முகங்கள்: 65 பெண்கள் எழுதும் ஒரு புத்தகம்!



சவுதி அரேபியாவில் ரியாத் நகரம். அங்கேயுள்ள எட்டு மாடிக் கட்டிடத்தில் ஒன்று, அல்மார்ஜி பில்டிங். அது 1998 ஆம் ஆண்டு. எங்கும் போர் மேகங்கள் சூழ்ந்த காலம். ஸ்கட் ஏவுகணைகள் குறிபார்த்து ஏவப்பட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கட்டிடத்தில் நான்காவது மாடியில் எந்த நேரத்தில் ஸ்கட் தாக்குதல் நடக்குமோ என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தது ஒரு தமிழ்க் குடும்பம். அந்த அனுபவம் பின்னர் ஒரு புத்தகமாக வெளிவந்தது "வளைகுடாப் போரில் நான்' என்ற பெயரில். அதை எழுதியவர்: விஜயலட்சுமி மாசிலாமணி. வாழ்வின் அனுபவங்களை உயிரோட்டமான நடையில் எழுதும் விஜயலட்சுமி மாசிலாமணி இதுவரை வெளியிட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை 12. மிக வித்தியாசமான முறையில் பெண்கள் அமைப்பு ஒன்றையும் சென்னை மடிப்பாக்கம் சதாசிவ நகரில் "சூரியத் தென்றல்' என்ற பெயரில் அவர் நடத்தி வருகிறார். "சூரியத் தென்றலின்' நோக்கம், செயல்பாடுகளைப் பற்றி அவர் நம்மிடம் பேசினார். * சென்னையில் உள்ள நீங்கள் சவுதி அரேபியாவில் நடந்த போர் அனுபவங்களை எழுதியது எப்படி?நான் பிறந்தது பழநி. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. படித்துவிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற மேலவை மற்றும் பேரவைத் துறைகளில் அரசு அலுவலராக 11 ஆண்டுகள் வேலை செய்தேன். கணவர் டாக்டர் வ.மாசிலாமணி ஆராய்ச்சியாளர். இயற்பியல் பேராசிரியர். பணி காரணமாக அவர் சவுதி அரேபியாவில் இருக்கிறார். நானும் அதனால் செüதி அரேபியாவுக்குச் சென்றேன். சென்று கொண்டிருக்கிறேன். அப்போது சதாம் உசேன் ஸ்கட் ஏவுகணைகளை ஏவிவிட்டுக் கொண்டிருந்தார். அந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உணர்வலைகளே பின்னர் புத்தகமாக ஆனது. அதைப் படித்த எழுத்தாளர் சிவசங்கரி, "ரொம்ப ஆத்மார்த்தமாக இருக்கிறது' என்று பாராட்டினார். வேறு என்ன எழுதியிருக்கிறீர்கள்? அந்தப் புத்தகம் தவிர சுயமுன்னேற்ற நூல்கள், நாவல், கட்டுரைத் தொகுப்பு என இதுவரை 12 புத்தகங்களை எழுதியிருக்கிறேன். என்னுடைய முதல் புத்தகம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்தது. சமீபத்தில் "அருநெல்லிக்காய்' என்ற புத்தகம் வெளிவந்தது. பல தமிழ் இதழ்களில் எழுதி வருகிறேன். பொதுவாக என்னுடைய கதைகள் என்னைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே இருக்கும். குறிப்பாக பெண்களின் பிரச்னைகளை அதிகம் எழுதியிருக்கிறேன். என்னுடைய சிறுகதை "அந்த ராத்திரிக்குத் தூக்கமில்லை'யைப் பலரும் பாராட்டினர். அதில் ஒரு பெண்ணுக்கு மார்பில் கட்டி வந்துவிடும். அது என்ன சாதாரண கட்டியா? மார்பகப் புற்றுநோய்க் கட்டியா? என்பதை அறிந்து கொள்ள அவள் டெஸ்ட் எடுத்துவிட்டு வந்திருப்பாள். ரிசல்ட் வந்திருக்காது. புற்றுநோய்க் கட்டியாக அது இருக்குமோ என்ற அவளுடைய பயமும், மன உணர்வுகளையும் சித்திரிக்கும் கதைதான் அது. மகளிருக்கான அமைப்பைத் தொடங்கியது எப்படி? பெண்களின் வாழ்க்கையில் நாற்பது வயதாகிவிட்டால் ஒரு திருப்பம் ஏற்பட்டுவிடும். அதுவரை அவர்கள் உலகம் கணவர், குழந்தைகள், வீடு என்று கடிவாளம் போட்டதுபோல இருக்கும். 40 வயது நெருங்கும்போது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி அவர்களுடைய தேவையை அவர்களே கவனித்துக் கொள்வார்கள். அதுவரை குடும்பம் என்ற எல்லைக்குள் உழன்று கொண்டு இருந்த பெண் - அதுவரை தன்னைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்த பெண் - தன்னைப் பற்றி முதன்முறையாக யோசிக்க ஆரம்பிக்கிறாள். தான் கல்லூரியில் படிக்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம். அந்தச் சந்தோஷம் எல்லாம் எங்கே போனது? நாம் எதைத் தொலைத்துவிட்டு நிற்கிறோம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பிக்கிறாள். அவள் சிறுவயதில் கற்றவை; வளர்த்துக் கொண்ட திறமைகள் எல்லாம் காலப் போக்கில் மங்கி மறைந்து போயிருப்பதைப் பார்க்கிறாள். கடைசியில் அவளுக்கு மிஞ்சுவது மன இறுக்கம். இப்படிப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சவுதி அரேபியாவில் நான் இருந்த கட்டிடத்தில் உள்ள தமிழ்ப் பெண்களை எல்லாம் இணைத்து முதன்முதலில் "டேஃபடில்ஸ் கலைக் கூடம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினேன். பெண்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், ஒருவர் தனக்குத் தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்கவும் இந்த அமைப்பு உதவியது. அதுமட்டுமல்ல சுனாமியின்போதும், குஜராத் பூகம்பத்தின் போதும் எங்கள் அமைப்பின் மூலமாக நமது மக்களுக்கு துணிகள், பாத்திரங்கள் உட்பட எங்களால் முடிந்த அனைத்தையும் அங்கிருந்து திரட்டி அனுப்பினோம். அதன் பின்பு சென்னைக்கு வரும்போது இங்குள்ள பெண்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த அடிப்படையில் துவக்கப்பட்டதுதான் "சூரியத் தென்றல்' பெண்கள் அமைப்பு. * "சூரியத் தென்றல்' மூலமாக என்னவெல்லாம் செய்கிறீர்கள்? நான் முதலில் சொன்னபடி 40 வயதைக் கடந்த பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பகுதியில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து சூரியத் தென்றலை ஆரம்பித்தோம். முதலில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்தாம் சேர்ந்தனர். இப்போது எல்லா வயதினரும் இந்த அமைப்பில் உள்ளனர். இந்த அமைப்பில் உள்ள பெண்கள் தங்களுக்குத் தெரிந்ததை பிற பெண்களுக்குக் கற்றுத் தருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு பெண் மிக நன்றாக ஓவியம் தீட்டியிருக்கலாம். பாடியிருக்கலாம். கதை, கவிதை எழுதியிருக்கலாம். கோலம் போடுதலில் திறமை காட்டியிருக்கலாம். பிறருக்குத் தெரியாத புதுவிதமான சமையல்முறைகளைத் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் அவளுக்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின்னர் இந்தப் பழைய திறமைகள் மங்கி விடுகின்றன. அவளுடைய கவனம் வேறு திசையில் திரும்பிவிடுகிறது. அப்படிப்பட்ட பெண்களை இந்த அமைப்பில் சேர்க்கிறோம். ஓவியத் திறமையுள்ளவர்களை ஓவியம் வரையச் சொல்கிறோம். சமையல் கலையில் தேர்ச்சி உள்ளவர்களை அதைச் செய்யச் சொல்கிறோம். பெண்கள் தங்களுக்குள் புதைந்திருக்கும் திறமைகள் எவை என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். "உன்னையே நீ அறிவாய்' என்று அவர்களிடம் சொல்கிறோம். அவர்கள் வரைந்த ஓவியங்கள், செய்த உணவுப் பொருட்கள், ஸ்வீட்கள் போன்றவற்றைப் பிறர் தெரிந்து கொள்ளவும், வாங்கிப் பயன்படுத்தவும் லயன்ஸ் கிளப் மூலமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் ஸ்டால் ஏற்பாடு செய்து தந்தோம். இதன் மூலம் "சூரியத் தென்றல்' பெண்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பித்தன. பெண்களுக்கும் தன்னம்பிக்கை வளர்கிறது. அவர்களின் மன இறுக்கம் காணாமற் போகிறது. அதுமட்டுமல்ல, இந்தக் குழுவில் உள்ள 65 பெண்கள் சேர்ந்து எழுதிய ஒரு புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது. "உருளைக் கிழங்கில் 100 வகைச் சமையல்' என்ற அந்தப் புத்தகத்தில் உள்ள சமையல் குறிப்புகளை இந்த 65 பெண்களும் எழுதியிருக்கிறார்கள்.* வேறு என்ன பணிகள் செய்கிறீர்கள்?பெண்களுக்கு வரக் கூடிய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். குறிப்பாக மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை முகாமை எங்கள் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கீதா, டாக்டர் உமா ஆகியோரின் உதவியுடன் நடத்தினோம். சென்னைத் தொலைக்காட்சி பொதிகையில் "விழித்திடு பெண்ணே விழித்திடு' என்ற புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினோம்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue