குவமாகத்தான் சொல்ல வேண்டுமாம்! மாமா, அத்தை, சித்தப்பா, சித்தியென்று வீடு நிறைந்துவிட்டது. எல்லோரும் இவருக்காக காத்திருக்க, இவர் தொலைக்காட்சியில் இடைவிடாமல் சேனலை மாற்றிக்கொண்டிருந்தார். ""கொஞ்சம் கொஞ்சமா ராணுவம் நெருங்குதாம்... நம்ம நாட்டை ஆள்றவங்க தலையிட்டா போர் நின்னு போயிடுமாம்... டீக்கடையில பேசிட்டாங்க... நாம ஏதாவது செஞ்சாகணும்...'' ""சித்த சும்மாயிருங்க... இப்படி தொணதொணன்னு பேசிட்டு இருந்தா நோவு மறுபடியும் வந்திராதா... யாரு எப்படிப் போனா... நமக்கென்ன... நம்ம கையும் காலும் நல்லாருந்தாதான் நமக்காகும்... தலைக்கு மேலே பொண்ணு காரியமிருக்கு... பையன் ஒருத்தனா என்ன பண்ணமுடியும்? அத பத்தி ஓசிக்காம, அங்க செத்தாக... இங்க செத்தாங்கன்னு...'' அம்மா பேச்சை முடிப்பதற்குள் அப்பாவுக்கு அப்படியொரு ஆத்திரம் வந்திருந்தது. கையிலிருந்த ரிமோட்டை ஓங்கி சுவற்றில் அடித்த அடியில் அது நொறுங்கி விழுந்தது. பேசாமல் போய் படுத்துக் கொண்டார். விடிந்ததும், எப்போதும் போகிற டீக்கடைக்குப் போனார். பதறியபடி அதே வேகத்தில் வந்தார். ""இனி அங்க நம்ம ஜனங்க இருக்க வாய்ப்பே இல்லையாம்'' கதறிக் கதறி அழுதார். அம்மாவும், அக்காவும் திகைத்துப் போயிருந்தார்கள். எப்படித் தேற்றுவது. எப்படி ஆறுதல் சொல்வது? புதிராக இருந்தது. எரிச்சலாகவும் இருந்தது. ""ஏலேய் தண்ணிக்கு தீப்போடு... குளிக்கணும்...'' மடமடவென்று வெளியேறினார். அரை மணி நேரத்தில் அப்பா திரும்பியிருந்தார். அவரின் தோற்றம் பார்த்ததும், அதிர்ச்சியும் திகைப்பாகவும் இருந்தது. மொட்டையடித்திருந்தார். ""அத்தனை சாவுக்கும் எதிரா... என்னை மாதிரி ஆளுங்க எதுவும் செய்ய முடியல... செய்யவும் முடியாதுன்னு தெரியும்... அதாண்டா... இப்படி...'' போனமாதம்தான் தாத்தாவின் மறைவிற்கு மொட்டையடித்திருந்தார் அப்பா. இப்போதும் அதே மொட்டை!
கருத்துக்கள்
பிற பரிசுகள் கதைகள் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் மனித நேய உணர்வு எல்லாரிடமும் இருப்பதை இயற்கையாக 'அப்பா' மூலம் விளக்கிய அம்சகோபால் முருகனுக்கு முதல் பரிசே வழங்கலாம். எண்ணற்ற மனிதர்களின் உள்ளக் கிடக்கையை எளிமையாகத் தெரிவித்துள்ளார். இக்கதையை வெளியிட்டதன் மூலம் தினமணிக்கும் பெருமை கிடைததுள்ளது. நாடெங்கும் இத்தகைய 'அப்பாக்கள்' இருப்பினும் பதவி வெறியும் பண வெறியும் அதிகார வெறியும் உள்ளவர்கள் உணரவில்லையே! காலம் உணர்த்தும் முன் எத்தனை உயிர்கள் இன்னும் அழியுமோ? வருத்தத்துடன் இலககுவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/27/2009 3:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
8/27/2009 3:34:00 PM