வணக்கம் ...!!!
என் மனப்பதிவும் ஒலிப்பதிவும் இது.பாருங்கள்.கேளுங்கள்.
நன்றி
தமிழ்ப்பொடியன்.
















தமிழன் தலை நிமிர்ந்து நின்றான்.
இமயம் முதல் குமரி வரை கொடிகட்டிப்பறந்தான்.
பார்த்தவனுக்கும் கப்பல் ஏறி வந்தவனுக்கும் வயிறு பற்றி எரிந்தது.
கட்டபொம்மன் கைகட்டி நிற்காது தலைநிமிர்ந்து நின்றான்.
கயவர்கள் சிலர் துரோகிகள் ஆயினர்.
கூட இருந்து குழி பறித்தனர்.
அன்று தொடங்கிய துன்பம் இன்றும் தமிழனுக்கு தொடர்கதையானது.


கரிகாலன் காலத்தில் மீண்டும் தலை நிமிர்ந்தான் தமிழன்.
சிங்களவனுக்கும் பொறுக்கவில்லை.வந்தவனுக்கும் பொறுக்கவில்லை.
விடுதலை வேட்கையின் வெம்மையை தாங்கமுடியாமால்
வீணர்கள் சிலர் "பயங்கரவாதம்" என பச்சைகுத்தினர்.
வல்லாதிக்க சண்டியர்கள் வஞ்சகம் செய்து வீழ்த்தி விட்டனர்.
மண்ணைமட்டும் வெற்றி கொள்ளலாம்.
மனங்களையும் மன உறுதியையும் மழுங்கடிக்க எவனாலும் இயலாது.
இது தமிழனின் தனிக்குணம்.


மண்ணுக்குள் விதையான மறவர்களின் கனவுகளை மறவோம்.
காற்றோடு கலந்திருக்கும் கருமணிகளை மறவோம்.
உறவுகள் உயிர்கொடுத்து வழர்த்த உன்னத இலட்சியம் மறவோம்.
முட்கம்பி வேலிக்குப் பின் உறங்கும் உறவுகளையும் மறவோம்.
மொத்தத்தில் தமிழனின் தாகத்தையும் மறவோம்.


இலட்சிய நெருப்பு ஒவ்வொரு தமிழனின் மனசிலும் எரிகிறது.
அது எப்போதும் அணையா திருவண்ணாமலை ஜோதி.


ஆனால் காலம் நம்மை வஞ்சித்துவிட்டது.
கயவர்கள் சிலர் நம்மை ஏமாற்றிவிட்டார்கள்.
சர்வதேச சண்டியர்கள் சிலர் சதி செய்துவிட்டார்கள்.
மொத்தத்தில் தமிழனின் முதுகில் குத்திவிட்டார்கள்.


மேற்கு வானில் விழுவது கிழக்கில் எழும்.
எழுவதும் விழுவதும் விழுந்துஎழுவதும் எழுந்துவிழுவதும் இயற்கை.
எழுந்து கொண்டே போவது ஆச்சரியம்.!
விழுந்து கொண்டே கிடப்பது அவமானம்.!
தெளிவாக இருப்பது குழம்புவதும்,
குழம்பியது பின் தெளிவதும் இயற்கை.


இறந்தகாலம் நிகழ்காலத்தின் வழிகாட்டி.!
நிகழ்காலம் எதிர்காலத்தின் தீர்க்கதரிசனம்.!


எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமெனில் நிகழ்காலம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும்.
இறந்தகாலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.


"விடிவுகள்" பிறக்கவேண்டுமெனில் விரைவினில் "முடிவுகள்" கருத்தரிக்கவேண்டும்.
"தெளிவுகள்" வேண்டுமெனில் விரைவினில் குழப்பங்கள் கூண்டோடு கொழுத்தப்படவேண்டும்.


நம்பிக்கையின் ஒளிக்கீற்று தெரிகிறது.
அது சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும்.
சோதனைகளையும் வேதனைகளையும் சாதனைகளாக்குவோம்.
இலட்சியங்களை உயரத்தில் வைப்போம்-அப்போதுதான்
உயர்ந்து நிமிர்ந்து நிற்கமுடியும்.


சிலருக்கு ஒற்றுமை பற்றி பேசவே பிடிக்கும்.
ஒன்றுபட்டால் பிடிக்காது.
சிலர் பேசுவதை விட சாதித்து காட்டுவார்கள்.
ஒற்றுமை இதற்காகத்தானே இவ்வளவு நாளும் கஸ்ரப்பட்டோம்.
ஒளிரவேண்டும் நம்பிக்கையின் ஒளிக்கீற்று.
அதுதான் அக்கினிக்குஞ்சு.
பீனிக்ஸ் பறவை.
சாம்பலில் இருந்து சரித்திரம் எழுதுவோம்.


கடந்து வந்த பாதையில் வடுக்கள் இருந்தால்-அவற்றை
செல்லும் இந்தப்பாதையில் படிக்கட்டுகள் ஆக்குவோம்.
துன்பங்களை தாங்கும் தூண்களாக ஆக்குவோம்.


ஆடுபவனை ஆடியும்,பாடுகிறவனை பாடியும்
ஏன் நடிப்பவனுக்கு நடித்தும் கறப்போம்.
சர்வதேச சண்டியர்கள் பொய்சொன்னார்கள்,ஏமாற்றினார்கள்,நம்பிக்கை துரோகம் செய்தார்கள்.
அதனால் தமிழர்களை வென்றதாய் சொல்கிறார்கள்.
வெல்வதே குறிக்கோள் என கொண்டோருக்கு எம் "கூக்குரல்" கேட்கவேயில்லை.
தமிழனின் "விடுதலைத்தாகம்" அவர்களுக்கு விளங்கவேயில்லை.


ஆதலால் நாம் மாறுவோம்.மாற்றுவோம்.
கொண்ட இலட்சியம் மாறாமல்,கொள்கைகளை மாற்றுவதில் தப்பேதும் இல்லை.


செல்லும் பாதையும் ஒன்றுதான்,பயணிகளும் ஒன்றுதான் -ஆனால்
இப்போது நடந்து செல்லப்போகிறோம்.
அப்போதுதான் வளைந்தும் நெளிந்தும் செல்லலாம்.
ஒற்றையடிப்பாதைகள் ஊடே இலகுவாய் புகுந்து செல்லலாம்.


போராட்டத்தின் பரிமாணங்கள் மாறவேண்டும்-இது
தம்பியின் வார்த்தை,கரிகாலனின்கனவு.
கனவுகள் மெய்ப்பட நாம் கைகோர்த்து நிற்கவேண்டும்.
விடிவுகள் பிறக்க விரைந்து நடக்க வேண்டும்.
ஏனெனில் நாம் தூங்குவதற்கு முன்னர்
அதிக தூரம் செல்லவேண்டும்.




-தமிழ்ப்பொடியன்-
18.08.2009


Report this post

Comments

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue