புலம் எழுதிய புதிய பாடம்
எல்லாம் முடிந்தது என்ற வார்த்தை
சிலுவை மரணத்தின் சிரசின் குரல்
மக்களே எனக்காக அழவேண்டாம்
உங்கள் மக்களுக்காக அழுங்கள்
நியாயத் தீர்ப்புகள் பரலோகத்திலல்ல
நீதிமான்களால் இங்கேயே தீர்க்கப்படும்

தமிழீழ நாட்டின் மணித்தமிழே!
பிறந்தநாளும் இறந்தநாளும்
தெரியாமல் மாண்டு போனீர்களே
முகவரியும் முதலுதவியும் இல்லாமல்
பாடையுமின்றிப் பற்றி எரிந்தீர்களே
நீங்கள் கொலை செய்யப்பட்டீர்கள்
நாங்கள் நீதியின்முன் நிறுத்தப்பட்டுள்ளோம்

நீங்கள் வெடிகுண்டுகளால் மேயப்பட்டீர்கள்
நாங்கள் ஏக்கத்தில் வீங்கிப்போனோம்
எங்கள் எலும்புகள் கழண்டு போனது
தாக்கத்தில் தூக்கம் இழந்து தவிக்கின்றோம்
இதயம் மெழுகுபோல் உருகிடும்
தேக்கமாய் நின்றாடி வாழ்கின்றோம்

உள்ளுறுப்புகள் உணர்வு அற்றுப்போனது
உங்களைத்தேடி தேடி துயருறுகின்றோம்
சிங்களத்துப் பயங்கரவாத பயங்கரத்தால்
வேட்டையாடப்பட்ட கோரண்யம் கண்டு
யாரிட்ட சாபமென தேம்புகின்றோம்
வாய்கள் வறண்டு மேலண்ணத்தோடு
நாவுகள் ஒட்டிக்கிடக்கப் புலம்புகின்றோம்

உங்களை ஈமக்கனல் செலுத்தி
நாங்கள் கல்லறையில் புதைக்கவில்லை
உங்கள் வாழ்வை எங்கள் வாழ்வுக்காய்
எங்கள் மண்ணில் நட்டவர்களே
பாரதமாதாவின் அசோக சக்கரத்தில்
கருவறுக்கப்பட்ட மனித தர்மமே
உங்களின் தியாகம் ஓடிய திரையில்
எங்களின் சோகம் பெருகுகின்றது

போதி மாதவர் பயங்கரத்தில்
புத்தனின் காவியுடை கறைபடிந்திட
உங்களின் வாழ்வை முடிய மண்ணில்
எங்களின் காதல் கலக்கிறது

கவசவாகனச் சக்கரத்தில்
நசுங்கி வீங்கிவெடித்த தமிழனை
நாங்கள் இதயத்திலிருத்திஉதயத்தைக்
காணும் சத்தியம் செய்கின்றோம்

கற்பினி வயிற்றைக் கிழித்த குண்டில்
வெட்டுண்டு பிறந்த சிசுவைக் கண்டு
இனியொரு முகவரி முகாரியாகாது
இளையோரின் புரட்சி எழுகின்றது

இரத்தப் பற்கள் நிறைந்த ஓநாய்கள்
சுத்தக் கற்பை சூறையாடக்கண்டு
புலத்துத் தமிழன் கண்ணீரில் மூழ்காது
கடமையை எரிமலையாய் எழுப்பினான்

தாயின் கறுத்த காம்பைக் கவ்வியபடி
வெடித்துச் சிதறிய குழந்தையைக் கண்டு
உங்களின் இரத்தம் ஓடிய நதியில்
எங்களின் கண்ணீர் குமுறுகின்றது

உங்களின் மூச்சு முடிந்ததென்று
எங்களின் பேச்சுக் கிடையாது
உங்களின் சாவில் நின்றாடித்தான்
எங்களின் புரட்சி எழுகிறது

உங்களின் சிம்மாசனம் வீற்றிருந்துதான்
எங்களின் சமர்கள் நடக்கின்றது
உங்களின் கனவு எங்களின் நினைவு
புதிய புத்தகத்தை திறந்து கொள்ளும்
பிணங்களைச் சுமந்தமண் புறம்கண்டு
புலத்துத் தமிழன் அகம் அறம்பாடும்
இனத்தை அழித்த பயங்கரத்தை
வேரறுக்கப் புறப்பட்ட புதிய கீதம்
புலத்துத் தமிழனிடம் புதியகோசமாய்
பவித்திரமடைந்து வருகின்றது

சோகத்தைப் பாடக் கற்காத கண்கள்
இளையோரின் புரட்சிக் கீதமாய் எழுகின்றது
புத்தகத்தைத் திறந்து எழுப்பும் பாடம்
எழுதிய ஏட்டின் விடியலின் தரிசனம்!







மா.கி.கிறிஸ்ரியன்
(பிரான்ஸ்)
இணைப்பு: Nila
24 Aug 2009

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue