ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா! – ‘இளவல்’ அரிகரன்
ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா!
பொய்களின் ஊர்வலங்கள்
அணிவகுக்க,
ஐந்தாண்டுக்கொருமுறை வரும்
திருவிழா…….
அரசியல்வாதிகளின் குழப்பங்களால்
அவ்வப்பொது
அதற்கு முன்பாகவே வரும்
பெருவிழா…….
ஒருநாள் மட்டுமே மகுடஞ்சூட்டி
ஒற்றைவிரலுக்கு மை பூசி
ஆண்டுமுழுமைக்கும் கரிபூசும்
அரசியல்வாதிகளின் பொதுவிழா…..
கால்பணத்திற்கு ஆசைப்பட்டு
வாக்குரிமையை லஞ்சப்பொருளாக்கி
கைப்பணம் முழுதுமிழக்கும்
வாக்காளர்தம் முட்டாள்நாள் விழா……
இலவசங்களில் ஏமாந்து
முழக்கங்களில் மயக்குற்று
பரவசத்தில் ஆழ்ந்துபோகும்
தேசத்திற்கான ஒருவிழா……..
அரங்கேற்றத்திலேயே
திருடுபோகும் மேடைகள்…..
முதுகுக்குப் பின்புறமே
முகத்துதிப் பூச்சூட்டல்கள்…..
காதிலே வாக்குறுதிப் பூச்சுற்றி
கன்னத்திலே சேற்றுச் சந்தனம்பூசி….
கைகளிலே விலங்குகள் பூட்டி…
கால்களுக்குச் சிறைபிடித்தாடுவர்.
தேர்தல் மக்களுக்கான
தேறுதலாகவும்,
நல்ல ஆட்சியாளர்க்கான
மாறுதலாகவும்,
துன்பமுற்றோர் துயர்தீர்க்கும்
ஆறுதலாகவும்,
நன்மைசேர்க்கும் நாட்டிற்கு வழி
கூறுதலாகவும்,
தேர்தலே …. தேர்தலே…வருகவே!
ஆர்வமுடன் வரவேற்போம் வருகவே!
‘இளவல்’ அரிகரன், மதுரை.
17.11.2015
Comments
Post a Comment