அது ஒரு மாலைப்பொழுது. சாதாரண மாலைப்பொழுதா? அல்ல...அல்ல... மயக்கும் மாலைப்பொழுது. அப்பொழுது கிள்ளியென்னும் சோழ மன்னன் உலா வருகிறான். சோழனைப் பார்க்கச் சென்ற தோழியர் சிலர் அவனுடைய தோளின் அழகைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். எப்படி? ராமபிரானின் தோள் அழகைக் கம்பன் வர்ணிப்பானே அப்படி.""தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்னதாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதேவாள் கொண்ட கண்ணார் யாரோ வடிவினை முடியக் கண்டார்ஊழ் கொண்ட சமயத்தன் னானுருவு கண்டாரை யொத்தார்''(கம்-உலாவியர் படலம்-பா.1081) மன்னனின் தோள் அழகைப் பற்றிப் பிறர்பேசிக்கொண்டிருந்ததை ஒரு பெண் கேள்வியுற்றாள். அதுமுதல் அவனைக் காணாமலேயே அவன்மீது காதலும் கொண்டாள். அவளுடைய கண் அந்தக் கிள்ளியின் தோள்களைப் பார்க்க வேண்டுமென்ற தாங்கொணா ஆசையைக் கொண்டிருந்தது. அவள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. மீண்டும் சோழன் உலா வருகிறான். ஒவ்வொரு தெருவுக்கும் போய் பின் அரண்மனை திரும்ப நள்ளிரவு ஆகிவிடும். ஆசைப்பட்டவள் இருக்கின்ற வீட்டுக்கு அருகிலும் வருகிறான். பொழுதும் யாமம் ஆகிப்போகிறது. அவள் வெளியே வந்து அவனைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாள். மனமோ தெருவாசற் கதவினடிக்கு வந்தது. உடனே நாணம் வந்து மனத்தைப் பிடித்துப் பின்னாலேயே இழுக்கத் தொடங்குகிறது. ஆனாலும் கிள்ளியின் மேல் வைத்த காதல் நலன் வந்து மனத்தை நெகிழ்வித்து முன்னே செல்லும்படித் தூண்டுகிறது. மனம் மட்டுமா? அவள் கண்களும் கூட எப்படியாவது காமருதோட்கிள்ளியைக் காட்டு என்று அடம் பிடிக்கிறது. பாவம் அவள் என்ன செய்வாள்? மனம் இங்கும் அங்குமாக ஒருதலைப்படாமல் அலைகிறது. ஆசை முன்னே தள்ள, நாணம் பின்னே தள்ள இருதலைக் கொள்ளியின் உள்ளே அகப்பட்ட எறும்பு போலத் தவிக்கிறாள். கைக்கிளையாய் (ஒரு தலைக்காதல்), அலைபாயும் அவளின் மன உணர்ச்சிகளை முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒன்று அழகாக முன்னெடுத்து வைக்கிறது.""நாணொருபால் வாங்க நலனொருபால் உண்ணெகிழ்ப்பக்காமருதோட் கிள்ளிக்கென கண் கவற்ற - யாமத்திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்திரிதரும் பேருமென் னெஞ்சு''(பா-100) அகநானூற்றுப் பாடல் ஒன்றும் இக்கருத்தை வழிமொழிகிறது. பனிக்காலம். பனிக்காலத்தில் பயற்றஞ் செடிகளில் பிஞ்சுகள் கொத்துக்கொத்தாய் காய்த்து விரிகின்றன. ஒரு பொருளைப் பற்றியிருக்கின்ற விரல்கள் அதை விடுத்துப் பின்பு பிரிவதைப்போல பயற்றம் பிஞ்சுகளெல்லாம் கொத்திலிருந்து சிறிது கூன்நிமிர்ந்து விளங்குகின்றன. இந்தப் பனிக்காலத்தில்தான் தலைவன் பொருள் தேடும் முயற்சிக்காக தலைவியைப் பிரிந்து தேரேறிப் போகிறான். தேர்ப்பாகன் தேரை மிக விரைவாகச் செலுத்துகிறான். மேலாடை விழுந்தது எடு என்பதற்குள் நாலாறு காதம் சென்றது நளனின் தேர். அதுபோல, தேர் செல்லுகின்ற விரைவினாலே, நறுமணம் கமழ்கின்ற காடு விறுவிறு என்று பின்னிட்டு ஓடுகிறது. இங்ஙனம் தேர் போகும்போது தேரிலிருக்கின்ற தலைவன் பலப்பல எண்ணுகிறான். பொருள் தேட வேண்டுமே என்று ஆண்மை அவன் நெஞ்சைப் பற்றி முன்னே இழுக்கிறது. ஆனால், தலைவியினிடம் வைத்திருக்கின்ற காதல் வந்து, போகாதே, வா வீட்டுக்கு என்று தடுக்கிறது. இந்த நிலையில் அவன் மனம் பொருளா? தலைவியா? என ஊசலாடத் தொடங்குகிறது. மனமும் ஆண்மையும், போவதும் வருவதுமாக அலைகின்றன. அவனுடைய உணர்ச்சியை நரைமுடி நெட்டையார் என்ற நல்லிசைப் புலவர் நவின்ற முறையாவது,""வீங்குவிசைப் பணித்த விரைபரி நெடுந்தேர்நோன்கதிர் சுமந்த ஆழியாழ் மருங்கிற்பாம்பென முடுகுநீர் ஓடக் கூம்பிப்பற்றுவிடு விரலிற் பயறுகாய் ஊழ்ப்பஅற்சிரம் நின்றாற் பொழுதே முற்படஆழ்விழைக் கெழுந்த அசைவி லுள்ளத்துஆண்மை வாங்கக் காமந் தட்பக்சுவைபடு நெஞ்சங் கட்க ணகையஇருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்திஒருதலைப்படாஅ உறவிப் போன்றனநோங்கொல் அளியன் தானே யாக்கைக்குஉயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்வாழ்த லன்ன காதல்சால லன்ன பிரிவரி யோளே''(அக.339) தலைவனுடைய மனம் படுகின்ற தடுமாற்றத்தை ஆண்மை வாங்க என்றும், தலைவி படும் பாட்டை நாணொருபால் வாங்க என்றும், காமந் தட்ப என்பதையும் நலனொருபால் உள்நெகிழ்ப்ப என்பதையும் ஒப்பிட்டு உணரலாம். இவ்வாறான இனிமையும், உணர்ச்சியும், மயக்கமும், தயக்கமும் காதற் குணங்களோ?
எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment